கிறிஸ்துமஸ் தாத்தாவின் கிராமத்திற்குள் ஒரு பயணம்

கிருஸ்துமஸ் தாத்தாவின் கிராமத்திற்குள் ஒரு பயணம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில், எவான்ஸ்வில், ஜாஸ்பர் என்று இயல்பான பெயர்களை கொண்ட பல இடங்கள் உள்ளன. ஆனால், 162 வழித்தடத்தை நோக்கி சென்றால், சாண்டா கிளாஸ் 4 மைல் தொலைவில் உள்ளது என்ற பதாகையை பார்க்கமுடிகிறது.

அந்த 4 மைல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது என்பதை, குறிக்கும் வகையில், 10 அடி உயரத்தில் சாண்டா கிளாஸ் சிலை நம்மை வரவேற்கிறது.

இங்குள்ள பிரதான தெருவின் பெயர் கிறிஸ்துமஸ் பௌல்வார்ட். அந்த கிராமத்தில் வசிக்கும் 2500 பேரும் வாழக்கூடிய இடத்தின் பெயர் கிறிஸ்துமஸ் ஏரி கிராமம்.

இந்த பகுதியில் உள்ள முக்கிய வீதிகளுக்கு, மெல்கியோர், பல்தசர் மற்றும் காஸ்பர் என்று மூன்று முக்கிய நபர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சாண்டா கிளாஸ் கிராமத்தில் 365 நாளும் கிறிஸ்துமஸ்தான். ஆனால், அங்குள்ள மக்களை இது சலிப்படைய வைத்துள்ளதா?

இந்த கேள்விக்கு இல்லை என்று பதிலளிக்கிறார், மைக்கில் ஜோஹன்ஸ். "நான் இங்கு 27ஆண்டுகளாக வாழ்கிறேன். முழுநேரமும் இதற்காக இணைந்து பணியாற்றியுள்ளேன். கிறிஸ்துமஸ் எங்களில் ஓர் அங்கம்" என்று பதிலளிக்கிறார்.

19ஆம் நூற்றாண்டில், இந்த கிராமம், சாண்டா ஃபீ என்று அழைக்கப்பட்டது.

அங்கிருந்த மக்கள், அப்பகுதிக்கு ஒரு தபால்நிலையம் வேண்டும் என்று விண்ணப்பித்தபோது, ஏற்கனவே சண்டா ஃபீ என்ற ஒரு இடம் உள்ளதால், புதிய பெயரை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், 1856 இல் வழங்கப்பட்ட ஆவணங்கள், அப்பகுதியின் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் எவ்வாறு சாண்டா கிளாஸ் என்ற பெயரை தேர்வு செய்தார்கள் என்பது தெளிவாக இல்லை.

இதுகுறித்து ஒரு சிறந்த கதை உள்ளது.

கிருஸ்துமஸ் தினத்தின் மாலை வேளையில், சாண்டா ஃபீயில் உள்ள மக்கள் எல்லோரும், புதிய பெயரை தேர்வு செய்ய ஒன்று கூடினார்கள்.

பானையில் புதிய பெயர்களைப்போட்டு அவர்கள் குலுக்கல் முறையில் எடுக்கவிருந்திருந்தனர். திடீரென கதவுகள் திறந்தன.

அங்கிருந்த சிறுமி, கதவுகள் திறந்து, மனி அடிக்கப்பட்டதை பார்த்ததும், `சாண்டா கிளாஸ்!` என்று கத்தியுள்ளார்.

அவ்வளவுதான், ஊருக்கான புதிய பெயர் பிறந்துவிட்டது.

இதற்கு முன்பு, தேர்வு செய்யப்பட்டிருந்த பெயரோ, விட்டன்பாட்ச்.

"நாங்கள் மட்டும் அந்த பெயரை தேர்வு செய்திருந்தால், நீங்கள் இவ்வாறு வருகை தந்திருக்கமாட்டீர்கள்" என்கிறார், அப்பகுதியின் தலைமை எல்ஃப், பாட் குக்.

எல்ஃப் என்ற கற்பனை உருவம் என்பது, கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு உதவியான பணிகளை செய்யும் ஒரு சிறிய உயிரினம். அதன் பதவியில் இங்கு இவர் இருக்கிறார்.

