2017ல் தொழில்நுட்ப உலகம்: ’வான்னாக்ரை முதல் பிட்காயின் வரை ’

ஒவ்வொரு நாளும் புதிதாக தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி நம்மை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில், 2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

கூகுள் படத்தின் காப்புரிமை Getty Images

ஒவ்வொரு நாளும் புதிதாக தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி நம்மை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில், 2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

ஒவ்வொரு செய்தியிலும் அது தொடர்பான முழு தகவலை தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்காக அந்த செய்தியுடன் அதுகுறித்த கட்டுரைக்கான இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

உலகையே அதிர வைத்த வான்னாக்ரை தாக்குதல்

2017-ஆம் ஆண்டு மே மாதம் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது `வான்னாக்ரை` ரேன்சம்வேர் தாக்குதல். பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் தைவான் உள்பட 150 நாடுகளின் 3 லட்சம் கணினிகளை இந்த ரேன்சம்வேர் தாக்கியது.

இதன் மூலம் முடக்கப்பட்ட கணினிகளில் உள்ள கோப்புகளை மீட்க, பணம் கோரப்பட்டது. இந்த ஆண்டின் மிக மோசமான இணையத் தாக்குதலாக கருதப்படும் வான்னாக்ரை, வடகொரியாவால் உருவாக்கப்பட்டது என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

மேலும் படிக்க: ரான்சம்வேர் இணைய தாக்குதல் ; 99 நாடுகளில் உள்ள கணினிகள் பாதிப்பு

புதிய ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் எக்ஸ் திறன்பேசி, இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தனது ஐ போன் பதிப்புகளில் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டும் தனது ரசிகர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது எனலாம்.

கைரேகை மூலம் உரிமையாளரை சரிபார்க்கும் ஃபிங்கர் பிரிண்ட் தொழில்நுட்பத்திற்கு பதிலாக, முகத்தைக் கொண்டு உரிமையாளரை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் ஐஃபோன் 10ல் இடம்பெற்றது. மேலும் முந்தைய பதிப்புகளை விட அதிக செயல்பாட்டு வேகம், சிறந்த கேமிரா மற்றும் அதிக அளவிலான நினைவகம் ஆகிய சிறப்பம்சங்களும் ஐஃபோன் 10ல் இடம்பெற்றிருந்தன. ஆனால் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட ஐ போன் வரிசைகளின், ஐஃபோன் 10தான் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: முக அடையாளம் மற்றும் ஓஎல்இடி திரை வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐஃபோன் X

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத உயர்வு

கிரிப்ட்டோ கரன்சி என அழைக்கப்படும் பிட்காயினின் மதிப்பு, இந்த வாரம் வரலாறு காணாத அளவு முதல்முறையாக பதினைந்தாயிரம் டாலர்களுக்கு மேல் அதிகரித்தது. ஆனால் இதன் நிச்சயமற்ற நிலை காரணமாக, பிட்காயினின் மதிப்பு எப்போது வேண்டுமானாலும் வீழ்ச்சியடையலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை AFP

மேலும் படிக்க: பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா?

மீண்டும் களத்தில் குதித்த நோக்கியா

2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நோக்கியாவின் 3310 வகை அலைபேசி மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது; அறிமுகமான 17 ஆண்டுகளுக்கு பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இந்த மறு அறிமுகம் நடைபெற்றது.

படத்தின் காப்புரிமை JOSEP LAGO

நோக்கியாவின் பெயர்போன பாம்பு விளையாட்டும் இதில் இடம்பெற்றது. இதனுடன் சேர்ந்து நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்களும் அறிமுகமாகின்றன. ஆனால் 2ஜி அம்சம் மட்டுமே கொண்ட நோக்கியா 3310 அலைபேசியில், ஸ்னாப் சாட், வாட்ஸ் ஆப் போன்ற பல செயலிகளை பயன்படுத்துவதில் சிரமங்கள் இருந்ததாக பயனர்கள் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் படிக்க: புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வருகிறது நோக்கியா 3310

ரோபோவுக்கு குடியுரிமை அளித்த செளதி அரேபியா

மனித வடிவ இயந்திரம் (ஹூனாய்ட் ) வகையைச் சேர்ந்த சோஃபியா என்ற ரோபோவுக்கு, சவுதி அரேபியா அரசு குடியுரிமை அளித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ரியாத்தில் நடைபெறவுள்ள எதிர்கால முதலீடு பற்றிய மாநாட்டில் பேச்சாளராக கலந்துகொண்ட இந்த ரோபோ, ஒரு அமர்வுக்கு நடுநிலை வகிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

படத்தின் காப்புரிமை FABRICE COFFRINI/AFP/GETTY IMAGES

செளதி அரேபியாவின் கலாசாரம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தகவல்படி, சர்வதேச தகவல் தொடர்பு மையம் இதை ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக அறிவித்துள்ளதுடன், புதிய செளதி குடிமகளை வரவேற்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது.

மேலும் படிக்க: செளதி அரேபிய குடியுரிமை பெற்ற ரோபோ சோஃபியா

தானியங்கி கார்களை திரும்பப் பெற்ற ஊபர்

ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்திய தானியங்கி கார் ஒன்று,சாலையில் வந்துகொண்டிருந்த மற்றொரு காருடன் மோதியதில் மோசமாக சேதமடைந்த புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியானது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரிஜோனா, பென்சில்வேனியா மற்றும் கலிஃபோர்னியா ஆகிய மூன்று மாகாணங்களில் இயங்கி வந்த தனது தானியங்கி கார்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஊபர் நிறுவனம் அறிவித்தது.

படத்தின் காப்புரிமை Reuters

மேலும் படிக்க: தானியங்கி கார்களை திரும்பப் பெற்றது ஊபர்

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :