கிம் ஜாங்-உன் பிறந்த நாள் புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத ரகசியம் என்ன?

கிம் ஜாங்-உன் பிறந்த நாள் புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாதது ஏன்? படத்தின் காப்புரிமை Getty Images

வடகொரியாவில் சமீபத்தில் வெளியான 2018 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு காலண்டரில், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங்-உன்னின் பிறந்த நாள் தேதி குறிக்கப்படவில்லை.

ஜனவரி 8 ஆம் தேதிதான் கிம்மின் பிறந்தநாள் என பரவலாக நம்பப்படுகிறது. ஜப்பானின் ஊடகம் ஒன்றில் காண்பிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான வடகொரியாவின் புத்தாண்டு காலண்டரில் அவரின் பிறந்தநாள் குறிப்பிடப்படாமல் சாதாரண ஒரு நாளாகவே குறிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய தலைவர் கிம்மின் தந்தையான கிம் ஜாங்-இல்லின் பிறந்தநாள், "ஜொலிக்கும் நட்சத்திர" நாளாக கொண்டாடப்படுகிறது. அதேபோல, அவர் தாத்தா கிம் இரண்டாம் சங்கின் பிறந்த நாளான ஏப்ரல் 15 - "சூரியனுக்கான நாளாக" குறிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை KCNA

கிம்மின் தந்தையும் தாத்தாவும் உயிரோடு இருந்த போதே, அவர்கள் பிறந்த தேதிகளானது பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய தலைவர் கிம் ஜாங்-உன்னின் பிறந்த நாளை இன்று வரை ஏன் பொதுமக்களுக்கு உறுதி செய்யவோ அல்லது பொது விடுமுறையாக அறிவிக்கவோ இல்லை என்று தெரியவில்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டு, பியாங்யாங்கில் நடைபெற்ற கண்காட்சி போட்டியை பார்வையிட வந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் டென்னிஸ் ரோட்மேன், கண்காட்சி முடிந்தவுடன் கிம்மிற்கு "பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்" பாடினார். அப்போது தான் அவரது பிறந்தநாளை அண்டை நாடுகள் உறுதி செய்தன.

ராணுவத்திலிருந்து மார்கெட்டிங் வரை

படத்தின் காப்புரிமை TBS

டோக்கியோ ப்ராட்காஸ்டிங் ஊடகத்தால் பெறப்பட்ட 2018 புத்தாண்டு காலண்டர், வடகொரியாவில் உள்ள உணவகங்கள் மற்றும் புத்தகக் கடைகளில் கிடைக்கிறது. மேலும், வெளிநாடுகளில் உள்ள சில வடகொரிய உணவகங்களிலும் இது கிடைக்கும்.

முன்னதாக அந்நாட்டு காலண்டர்களில் கொரிய ராணுவம் அல்லது கிம் குடும்பத்தினரின் புகைப்படங்களே அதிகளவில் இடம்பெற்றிருக்கும்.

ஆனால், இந்தாண்டு அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட நுகர்வோர் பொருட்கள், இயற்கை காட்சிகள் மற்றும் சமையல் வகைகளை ஊக்குவிக்கும் வகையில் படங்கள் இடம்பெற்றுள்ளதாக தென்கொரியவை சேர்ந்த செய்தி நிறுவனமான டெய்லி என்.கே கூறியுள்ளது.

இதற்கு முன் தயாரிக்கப்பட்ட "பிரசார காலண்டர்களின்" விற்பனை குறைந்து வருவதை இது உணர்த்துவதாகவும் டெய்லி என்.கே செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்