உடனடியாக, சாண்டா கிளாஸ் கிராமம் பெரிய கவன ஈர்ப்பு விஷயமாக மாறிவிடவில்லை. மிகவும் குறைந்த தபால்கள் வருகின்றது என்பதால், சிறப்பாக செயல்படாத தபால் நிலையம் என்பதை விவரிக்கும் வகையில், அந்த நிலையத்திற்கு 4 நட்சத்திரங்களே கொடுக்கப்பட்டிருந்தன.

ஆனால், 1914களில், குழந்தைகளிடமிருந்து, சாண்டா கிளாஸ் கிராமத்திற்கு தபால்கள் வரத்தொடங்கியதாக கூறுகிறார், தலைமை தபால் அதிகாரியான ஜேம்ஸ் மார்ட்டின். அதற்கு, அந்த கிராமமும் பதிலளிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது, சாண்டா கிளாஸ் நிலையத்திற்கு ஆண்டுதோறும் 20 ஆயிரம் கடிதங்கள் வருகிறன. இதில் பெரும்பான்மையானவற்றில் சரியான முகவரி இருக்கும், சிலவற்றில், சாண்டா கிளாஸ், வடதுருவம் என்று மட்டுமே இருக்கும்.

இந்த தபால்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பு, பாட் குக் என்று அழைக்கப்படும், தலைமை எல்ஃபிடம் உள்ளது. 86 வயதாகும் இவர், செவிலியர் படிப்புடன் சேர்த்து, இறையியல் படிப்பும் படித்துள்ளார்.

குக்குடன் சேர்ந்து 200 தன்னார்வலர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் கடிதங்களை படிப்பதுடன், அதற்கான பதில் கடிததத்தையும் தயாரிக்கின்றனர், மேலும், அதில் குறிப்பிட்ட குழந்தையின் பெயரை எழுதி, பதிலளிக்கின்றனர்.

இந்த கடிதங்களுக்கான பதில்கள், மிகவும் கவனத்துடன் அமைய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

கடிதங்கள் ஒரே மாதிரியாக மடிக்கப்படுகின்றன. அதனால், கடிதத்தை பிரிக்கும்போது, முதலில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவம் தெரியும்.

"இந்த கடிதங்களுக்கான பதிலளிக்கும் செயல் என்பது, முறைப்படி இருக்கவேண்டும். இவை மிகவும் இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயங்களல்ல." என்று கூறுகிறார் குக்.

ஆண்டுதோறும், இந்த கடிதங்களை அனுப்புவதற்கு, 10 ஆயிரம் டாலர்கள் வரையில் செலவாகிறது. கடிதங்கள் அனுப்பும் குழந்தைகள், ஒரு டாலர் அல்லது ஐந்து டாலர்கள் அனுப்புவார்கள். ஆனால், இந்த பதில் கடிதங்களுக்கு செலவாகும் தொகை பெரும்பாலும், நன்கொடைகளாலும், அருங்காட்சியகத்திலிருந்து கிடைக்கும் பணத்திலிருந்தும் அனுப்பப்படுகிறது.

காற்றில் பண்டிகையின் வாசம் பரவத்தொடங்கிவிட்ட நிலையில், சாண்டா தனது அடுத்த பதில் கடித்ததை அனுப்புகிறார்.

திருமதி. குக்கின் குடும்பம் நடத்தும் ஹாலிடே வேர்ல்ட் மற்றும் ஸ்பிலாஷிங் சஃபாரி என்ற இரு பொழுதுபோக்கு பூங்காக்களே அங்கு மிகவும் பிரபலமானவை.

இந்த பூங்காக்களுக்கு ஆண்டுதோறும் பத்து லட்சம் மக்கள் வருகிறார்கள். ஆனால், நவம்பர் மாதத்தில், இந்த பூங்காக்கள் மூடப்பட்டுகின்றன.

சமூகக்கூடத்திற்கு வெளியே, தபால் நிலையத்திற்கு வெளியே என்று இங்கு பல இடங்களில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் சிலைகள் உள்ளன.

இந்த பகுதியிலுள்ள கிரிங்கில் பிளேஸ் என்ற இன்னொரு இடமும், கடைகளால் நிரம்பப்பட்ட கார்கள் நிறுத்தும் பகுதியாகும். இங்கு பல இடங்களில் கிறிஸ்துமஸ் தொடர்புடைய அலங்காரங்களாகவே இருந்தாலும், அங்கு மற்ற கடைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த இடத்தை பொருத்தவரையில், இங்குள்ள கட்டடங்களைவிட, மக்களே இந்த பண்டிகையின் வாசத்தை சுமந்துசெல்கின்றனர்.

சாண்டா கிளாஸின் கிறிஸ்துமஸ் கடையும், அந்த பூங்காக்களைப்போல, நிறைய அலங்கார பொருட்களையும், பரிசுகளையும் விற்பனை செய்கின்றது.

அந்த கடையின் கடைசியில், கிறிஸ்துமஸ் தாத்தா அமர்ந்திருக்கிறார்.

சாண்டா கிளாஸ் கிராமத்தை பொருத்தவரையில், அந்த மனிதர், கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடிக்கவில்லை, வாழ்கிறார்.

ஜனவரி மாத்ததிலும் மக்கள் அவரை கிறிஸ்துமஸ் தாத்தா என்றே அழைக்கின்றனர். அவரின் உண்மையான பெயர் தெரிந்தாலும், யாரும் அழைப்பதில்லை.

அவரின் தாடி, தலைமுடி என எல்லாமே நிஜமானவை. அவர் சாதாரண ஆடைகளில் இருந்தாலும், குழந்தைகளின் கிறிஸ்துமஸ் பரிசு குறித்தே அவர்களிடம் பேசுகிறார்.

தனது மகனிடம் கூறிய கதை குறித்து விவரிக்கிறார், மைக்கில் ஜொஹன்ஸ்.

"நீங்கள், சாண்டாவோடு, கோல்ஃப் விளயாடியுள்ளீர்களா என்று என் மகன் கேட்டதற்கு நான் ஆம் என்று பதிலளித்தேன்.`

வெற்றி பெற்றீர்களா என்று கேட்ட்தற்கும் ஆம் என்று கூறினேன்.

அதற்கு அவர், "நீங்கள் அவரை ஜெயித்ததால், நான் வாழும் வரையில், எனக்காக கிறிஸ்துமஸ் பரிசு கிடைக்காது என்று கூறியதாக" தெரிவிக்கிறார்.

பூங்கா மூடப்பட்டிருந்தாலும், டிசம்பர் மாதத்தில் மக்கள், அங்கு வருகிறார்கள். டிசம்பரின் முதல் மூன்று வார இறுதிகளிலும், முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர், இந்தப் பகுதிக்கு வருவதற்காக, ஆறு மணிநேர வாகனப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

"இங்குள்ள பல கடைகளுக்கும் நாங்கள் சென்று வருகிறோம். கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு நாங்கள் கடிதங்கள் அனுப்பியுள்ளோம், எங்களுக்கு வரவிருக்கும் பதில் கடிதத்தில் அவரின் தபால் குறியீட்டை பெற ஆவலாக உள்ளோம்" என்று ஆஷ்லே ஆம்ஸ்டிராங் கூறுகிறார்.

மக்கள், சாண்டா கிளாஸ் கிராமத்தில் வசிக்க மிகவும் விரும்புகிறார்கள். நிஜமாகவே, உங்களுக்கு கிறிஸ்துமஸ் பிடிக்காது என்றால், நீங்கள் வாழ்வதற்கு, டேல், ஜாஸ்பர் என்று பல இடங்கள் உள்ளன.

"இது ஒரு எழுதப்படாத பிரசாரம், இங்கு நான் செல்லும் ஒவ்வொரு வீட்டிலும், மக்கள், `நான் நம்புகிறேன்` என்ற அடையாள பதாகையை வைத்துள்ளனர்" என்று கூறுகிறார், மைக்கில் ஜோஹன்ஸ்.

"அவர்கள் கிறிஸ்துமஸை நம்புகிறார்கள், கிறிஸ்துமஸ் தாத்தாவை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் மக்களை ஒரு சமூகமாக்கி, தொடர்ந்து வளர உதவுகிறது" என்று அவர் கூறுகிறார்.

"கிறிஸ்துமஸ் பண்டிகையின் உண்மையான உணர்வு என்பது இங்குள்ளது. இது அமெரிக்காவின் கிறிஸ்துமஸ் நகரமாக இருக்கலாம், ஆனால் எனக்கு இது உண்மையிலேயே ஒரு வரம்" என்று கூறுகிறார், சாண்டா கிளாஸ் கிராமத்தின் கிறிஸ்துமஸ் தாத்தா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்