வட கொரியா குறித்து எங்களுக்கு கவலை இல்லை: தென் கொரிய தமிழர்கள்

வட கொரியா குறித்து எங்களுக்கு கவலையே இல்லை: தென் கொரியவாழ் தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

வட கொரியா ஏவுகணை சோதனை செய்வது, அமெரிக்கா எச்சரிக்கை விடுப்பது போன்றவற்றை தமிழகத்தில் உள்ள தங்களின் உறவினர்கள் மூலமாகதான் தெரிந்துகொள்வதாகவும், தென் கொரியாவில் பெண்கள் நாளின் 24 மணிநேரமும் பயமின்றி நடமாட முடியுமென்றும் அங்குள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவில் வசிக்கும் தமிழர்களுடன் தலைநகர் சோலில் இருந்து பிபிசி தமிழுக்காக பிபிசி செய்தியாளர் நிதின் ஸ்ரீவத்ஸவா நடத்திய ஃபேஸ்புக் நேரலையில் தென் கொரியா பற்றிய பல்வேறு விடயங்களை அங்குள்ள தமிழர்கள் விளக்கினர்.

தென் கொரியாவில் தமிழர்கள் என்ன செய்கிறார்கள்?

"கடந்த பத்து பதினைந்து வருடங்களாகவே ஆயிரக்கணக்கான தமிழர்கள் கல்விக்காகவும், தொழில்ரீதியாகவும் தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்" என்கிறார் தென் கொரியாவின் சுவான் பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியரான சுரேஷ்.

தற்போது தென் கொரியாவில் -5 டிகிரி செல்சியஸ் முதல் -10 டிகிரி செல்சியஸ் வரை என கடுமையான குளிர்காலம் நிலவி வருவதாக அவர் கூறுகிறார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தென் கொரியாவில் தர மேலாளராகப் பணியாற்றி வரும் சரவணன், "தென் கொரியாவில் குடும்பத்துடன் இருக்கும் எங்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியான முறையிலும் சென்றுக் கொண்டிருக்கிறது. மேலும், கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. குறிப்பாக 6,000 தமிழ் வார்த்தைகள் கொரிய மொழியில் கலந்துள்ளதால், கொரியர்கள் என்னிடம் பேசும்போது தமிழில் உரையாடுவது போன்றுள்ளது" என்று கூறினார்.

தற்போது தென் கொரியாவில் நிலவி வரும் கடுமையான குளிர் குறித்து கேட்டபோது, "இந்த காலநிலை எங்களுக்கு பழகிவிட்டது. இங்கு வந்த புதிதில் சிறிது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், காலம் செல்ல செல்ல பழக்கமாகிவிட்டது. குளிர் காலம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடு தென் கொரியா

"இந்தியாவில் பெண்களை இரவு 8 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு அச்சமடைவார்கள். ஆனால், தென் கொரியாவில் நாளின் 24 மணிநேரமும் எவ்வித அச்சமுமின்றி எங்கு வேண்டுமானாலும் தனியாக நடமாட முடியும். மேலும், உதவி தேவையென்றால் முன்பின் தெரியாதவர்கள் கூட உடனடியாக உதவி செய்வார்கள்" என்று கலந்துரையாடலில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்.

"என்னுடைய குழந்தைக்கு இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட வெளியே சென்று பால் வாங்கிக்கொண்டு வரவியலும். அங்குள்ள கடையின் விற்பனையாளர், வழிப்போக்கர் உள்ளிட்ட அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருக்கின்றனர். சரியான அரசாங்கமும், தலைமையும் இல்லாத இந்தியாவில் இதுபோன்ற நிலைக்கு சாத்தியமே இல்லை" என்று ஷைலஜா என்பவர் கூறுகிறார்.

உணவுப் பழக்கம்

தென் கொரியாவின் உணவுப் பழக்கம் குறித்து கேட்டபோது, "இங்கு சைவப்பிரியர்களுக்கு சிறிது கடினம்தான். மாமிச உணவு வகைகள் அதிகமாக உள்ள தென் கொரியாவில் தற்போது நாம் பரவலாக பயன்படுத்தும் உணவு வகைகள் மற்றும் மசாலா பொருட்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, நாம் வீட்டிலேயே சமைக்கும் பட்சத்தில் உணவு சார்ந்த பிரச்சனைகளை எளிதாக எதிர்கொள்ள இயலும்" என்று பத்மநாபன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

தாய்நாட்டின் நினைவுள்ளதா?

தென் கொரியாவில் வாழ்வதால், தமிழ்நாட்டிலுள்ள தங்களது உறவினர்களை தவிர்த்து வேறு எதையுமே இழந்தது போன்ற உணர்வு இல்லை என்று அங்குள்ள தமிழர்கள் கூறுகிறார்கள். மேலும், வாழை இலை முதல் தோசை மாவு வரை அனைத்து விதமான உணவுப் பொருட்களும் தென் கொரியாவில் கிடைப்பதால் தங்களுக்கு உணவு சார்ந்த எவ்வித பிரச்சனையுமே இல்லையென்றும் கூறுகிறார்கள்.

தென் கொரியாவை பொறுத்தவரை பள்ளிக் கல்வி மிகுந்த செலவுபிடிக்கக் கூடியதாக உள்ளதென்று அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர். எனவே, பெரும்பாலும் தங்களது குழந்தைகள் பள்ளிக் கல்வியை தமிழகத்தில் முடித்தவுடன் தென் கொரியாவுக்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

பட மூலாதாரம், Getty Images

வட கொரியாவுக்கு அருகில் இருப்பதில் பயமே இல்லை

சர்வதேச ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை அடிக்கடி செய்தியாக வருவது வட கொரியாவின் ராணுவ ரீதியிலான செயல்பாடுகளே ஆகும். எனவே, இதுகுறித்து அங்குள்ள தமிழர்களிடம் கேட்டபோது, "உண்மையில் எங்களுக்கு வட கொரியா குறித்த கவலையே கிடையாது. எங்களை விட தமிழகத்தில் உள்ள உறவினர்கள்தான் இங்கு நிலவும் சூழல் குறித்து எங்களிடம் தெரிவித்து அச்சப்படுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அசாதாரண சூழல் நிலவியது. ஆனால், இந்திய தூதரகம் எங்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்தது" என்று கூறினர்.

காணொளிக் குறிப்பு,

ஜப்பானில் உள்ள வட கொரிய பள்ளிகள்

தென் கொரியாவில் அதிகளவில் வயதானவர்கள் உள்ளார்கள். அவர்கள் நம்மிடம் அதிக அன்பை செலுத்துபவர்களாக இருப்பதாலும், இங்கு பாதுகாப்பான சூழல் நிலவுவதாலும் தாங்கள் இங்கே இருப்பதையே விரும்புவதாக பிபிசி தமிழிடம் பேசிய தென் கொரிய வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், சிலர் தங்களுக்கு நல்ல பணி வாய்ப்புகள் கிடைக்கும்பட்சத்தில் சில ஆண்டுகளில் தமிழகத்திற்கு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: