இரான்: விருந்து கொண்டாட்டத்துக்கு சென்ற 230 பேர் கைது

பறிமுதல் செய்த மதுபானங்களை அழிக்கும் அதிகாரிகள் (கோப்புப் படம்) படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பறிமுதல் செய்த மதுபானங்களை அழிக்கும் அதிகாரிகள் (கோப்புப் படம்)

இரான் தலைநகர் தெஹ்ரானில், இரு மகராயனக் கால (சூரியன் பூமிக்கிடையே மிகக் குறுகிய தூரம் உள்ள நாள்) கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 230 பேரை, அந்நாட்டின் கலாசார காவலர்கள் கைது செய்துள்ளனர்.

தெஹ்ரானின் கலாசார காவலர்கள் படையின் தலைவரான கர்னல் ஸுல்ஃபிகர் பர்ஃபார், இந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் குடித்துவிட்டு, நடனமாடியதாக கூறினார்.

மது அருந்தினால், தண்டனையாக 80 சவுக்கடிகள் கூட கிடைக்கலாம் என்ற சட்டம் இருந்தாலும், சமீப காலங்களில், மது அருந்துபவர்களுக்கு அபராதமே விதிக்கப்படுகிறது.

கலாசாரக் காவலர்கள், `எர்ஷத்` என்று அழைக்கப்படுகிறார்கள். பாரசீக மொழியில் இதற்கு, `வழிகாட்டுதல்` என்று பொருள்.

பெண்கள், இஸ்லாமிய ஆடைக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்களா என்பதையும் இவர்கள் உறுதி செய்கிறார்கள்.

லாவசன் பகுதியில் இருக்கும் ஒரு பூங்காவில் 140 பேர் கைது செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள 90 பேர் வடக்கு மாவட்டமான ஃபெர்மானியேவில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு நிகழ்ச்சிகளிலும் பாடிய பாடகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அங்கிருந்து சில மதுபானங்களும், போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கர்னல் பர்ஃபார், இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள், 'இன்ஸ்டகிராம்' சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டிருந்தன என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்