வணிக நோக்கில் சினிமா திரையிடப்பட்ட நாள் இன்று: சினிமா குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள்!

வணிக நோக்கில் சினிமா திரையிடப்பட்ட நாள் இன்று

வணிக நோக்கில் முதல் முறையாக சினிமா திரையிடப்பட்ட நாள் இன்று. சினிமாடோகிராஃபி, அதாவது ப்ரொஜக்டர் என்ற கருவியைக் கண்டுப்பிடித்த லூயிஸ் மற்றும் அகஸ்டி லூமியர் எனும் ஃபிரஞ்சு சகோதரர்கள், தங்கள் தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வரும் காட்சியை (Leaving the Factory) படம் பிடித்து 1895-ம் ஆண்டு இதே நாளில்தான் பாரிஸில் திரையிட்டனர். இந்த காட்சியை திரையில் பார்க்க மக்களிடம் கட்டணம் வாங்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Thomas Arnold
Image caption ஃபிலிம்களை ஆராயும் லூயிஸ் லூமியர்

ஒரு துண்டு காட்சியிலிருந்து, இன்று 7D வரை பரிணமித்து இருக்கும் சினிமா மற்றும் திரையரங்கம் குறித்த 5 சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

திரையிடல்:

வணிக நோக்கில் முதல்முறையாக சினிமா பாரிஸில் திரையிடப்பட்டதிலிருந்து சரியாக இரண்டு ஆண்டுகள் பயணித்து, கலையும் தொழிற்நுட்பமும் கலந்த புதுவடிவம் மதராஸ் ராஜதானியை வந்தடைந்தது. 1897 ஆம் ஆண்டு சென்னை ரிப்பன் கட்டடத்துக்கு அருகே இருந்த விக்டோரியா ஹாலில் 'Leaving the Factory' திரையிடப்பட்டது.

திரையரங்கம்:

இந்த திரையிடலிருந்து சரியாக மூன்று ஆண்டுகளுக்குப் பின், 1900 ஆம் ஆண்டு, தென்னிந்தியாவில் முதல் திரையரங்கம் சென்னையில் கட்டப்பட்டது. இதனை கட்டியவர் வார்விக் மேஜர்.

படத்தின் காப்புரிமை Paula Bronstein

சென்னையில் மட்டுமே திரையிடப்பட்டுக் கொண்டிருந்த திரைப்படங்களை, சென்னைக்கு வெளியே வாழ்ந்த மகக்ளிடமும் கொண்டு சேர்த்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். 1905 ஆம் ஆண்டு ஃபிரஞ்சுகாரரான டூபானை சந்திக்கிறார் வின்சென்ட். டூபான் ஒரு 'எக்சிபிட்டர்', அதாவது திரைப்பட ரீல்களையும், ப்ரொஜக்டரையும் சுமந்துக் கொண்டு ஊர் ஊராக சென்று திரையிடுபவர். அவரை தற்செயலாக சந்தித்த வின்சென்ட், அவரிடமிருந்து திரைப்படத்தை காண்பிக்கும் கருவியையும், 'லைஃப் ஆஃப் கிறிஸ்ட்' என்ற குறும்படத்தையும் 2,000 ரூபாய்க்கு வாங்கி ஊர் ஊராக சென்று திரையிடுகிறார். இதில் ஈட்டிய வருவாயைக் கொண்டு, 1914 ஆம் ஆண்டு கோவையில் 'வெரைட்டி ஹால்'எனும் திரையரங்கத்தை கட்டினார். இதுதான் சென்னைக்கு வெளியே கட்டப்பட்ட முதல் திரையரங்கம்.

ஸ்டூடியோ:

மதராஸ் ராஜதானியில் முதல் ஸ்டூடியோவை உருவாக்கியவர் ஆர். நடராஜ முதலியார். மோட்டார் வியாபாரம் செய்து கொண்டிருந்த இவர் சினிமாவால் ஈர்க்கப்பட்டு பூனே சென்று சினிமா குறித்து பயின்றார். பின் சென்னை திரும்பியவர், எம்.எஸ். தர்மலிங்க முதலியார் என்பவரின் துணையோடு கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில், 'இந்தியா பிலிம் கம்பெனி' என்ற பெயரில் ஸ்டூடியோவை துவக்கினார்.

தமிழர் சினிமா:

சினிமா மதராஸ் ராஜதானியில் பிரபலமடைந்து இருந்தாலும், அதனை பெரும்பாலும் இயக்கியவர்கள், தயாரித்தவர்கள் வெளிநாட்டினர்தான். அவர்கள் கையில்தான் அந்த கலையும், தொழிற்நுட்பமும் இருந்தது.

சினிமாவை கூர்ந்து கவனித்து ஆழமாக ஊன்றி பயின்ற நடராஜ முதலியார் சினிமா தயாரிக்க முடிவு செய்கிறார். அந்த படத்துக்கு அவர்தான் இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர். வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட அந்த படத்தின் பெயர், 'கீசகவதம்'. இந்த படம் 1916 ஆம் ஆண்டு வெளியானது. தமிழர் ஒருவர் தயாரித்த முதல் சலனப் படம் இதுதான்.

பேசும் படம்:

சினிமா நன்கு பிரபலமடைந்து இருந்தாலும் சினிமா குறித்த தகவல் கடைக்கோடி ரசிகனையும் போய் சேர்ந்து இருந்தாலும் அந்நாட்களில் சினிமா பேசவில்லை. முதல் பேசும் படத்தை இந்தியாவில் இயக்கியவர் அர்தேஷிர் இரானி; படத்தின் பெயர், 'ஆலம் ஆரா'. இந்த படம் 1931 ஆம் ஆண்டு வெளியானது. சென்னைக்கு அதே ஆண்டு ஜூன் மாதம் வந்தது. இது வரை பேசா படங்களையே பார்த்து இருந்த ரசிகர்கள், முதல் முதலில் பேசும் படத்தை பார்த்ததும், கேட்டதும் குதூகலிக்க தொடங்கினார்கள். ஆனால், அந்த படம் தமிழில் பேசவில்லையே என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், அந்த வருத்தமும் அதே ஆண்டு நீங்கியது. ஆம், அதே ஆண்டு தமிழில் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' வந்தது. அந்த படத்தை இயக்கியவர் எச்.எம். ரெட்டி. தயரித்தவர் அர்தேஷிர் இரானி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்