ஜின்னாவின் சிந்தனைகளிலிருந்து விலகிச்செல்கிறதா பாகிஸ்தான்?

முகமது அலி-ஜின்னா படத்தின் காப்புரிமை ASIF HASSAN/AFP/Getty Images

டிசம்பர் மாதம் 25ஆம் தேதியை கொண்டாட பாகிஸ்தானுக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏசுநாதரின் பிறந்தநாளை கொண்டாடும் அதே வேளையில், அந்நாட்டை நிறுவிய, முகமது அலி-ஜின்னாவின் பிறந்தநாளை பாகிஸ்தான் கொண்டாடும்.

குவைத் இ அசாம் என்றும் அழைக்கப்பட்ட முகமது அலி ஜின்னா, 70 ஆண்டுகளுக்கு முன்பு அந்நாட்டை தோற்றுவித்ததாக அந்நாட்டு மக்களால் கருதப்படுகிறார்.

பிறநாடுகளை போல, பாகிஸ்தானில் டிசம்பர் 25ஆம் தேதி விடுமுறை நாள்; ஆனால், அது கிருஸ்துமஸிற்காக அல்ல, ஜின்னாவின் பிறந்தநாளுக்காக.

பொது மற்றும் அதிகார வட்டத்தில் வலதுசாரி எண்ணம் கொண்ட பெரும்பாலானவர்கள், "மேற்கத்திய அல்லது இஸ்லாம் அல்லாத" விழாக்கள் என்று தாங்கள் கருதும் விழாக்களை கொண்டாட விரும்பாததால், ஜின்னாவை போற்றும் வண்ணம் இந்நாளை பொது விடுமுறையாக அறிவித்தது அர்த்தமுள்ளதாகவே உள்ளது.

படத்தின் காப்புரிமை BERT BRANDT/AFP/Getty Images

இன்றைய பாகிஸ்தானின் அடையாளத்தின் முக்கிய அங்கமாக மதம் உள்ளது. ஆனால் அது ஜின்னா, நாட்டை உருவாக்கியபோது கொண்ட எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளதா? மதத்தின் கோட்பாடுகளின் ஆளப்படும் ஒரு நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பினாரா ஜின்னா? மக்களின் நம்பிக்கை எதுவாக இருந்தாலும் அது அனைவருக்கும் பொதுவான ஒரு நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பினாரா? அல்லது பாகிஸ்தான் ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பினாரா?

"சிறுபான்மையினருக்கான முக்கியத்துவம், ஜனநாயகம், மற்றும் சம உரிமையை தனது 33 பேச்சுகளிலும் எடுத்துரைத்துள்ளார் ஜின்னா. அவர் இஸ்லாமைப் பற்றி குறிப்பிடும்போதும் கூட இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகள் சமநிலையை சார்ந்தது என்றுதான் கூறினார்" என்கிறார் வரலாற்று ஆய்வாளர் மற்றும் வர்ணனையாளர், யாசிர் லதிஃப் ஹம்தானி.

ஆனால் தற்போது என்ன நடக்கிறதோ அது ஜின்னாவின் சிந்தனைக்கு ஒத்ததாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மத நிந்தனைக்கு எதிரான கட்சியான ’டெஹரீக் இ லபாய்க் யா ரசூல் அல்லா’, தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஃபைசாபாத்தில் நடத்திய போராட்டத்தைச் சுட்டிக்காட்டிய யாசிர் ஹம்தானி, அது ஜின்னா விரும்பிய பாகிஸ்தானிற்கு முற்றிலும் எதிர்மறையானது என்று தெரிவித்தார்.

இத்தனை ஆண்டுகளில், பாகிஸ்தானிலுள்ள வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் வேண்டுமென்றே ஜின்னாவை ஒரு துறவி போலவும், மிகவும் மதநம்பிக்கை கொண்ட ஒரு மனிதராகவும் உருவகப்படுத்திவிட்டதாக தெரிவிக்கிறார் வரலாற்று ஆய்வாளர் முபாரக் அலி.

"ஜின்னா, மதச்சார்பின்மை, இந்திய தேசியவாதம் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் விலகியவர் என்றும், பிரிட்டனுக்கு எதிரானவர் அல்ல என்றும் பொய்யான பிம்பங்களை, அவர் மீது உருவாக்கவே இங்குள்ள `வரலாற்று ஆய்வாளர்கள்` முயல்கின்றனர்."

படத்தின் காப்புரிமை Douglas Miller/Keystone/Getty Images

"மேலும், நாட்டின் தற்போதைய அதீத வலது சாரி நம்புக்கையுடையவர்களின் பழக்கவழக்கங்களுடன் ஒத்துப் போவதற்காக இது வேண்டுமென்றே செய்யப்படுகிறது." என்கிறார் முபாரக்

"இந்த `புதிய ஜின்னா`, உண்மையான ஜின்னாவிலிருந்து முழுவதும் மாறுபட்ட ஒருவர் என்றும், தற்போதைய ஜின்னா தனக்கான வரலாற்று முக்கியத்துவத்தை இழந்துவிட்டார்" என்றும் முபாரக் அலி கூறுகிறார்.

ஆனால், உண்மையான ஜின்னா யார்?

