சிரியா போர்: கிளர்ச்சியாளர்கள் பகுதியில் இருந்து நோயாளிகள் வெளியேற்றம்

சிரியா போர்: கிளர்ச்சியாளர்கள் பகுதியில் இருந்து நோயாளிகள் வெளியேற்றம்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்படுகின்றனர்.

மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நான்கு நோயாளிகள் அந்நகரின் கிழக்கு கோட்டா பகுதியில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சிரிய அரபு செம்பிறை அமைப்பினரால் வெளியே கொண்டு செல்லப்பட்டனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அங்கிருந்து வெளியேற்றுவது குறித்து அதிபர் பஷார் அல் அசாத்தின் அலுவலகம் பரிசீலித்து வருவதாக மருத்துவ சேவை மற்றும் உதவி அமைப்புகளின் கூட்டமைப்பின் ஆலோசகர் ஹமிஷ் டீ பிரெட்டன்-கார்டன் கடந்த வாரம் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

உடனடி மருத்துவ சேவை தேவைப்படும் 130க்கும் மேற்பட்ட குழந்தைகளில் அவர்களும் அடக்கம்.

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும், சுமார் 4 லட்சம் மக்கள்தொகை கொண்ட, கிழக்கு கோட்டாவில் கிட்டத்தட்ட 12% குழந்தைகள் மோசமான ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். ஆறு வாரங்களுக்கு முன்பு அங்கு நிலைமை மோசமானது.

படத்தின் காப்புரிமை Icrc

பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் அவசர ஊர்திகளின் படத்தை செவ்வாய் மாலை செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டது. ஆனால், எத்தனை பேர் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

பின்னர் 'சிரிய அரபு செம்பிறை' எனும் அமைப்பு பல குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, அவர்கள் டமாஸ்கஸில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறி இருந்தது.

இதய நோய், புற்றுநோய், சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட, அவசரமாக அறுவை சிகிச்சை தேவைப்படும் 18 குழந்தைகள், நான்கு பெண்கள் உள்பட 29 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

கிழக்கு கோட்டா பகுதியில் வாழ்வது 'சாத்தியமற்றது' என்றும் அங்குள்ள சூழ்நிலை 'மோசமான புள்ளியை' அடைந்துவிட்டதாகவும் கடந்த மாதம் செஞ்சிலுவைச் சங்கம் கூறியிருந்தது.

இந்த சம்பவங்கள் குறித்து சிரியா அரசு இன்னும் வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. நோயால் பாதிக்கப்பட்டவர்களை அங்கிருந்து வெளியேற்ற ஐ.நா கடந்த சில வாரங்களாகவே முயன்று வருகிறது.

சிரியாவில் அரசு படைகள் சமீபத்தில் நடத்திய தாக்குதல்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணமாக டஜன் கணக்கான குடிமக்கள் இறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதி சிரியா அரசின் முக்கியக் கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் இரான் ஆகிய நாடுகளாலும், கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கும் துருக்கி அரசாலும் 'போர் நிறுத்தம் அமலில் இருக்கும் பகுதியாக' அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஊட்டச்சத்தின்மையால் பரிதவிக்கும் சிரியா குழந்தைகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :