நடுவானில் பெற்றோரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய பிலிப்பைன்ஸ் விமானி!

படத்தின் காப்புரிமை Juan Paulo Fermin
Image caption விமானி ஜுவான் பாலோ ஃபெர்மினின் நெகிழ்ச்சி தருணங்கள்

பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜூவான் பாலோ ஃபெர்மின் என்ற விமானி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடுவானில் தன் பெற்றோரை ஆச்சரியப்படுத்திய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக்கில் அவர் பதிவேற்றிய காணொளி ஒன்று லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு 10,000-க்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டுள்ளது.

''ஒவ்வொருவருக்கும் கனவுகள் எடுக்கும் வடிவம் மிகவும் சுவாரஸியமாக இருக்கும். அதுபோல என்னுடைய கனவு மிகவும் எளிமையானது. நான் விமானியாக இருக்கும் விமானத்தில் அவர்களை வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும்.'' என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜுவான் பாலோ ஃபெர்மின்.

ஜுவானின் பெற்றோர் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக பிலிப்பைன்ஸில் உள்ள தங்கள் மகனின் வீட்டிற்கு பெர்முடாவிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

ஜுவான் விமானியாக பணிபுரியும் பிலிப்பைன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் ஜுவான் பெற்றோர் பயண டிக்கெட்களை முன்பதிவு செய்திருந்தனர்.

இதைமுன்பே தெரிந்து கொண்ட ஜுவான், அவரது பெற்றோர் பயணம் செய்யும் விமானத்தின் பணியாளர் குழுவில் இடம்பெற்றிருந்தார். ஆனால், தாங்கள் பயணிக்கும் விமானத்தை ஓட்டுவது தங்கள் மகன்தான் என்பது ஜுவான் பெற்றோர்களுக்கு தெரியாது.

தனது பணி சூழல் காரணமாக கடந்த 16 ஆண்டுகளாக ஜுவானால் தன் பெற்றோர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியவில்லை. அதனால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படியோரு ஆச்சரிய பரிசை பெற்றோருக்கு கொடுக்க எண்ணி, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கையில் பயணிகள் வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் முன் திடீரென தோன்றி அவர்களை திக்குமுக்காட செய்துவிட்டார் ஜுவான்.

ஜுவானை பார்த்த மகிழ்ச்சியில் அவரது தாய் கண்ணீர் மல்க கட்டிப்பிடிக்கும் இந்த நெகிழ்ச்சி காணொளி சமூக ஊடங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

பெற்றோர் பயணித்த விமானத்தில் பணியாளர் குழுவில் இடம்பெற உதவியதற்காக விமான நிறுவனத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் ஜுவான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்