டாக்ஸி என நினைத்து போலீஸ் காரில் ஏறி சிக்கிய போதைமருந்து கடத்தல்காரர்

படத்தின் காப்புரிமை PA

டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் போதைப் பொருள் விற்பனையாளர் என கூறப்படும் நபர் ஒருவர் கிறிஸ்மஸையொட்டி ஒரு தேவையற்ற ஆச்சரியத்தை பெற்றார். கையில் 1,000 போதைமருந்து கலந்த சுருட்டுகளுடன் டாக்ஸி என நினைத்து போலீஸ் வாகனத்தில் ஏறிய அவர் பிடிபட்டார்.

அந்த போதைப்பொருள் விற்பனையாளர் வீட்டிற்கு செல்லும் அவசரத்தில் இந்த தவறை செய்துவிட்டதாக டென்மார்க் போலீசார் தெரிவித்துள்ளனர்.

போதை மருந்து வர்த்தக மையமாக அறியப்படும் அரை தன்னாட்சி மாவட்டமான கிறிஸ்டியானியாவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பிடிபட்ட போதைமருந்து விற்பனையாளர் சிறைவாசத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

"நேற்று இரவு அவசரமாக வீட்டுக்கு செல்ல நினைத்த ஒரு போதைப்பொருள் விற்பனையாளர் கிறிஸ்டியானா பகுதியில் ஒரு டாக்ஸியில் ஏறினார். பிறகு, தான் ஒரு போலீஸ் காரில் உட்கார்ந்திருப்பதை அறிந்த அவர் பெரிய ஆச்சரியத்துக்கு உள்ளானார்" என்று காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கிட்டத்தட்ட 1000 போதைப்பொருள் கலந்த சுருட்டுகளை வைத்திருந்த அவரை போலீசார் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்."

டென்மார்க்கில் கஞ்சா வைத்திருப்பதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கிறிஸ்டியானா மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்களை பிடிப்பதற்காக போலீசார் பல சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :