பிலிப்பைன்ஸ்: வெப்பமண்டல புயலால் சுமார் 200 பேர் பலி

படத்தின் காப்புரிமை Reuters

தெற்கு பிலிப்பைன்ஸில் வீசிய 'டெம்பின்' என்னும் வெப்பமண்டல புயலால் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டஜன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்த புயல் பிலிப்பைன்ஸின் மிதனாவோ தீவை தாக்கியதுடன் அங்கு வெள்ளத்தையும், நிலச்சரிவையும் ஏற்படுத்தியுள்ளது.

டூபோட் மற்றும் பியகபோ ஆகிய இரு நகரங்களும் மோசமாக பாதிக்கப்பட்டதுடன் பல வீடுகள் பாறைகளால் புதையுண்டன.

மணிக்கு 80 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் வீசிய காற்று, மிதனாவோவை கடந்து மேலும் மேற்கு நோக்கி நகரும் முன்பு பலாவான் என்ற பகுதியின் தெற்கு முனையில் மையம் கொண்டுள்ளது. இப்புயல் மேலும் மேற்கு நோக்கி நகரும்.

தற்போது டெம்பின் புயலானது வியட்நாமை நோக்கி மேற்குப்புறமாக நகர்ந்து வருகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'டெம்பின்' என்னும் வெப்பமண்டல புயல் வீசிய பின்னர் ஏற்பட்டுள்ள நிலை

ஐநாவின் பொது செயலாளரான அண்டோனியோ குட்டரஸ், புயலின் காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்பை எண்ணி தான் வருத்தமடைந்துள்ளதாகவும், மேலும் நிலைமையை சமாளிக்க உதவுவதற்கு ஐநா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடுமையான வெப்பமண்டல புயல்கள் பிலிப்பைன்ஸை தொடர்ந்து தாக்கி வந்தாலும், மிதனாவோ தீவு அடிக்கடி பாதிப்படைவதில்லை.

ராப்லர் இணையதளத்திடம் பேசிய பிராந்திய அதிகாரிகள், லானா டோல் நார்டேவில் 127 பேர் இறந்துள்ளனர் என்றும், ஸாம்போங்காவில் 50 பேர் வரை இறந்துள்ளனர் என்றும், லானா டோல் சூரில் குறைந்தது 18 பேர் இறந்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசிய டூபோட் நகர காவல்துறை அதிகாரியான கேரி பராமி, அந்நகரத்தில் டெம்பின் புயல் தாக்கியதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்திருப்பர் என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

"ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால் பெரும்பாலான வீடுகள் அடித்து செல்லப்பட்டதுடன் அங்கிருந்த கிராமமே காணாமல் போய்விட்டது" என்று அவர் கூறினார்.

சிப்கோ மற்றும் ஸலக் ஆகிய நகரங்களில் மேலும் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன.

மின்சார துண்டிப்பு மற்றும் தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியை காய்-தக் என்ற புயல் தாக்கியதில் டஜன் கணக்கானவர்கள் இறந்தனர்.

இப்பிராந்தியத்தை கடந்த 2013ம் ஆண்டு ஹையான் என்ற சூறாவளி தாக்கியதில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன், மில்லியன்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்