பிரிட்டன் கடல் எல்லை அருகே சென்ற ரஷ்ய போர்க்கப்பல்

கிறிஸ்துமஸ் தினத்தன்று ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று, பிரிட்டன் கடல் எல்லை அருகே சென்றதாகவும் அதை பிரிட்டன் போர்க்கப்பல் ஒன்று கண்காணித்ததாகவும் பிரிட்டன் கடற்படை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரிட்டன் அருகே உள்ள ஆங்கிலக் கால்வாய் வழியே செல்லும் ரஷ்யப் போர்க்கப்பல்

அட்மிரல் கோர்ஷோவ் எனும் அந்த ரஷ்யப் போர்க்கப்பலை "பிரிட்டனின் தேசிய நலன்களுடன் தொடர்புடைய கடல் பகுதிகளில்" எச்.எம்.எஸ் செயின்ட் அல்பான்ஸ் என்ற பிரிட்டன் போர்க் கப்பல் கண்காணித்துள்ளதாக பிரிட்டன் கடற்படை கூறியுள்ளது.

குறித்த இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் சுமந்து செல்லும் 'அட்மிரல் கோர்ஷோவ்' கப்பல் இன்னும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் கடல் எல்லை வழியாகச் செல்லும் ரஷ்யப் போர்க்கப்பல்கள் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளதாக பிரிட்டன் கடற்படை தெரிவிக்கிறது.

ரஷ்யக் கப்பலைக் கண்காணிப்பதற்காக திங்களன்று கடலிலேயே இருந்த எச்.எம்.எஸ் செயின்ட் அல்பான்ஸ் போர்ட்ஸ்மவுத் துறைமுகம் திரும்புகிறது.

"நமது கடல் எல்லைகளைக் காக்கத் தயங்கமாட்டேன். எவ்விதமான அச்சுறுத்தலையும் சகித்துக்கொள்ளவும் மாட்டேன்," என்று பிரிட்டன் பாதுகாப்பு செயலர் கவின் வில்லியம்சன் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிறன்று இங்கிலாந்து அருகே உள்ள வடக்குக் கடல் (நார்த் சீ) மற்றும் ஆங்கிலக் கால்வாய் பகுதியில் ஒரு ரஷ்ய உளவுக் கப்பல் சென்றதைத் தொடர்ந்து, எச்.எம்.எஸ் டைன் எனும் ரோந்துக் கப்பல் மற்றும் ஒரு கடற்படை ஹெலிகாப்டர் ஆகியவை அதைக் கண்காணிக்க அனுப்பப்பட்டன.

படத்தின் காப்புரிமை PA

கடந்த ஜனவரி மாதம் ஒரு பிரிட்டன் போர்க்கப்பல் மற்றும் மூன்று பிரிட்டன் விமானப்படை விமானங்கள், அட்மிரல் குஸ்நெட்சோவ் எனும் ரஷ்ய விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் பிற கப்பல்களை ஆங்கிலக் கால்வாய் வழியே சூழ்ந்து சென்றன.

வடக்கு கடல் பகுதியில் உள்ள சர்வதேச கடல் பரப்பை மத்தியத் தரைக்கடலில் சிரியாவுக்கான உதவிகளை இறக்கச் செல்வதற்கான பாதையாக சமீப காலங்களில் ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.

கடந்த 2014-இல் ரஷ்யா கிரீமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதில் இருந்து, ரஷ்யா மற்றும் பிரிட்டன் இடையேயான உறவு பதற்றமாகவே உள்ளது.

பிரிட்டன் படைப்பிரிவுகளின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் சர் ஸ்டூவர்ட் பீச், வடக்கு கடல் பகுதியில் உள்ள தகவல் தொடர்பு இணைப்புகளைப் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.

அவை துண்டிக்கப்பட்டால் அது உடனைடியாக, பிரிட்டன் பொருளாதாரத்துக்கு பேரழிவை உண்டாக்கும் சாத்தியம் உண்டு என்றும் அவர் கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்