ஜின்னா ஒரு மதசார்பற்றவர் என்று முபாரக் அலி நம்புகிறார். அரசியலில், மதத்தை ஜின்னா ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார் என்பதை அவர் ஒப்புக் கொண்டாலும் அது அரசியலை முந்திச்செல்லும் அளவு அவர் நடந்துகொள்ளவில்லை என்று கூறுகிறார்.

"பாகிஸ்தான் ஒரு மதம்சார்ந்த நாடாக இருக்காது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்." என்றும் முபாரக் கூறுகிறார்.

"ஜின்னாவின் கொள்கைகள் சிதைந்துவிட்டன. அவரோடு தொடர்புபடுத்தி கூறப்படும் பல அபத்தமான சிந்தனைகள், உண்மையில் அவரின் சிந்தனைகளுக்கு முற்றிலும் எதிரானவை" என்பதை யாசிர் லதிஃப் ஒப்புக்கொள்கிறார்.

1974ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் அஹமதிகள் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்று அறிவிக்கப்பட்ட போது ’ஜின்னாவின் பாகிஸ்தான்’ , முதன்முதலில் புதைக்கப்பட்டது. அதன்பிறகு, சர்வாதிகாரியான ஜெனரல் சியா உல் ஹக்கால் மீண்டும் அது புதைக்கப்பட்டது.

தற்போது, ஃபைசாபாத் போராட்டக்காரர்களுடன், அரசு செய்துள்ள உடன்படிக்கை என்பது, ஜின்னாவின் பார்வையிலிருந்து முழுவதுமாக எதிர்மறையானது.

ஜின்னா, மிக வலிமைவாய்ந்த ஆளுமை உடையவர் என்று கூறும் முபாரக், நாட்டின் அரசியல்வாதிகளால், அது வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கிறார்.

"அவர் கொடுத்த வாக்கை காப்பவர், மிகவும் நேர்மையானவர், அர்ப்பணித்து பணியாற்றக்கூடியவர், சிறப்பான வழக்கறிஞர். ஆனால், அவரின் பெருமைகளை பேச, அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் பொருத்தமானவையாக இல்லை எனவே அவர் மதத்தின் மீது அதிக நாட்டமற்றவர் என்ற போதும், அவரின் மதம்சார்ந்த சிந்தனைகள் மீதே அவர்கள் அதிகம் கவனம் செலுத்தினர்."

படத்தின் காப்புரிமை Keystone/Getty Images

"ஜின்னா, பாகிஸ்தானை ஒரு மதச்சார்பற்ற நாடாக, அனைத்து மதத்தினரும், சமமாகவும், சுதந்திரமாகவும் வாழக்கூடிய நாடாக இருக்கவேண்டும் என்று நினைத்தார். ஆனால், பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டம், இஸ்லாமியர் அல்லாதவர், நாட்டின் அதிபராகவோ, பிரதமராகவோ ஆக முடியாது என்கிறது" என்றார் யாசிர் லதிஃப்.

"இது ஜின்னாவின் பாகிஸ்தானில் நடந்திருக்காது." என்று விளக்கும் முபாரக் அலி, பாகிஸ்தான் தொடர்பான ஜின்னாவின் சிந்தனைகள் குறித்து, பல குழப்பங்கள் நிலவுவதாக தோன்றுகிறது" என்றும் தெரி்வித்தார் முபாரக் அலி.

"ஜின்னா, பாகிஸ்தான் ஒரு மதம்சார்ந்த நாடாக இருக்காது என்று தெளிவாக தெரிவித்த ஜின்னா, அது ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்குமா அல்லது ஜனநாயக நாடாக இருக்குமா என்பது குறித்து கூறவில்லை. அதில், ஒரு தெளிவின்மையே நிலவுகிறது."

ஆனால், ஜின்னாவின் சிந்தனைகள் மிகவும் தெளிவாக இருந்ததாகவும் அதனால்தான் பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக ஒரு இந்துவை நியமித்தார் ஜின்னா என்று தெரிவிக்கிறார் யாசிர் லதிஃபின்.

பிரிவனையின் இரண்டு நாட்களுக்கு முன், ஜின்னாவால் அமைக்கப்பட்ட, அடிப்படை உரிமைகளுக்கான குழுவில் இந்துக்கள் ஆறு பேர் இருந்தனர். நாட்டின் அடிப்படை கோட்பாடு, ’சமஉரிமை’ என்பதில் ஜின்னா தெளிவாக இருந்தார் என்பதை இது காட்டுவதாக தெரிவிக்கிறார் யாசிர் ஹமாதனி.

கடந்த காலங்களில் பாதையில் செல்வதைவிட, பாகிஸ்தான் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்க வேண்டும் என்று முபாரக் அலி கூறுகிறார்.

"பாகிஸ்தான், ஜின்னாவின் சொத்தல்ல, மக்களுடையது. சமகால நிதர்சனங்களோடு சேர்ந்துசெல்லக்கூடிய நாடாக பாகிஸ்தானை மாற்ற முயல வேண்டுமே தவிர, ஜின்னா விரும்பியவாறல்ல." என்று முபாரக் தெரிவிக்கிறார்.

ஆனால், இதை ஏற்க மறுக்கும் யாசின், "ஜின்னா பாகிஸ்தானை நிறுவியவர். அவர் எப்போதுமே, பாகிஸ்தானிற்கு தொடர்புடையவராகவே இருப்பார்" என்று கூறுகிறார்.

பிற செய்திகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் பாகிஸ்தான் கிராமம்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்