நியூ யார்க்: அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 12 பேர் பலி

  • 29 டிசம்பர் 2017
தீவிபத்து படத்தின் காப்புரிமை EPA

நியூ யார்க் நகரத்தில் ப்ரொன்க்ஸ் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளில், இதுதான் மோசமான தீ விபத்து எனக் குறிப்பிட்ட நியூ யார்க் நகர மேயர் பில் ட பிளாசியோ, இச்சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

தீயை கட்டுக்குள் கொண்டுவர, 160க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

படத்தின் காப்புரிமை Reuters

ஐந்து மாடி கட்டடத்தில் இத்தீவிபத்து நிகழ்ந்ததையடுத்து, உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு எச்சரிக்கை மணி ஒலித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் பேசிய ப்ளெசியோ, கட்டடங்ளை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், அருகில் உள்ள பள்ளியில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது நகரத்தில் கடுமையான குளிர் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters

"ப்ரொன்க்ஸ் நகரத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சீர்குலைந்துள்ளன. கடந்த கால் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்து இது. தற்போது எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வாழ்க்கையின் மோசமான இழப்புகள் கொண்ட தீ விபத்து பட்டியலில் இது முதலாவதாகும்." என்றும் அவர் கூறினார்.

அக்கட்டடத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் இருப்பதாகவும், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்டது என்றும் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்