ஆப்கானிஸ்தானில் இந்தியாவை தனிமைப்படுத்துகிறதா சீனா?

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) ஆஃப்கானிஸ்தான் வரை நீட்டிக்கலாம் என்று சீனா முன்மொழிந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நிலையில், இந்தியாவின் நட்பு நாடான ஆஃப்கானிஸ்தான் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியும், ஒருவேளை ஏற்றுக்கொண்டால், அந்த பிராந்தியத்தில் விரிவான எதிர்பார்ப்புகள் உள்ள அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற துணைக்கேள்வியும் எழுகிறது.

சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் ஆஃப்கானிஸ்தான் இணைந்தால் அந்த நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதோடு, பிராந்தியம் முழுவதும் பொருளாரீதியாக பயனடையும் என்ற வாதத்தை சீனா முன்வைக்கிறது.

ஆனால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் உதவியில்லாமல் இந்த லட்சிய திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லமுடியாது என்ற உண்மை சீனாவுக்கு நன்றாகவே தெரியும்.

இந்த யோசனையின் பின்னணியில், பொருளாதார நோக்கங்களுடன், சீனாவின் தந்திரோபாய விருப்பம் ஒன்றும் அடங்கியிருக்கிறது.

அண்மையில் பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் பாகிஸ்தான் - ஆஃப்கன் உறவுகள் மேம்படவேண்டும். அப்போதுதான் இந்த லட்சியத்திட்டம் நிறைவேறி, அது உத்தேசித்துள்ள பலன்களை பெறமுடியும் என்பதே சீனாவின் உள்ளடங்கிய விருப்பம்.

படத்தின் காப்புரிமை Reuters

உறவுகளில் புதுப் பரிமாணம்

அண்மைக் காலத்தில், இந்தியா, ஆஃப்கானிஸ்தான், அமெரிக்கா இடையிலான நட்பு புதுப் பரிணாமத்தை எடுத்து மேம்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தானுடன் தொடர்ந்துவந்த உறவுகள் எந்தவொரு காரணத்திற்காகவும் சிதைந்துவிடக்கூடாது என்று சீனா விரும்புகிறது.

எனவே இருதரப்பு உறவுகளை சீராக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்தியா, ஆஃப்கானிஸ்தானில் முக்கியமான பங்காற்றுவதை பாகிஸ்தானும் விரும்பாது.

இந்தியாவை தனிமைப்படுத்துவதே சீனாவின் நோக்கம். ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடன் இந்த பிராந்தியத்தில் இணைந்து செயல்பட்டு, அமெரிக்காவிடமிருந்து இந்தியாவை தனிமைப்படுத்த விரும்புகிறது சீனா.

இந்த பொருளாதார வழித்தடத்தில் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் பகுதியையும் சீனா இணைத்திருப்பதால் இந்தியா தொடக்கத்தில் இருந்தே இந்த வழித்தடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

இந்தப் பகுதிக்கு இந்தியா உரிமைகோரும் நிலையில் சீனாவின் இந்த நிலைப்பாடு, இந்திய இறையாண்மை மீது சீனா கேள்வி எழுப்புவதாகவே பொருள் கொள்ளப்படும்.

படத்தின் காப்புரிமை Getty Images

நிதர்சனமோ வேறு

இந்த விவகாரத்தில் பக்கச் சார்பு இல்லாமல் இருப்பதே சீனாவின் ஆரம்பகால நிலைப்பாடாக இருந்தது. ஆனால், தன்னுடைய கொள்கையை தற்போது மாற்றிக்கொண்ட சீனா, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி அந்நாட்டுக்கே உரிமையானது என்று கூறுகிறது.

பொருளாதார வழித்தடத் திட்டத்தில் ஆஃப்கானும் இணைந்தால், இந்தியா அந்த நாட்டில் செய்திருக்கும் முதலீடுகளின் பலனைப் பெறமுடியாது என்பதே அதன் அர்த்தமாக இருக்கும்.

ஆனால் தற்போது காபூலில் இருக்கும் அரசு இந்தியா தொடர்பான கொள்கையை மாற்றுவதற்கான காரணங்களோ, அறிகுறிகளோ எதுவும் தென்படவில்லை.

இதைத்தவிர, சீனாவின் இந்த அரசியல் சதுரங்க விளையாட்டை பார்த்துக் கொண்டு அமெரிக்கா கையைக் கட்டிக் கொண்டிருக்காது. இந்தியாவின் நலன்களை பாதுகாப்பது ஒருபுறம் என்றால், அமெரிக்காவின் தன்னலமும் அதில் அடங்கியிருக்கிறது.

இந்த கருத்துக்கு சாதகமான நிதர்சன சூழ்நிலைகளையே பார்க்கமுடிகிறது. இஸ்லாமாபாதுக்கும் காபூலுக்கும் இடையிலான உறவில் பதற்றம் நிலவுகிறது.

இந்தப் பகுதியில் சீனா மேற்கொண்டுள்ள முதல் முத்தரப்பு முயற்சி இது. எனவே இதுபற்றி பரவலாக பேசப்பட்டாலும், நிலைமை முற்றிலும் வேறுபட்டது.

(பேராசிரியர் ஹர்ஷ் பந்த்துடன் பிபிசி நிருபர் ஆதர்ஷ் ராடெளர் கண்ட பேட்டியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அனைத்து மகளிர் ஆப்கன் தொலைக்காட்சி ஆரம்பம்

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்