நியூயார்க்: 12 பேர் உயிரிழந்த தீ விபத்துக்கு காரணமான சிறுவன்

  • 30 டிசம்பர் 2017
தீ படத்தின் காப்புரிமை Getty Images

நியூ யார்க் நகரம் ப்ரொன்க்ஸ் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட காரணம் 'அடுப்பில் ஒரு சிறுவன் விளையாடியதுதான்' எனத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர்.

யாருமில்லாத நேரத்தில் தெரியாமல் அச்சிறுவன் அடுப்பு பற்றவைத்ததை தொடர்ந்து, கட்டடத்தில் தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை ஆணையர் டேனியல் நீக்ரோ தெரிவித்தார்.

தன் இரு குழந்தைகளுடன் தீயிலிருந்து தப்பிக்க வீட்டிலிருந்து வெளியே வந்தத் தாய், கதவுகளை திறந்து வைத்துவிட்டு சென்றதால் மற்ற இடங்களுக்கு வேகமாக தீ பரவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த 25 ஆண்டுகளில், இதுதான் மோசமான தீ விபத்து என நியூயார்க் நகர மேயர் பில் ட பிளாசியோ தெரிவித்திருந்தார்.

இவ்விபத்தில், ஒன்று இரண்டு மற்றும் ஏழு வயதுடைய மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர். மேலும் அடையாளம் தெரியாத ஒரு சிறுவனின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை இதுவரை அதிகாரிகள் வெளியிடவில்லை. சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தீயை கட்டுக்குள் கொண்டுவர, 170க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கடுமையான உறைபனியில் போராடினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தீயிலிருந்து தப்பிக்க குளியல் தொட்டியில் ஒதுங்கிய பெண் ஒருவர் இரு குழந்தைகளை அணைத்த நிலையில் இறந்து காணப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

கடுமையான குளிர்காலத்தை நியூயார்க் நகரம் எதிர்கொண்டு வருகிறது. மைனஸ் 10 டிகிரிக்கு குறைந்துள்ள தட்ப வெட்ப நிலையால், தீயை அணைக்க பயன்படுத்தப்பட்ட நீர், பனிக்கட்டிகளாக மாறியுள்ளதை காண முடிகிறது.

இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டால் அது மற்ற இடங்களுக்கு பரவாமல் இருக்க அவ்விடத்தின் கதவுகளை மூடிவைக்க வேண்டும் என்பதை தீயணைப்புத்துறை அந்நகர மக்களை வலியுறுத்திவருகிறது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்