சீனா: அதிகாரிகளை கேலி செய்த மனித உரிமை செயல்பாட்டாளருக்கு சிறை

"மிகவும் மோசமான கசாப்புக் கடைக்காரர் (சூப்பர் வல்கர் புட்சர்)" என்று சீன இணையவாசிகளால் பரவலாக அழைக்கப்படும், சீனாவின் முக்கிய மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஒருவருக்கு அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வு கான்

பட மூலாதாரம், YOU JINGYOU

படக்குறிப்பு,

வு கான்

கடந்த 2015-இல் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை சீன அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது வு கான் கைது செய்யப்பட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிகவும் கடுமையானதாகக் கருதப்படும் இந்த எட்டு ஆண்டுகால சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாக வு கான் கூறியுள்ளார்.

அதிகாரிகளை கேலி செய்யும் வகையில் அவரது இணையப் பிரசாரங்கள் அமைந்திருக்கும்.

"தற்போதைய அரசமைப்பு குறித்து அவர் திருப்தி அற்றவராக இருந்தார்," என்றும், அரசின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட்டு வந்தார்" என்றும் அவருக்கு தண்டனை வழங்கிய டியான்ஜினில் உள்ள நீதிமன்றம் கூறியுள்ளது.

அவர் போலியான செய்திகளை இணையத்தளத்தில் பரப்பியதாகவும், பிறரை அவமதித்ததாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

பட மூலாதாரம், YOU JINGYOU

படக்குறிப்பு,

சீனாவை மகிழ்ச்சியான இடமாக மாற்ற விரும்புவதாக ஒரு இணையக் காணொளியில் வு கூறியிருந்தார்

தன்னை பாலியல் வன்புணர்வு செய்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற ஒரு பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட, அரசு அதிகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான வழக்குகளை வு கான் ஏற்று நடத்தி வந்தார்.

செய்யாத கொலைக்காக சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறிய நான்கு நபர்களுக்காக அவர் வழக்கு நடத்தினார். அவர்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் படத்தை இரண்டு பதாகைகளில், ஹிட்லர் மீசையுடன் அச்சிட்ட அவர், அவருக்கு வழங்க வேண்டிய லஞ்சப்பணத்தின் தொகை எவ்வளவு என்ற கேள்வியையும் அப்படத்துடன் அச்சிட்டிருந்தார்.

அவரது சமூகச் செயல்பாடுகள் விளையாட்டு மற்றும் குறும்புத்தனம் நிறைந்தவையாக இருந்தன. ஒருமுறை ஹெனான் மாகாணத்தின் மூன்று அதிகாரிகளின் படத்தை போட்டோஷாப் மூலம் பன்றி முகங்களாக மாற்றிய அவர், "உலகிலேயே அதிகமாகத் தேடப்படும் மூன்று கொழுத்த பன்றிகள்" என்று பதிவிட்டிருந்தார்.

"709 எதிர்-நடவடிக்கை" என்று அழைக்கப்படும் 2015-இல் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: