ஜெருசலேம் பிரச்சனைக்கு போப் பிரான்சிஸ் சொல்லும் தீர்வு என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

போப் பிரான்சிஸ், தனது பாரம்பரிய கிறிஸ்துமஸ் தின செய்தியில், "ஜெருசலேத்திற்கு அமைதி வேண்டும்" என்று கூறியதோடு, இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையே "அதிகரித்துவரும் பதட்டத்தை" குறிப்பிட்ட அவர், "அமைதியான முறையில் இருநாடுகளும் சேர்ந்திருக்க வித்திடும் வகையில், பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வை எட்ட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

புனித பீட்டர் சதுக்கத்தில், தனது, `நகருக்கும், உலகிற்குமான` உரையை ஆற்றினார் போப் பிரான்ஸிஸ்.

படத்தின் காப்புரிமை Getty Images

"இந்த பண்டிகை நாளில், இறைவனிடம், நாம் அனைவரும் ஜெருசலேத்திற்கும் இவ்வுலகிற்கும் அமைதியை வேண்டுவோம்" என்று மக்களிடம் கூறினார்.

"இந்த இருநாடுகளும் அமைதியாக வாழ, இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் வகையில் சர்வதேச எல்லைகளை அங்கீகரிக்க வேண்டும். மேலும், ஒரு நல்ல தீர்வை கொண்டுவர, இவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைக்கான விருப்பம் வரவேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்" என்றார் அவர்.

மக்கள் வேறுநாடுகளுக்கு குடியேறுவதால் ஏற்படும் நெருக்கடி, இரான் மற்றும் சிரியா இடையிலான பிரச்சனை, வடகொரியா விவகாரம் என பல தலைப்புகள் அவர் பேச்சில் இடம்பெற்றிருந்தன.

ஜெருசலேத்திற்கு தனது தூதரகத்தை மாற்றும் குவாட்டமாலா

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்ற திட்டமிட்டிருப்பதாக மத்திய அமெரிக்க நாடான குவாட்டமாலா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹூவுடன் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொர்ராலெஸ் கூறினார்.

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஒன்பது நாடுகளில் குவாட்டமாலாவும் ஒன்று.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெருசலேம் நகரத்துக்கு இஸ்ரேலும் பாலத்தீனமும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் இது ஒரு தீர்க்கப்படாத சர்ச்சையாகத் தொடர்ந்து வருகிறது.

முன்னதாக, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சர்ச்சைக்குள்ளாகிய முடிவுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், இஸ்லாமிய நாடுகள் இடையே பல போராட்டங்களை இம்முடிவு தூண்டியது.

டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

குவாட்டமாலா இவ்வாறு செய்வது எதற்கு?

இதுகுறித்து ஃபேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்ட அந்நாட்டு அதிபர் மொர்ராலெஸ், இஸ்ரேலுக்கும் குவாட்டமாலாவிற்கும் இடையே உள்ள "சிறந்த உறவை" குறிப்பிட்டு, நாட்டின் தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றுவது முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார்.

"எனவே, தூதரகத்தை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுக்க உத்தரவுகள் அளித்துள்ளேன்" என்றும் அவர் கூறினார். ஆனால் அது எப்போது நடக்கும் என்பது பற்றி எதுவும் கூறவில்லை.

உண்மையான நட்பின் அடையாளம் இது என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், இந்த முடிவை வரவேற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் இம்முடிவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பாலத்தீன அதிபர் அப்பாஸ், இதனை எதிர்த்து போராடப் போவதாக கூறினார் என ஜெருசலேம் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.

முன்னதாக, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது.

128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தும், 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்த தீர்மானத்தை ஆதரிப்பவர்களுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில் குவாட்டமாலா நாட்டிற்கு அமெரிக்கா பெரும் நன்கொடையாளராக இருக்க, இதனை எண்ணி தூதரக மாற்ற முடிவை அந்நாடு எடுத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல நாடுகள் தங்கள் தூதரங்களை ஜெருசலேத்துக்கு மாற்றும் முடிவை கருத்தில் கொண்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹூ சிஎன்என் தொலைக்காட்சியில் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால், எந்தெந்த நாடுகள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :