அர்ஜென்டினா: சொந்த மகளையே பாலியல் அடிமையாக வைத்திருந்த தந்தைக்கு சிறை

பாலியல் தாக்குதல்

அர்ஜென்டினாவில், தன் சொந்த மகளுடனே பாலியல் உறவு வைத்துக் கொண்டு எட்டுக் குழந்தைகள் பெற்றுள்ள நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

57 வயதான டொமிங்கோ புலோசியோ, கடந்த 20 ஆண்டுகளாக தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

11வது வயதிலிருந்து தன்னை பாலியல் அடிமையாக தனது தந்தை வைத்திருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

வடக்கு அர்ஜென்டினாவில் உள்ள வில்லா பல்னேரியா என்ற நகரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் இறந்திருக்கக் கூடும் அல்லது அப்பெண் சிறு குழந்தையாக இருக்கும் போதே குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கக் கூடும் என உள்ளூர் ஊடகங்கள் பல தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பிறந்த இரு சகோதரர்கள், மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் வாழ வேறு இடத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், இவர் மட்டும் 11 வயதிலேயே 'தன் தாயின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள' வற்புறுத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக, தன் தந்தையால் தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளானதாக பாதிக்கப்பட்ட அப்பெண் தெரிவித்தார்.

இவர் பெற்றெடுத்த எட்டு குழந்தைகளுக்கும் டொமிங்கோதான் தந்தை என டி என் ஏ பரிசோதனை முடிவுகள் உறுதி செய்துள்ளன.

இளம் வயதிலிருந்தே தனக்கு பாலியல் தொல்லை தொடங்கிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் உள்ளூர் செய்தித்தாளான இல் லிபரெலிடம் கூறியுள்ளார்.

தன் தந்தையின் துன்புறுத்தல் குறித்து வெளியே தெரிவித்ததில் இருந்து, குடும்ப உறுப்பினர்கள் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2016ம் ஆண்டு தொடக்கத்தில், அப்பெண் தன் குழந்தையை மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்ல, குழந்தையின் தந்தை குறித்து அங்கு தகவல் கேட்கப்பட்டதையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்த வழக்கை காவல்துறை எடுத்தபோது தப்பியோடிய டொமிங்கோ, 45 நாட்கள் தலைமறைவாக இருந்தார். பின்பு அவரை கண்டுபிடித்த காவல்துறை, டொமிங்கோவை சிறையில் அடைத்தது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :