2017: சமூக ஊடகங்களில் டாப் டிரெண்டிங்கை பிடித்த வைரல் செய்திகள்

சமூக ஊடகங்களில் இந்த ஆண்டு வைரலாக பேசப்பட்ட சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

அலமாரிக்கடியில் சிக்கிய தம்பியைக் காத்த இரண்டு வயது அண்ணன்

அமெரிக்காவின் உடாவில் இரட்டையர்களான பாவ்டியும், ப்ராக் ஷாஃபும் தங்கள் அறையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ப்ராக் மீது அலமாரி ஒன்று விழுந்துள்ளது. சகோதரனை எப்படி மீட்பது என்று சிறிது நேரம் யோசிக்கும் பாவ்டி ஷாஃப் பின்னர் அலமாரியை தள்ளி சகோதரரை காப்பாற்றுகிறார். இந்த காட்சிகள் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மெய்சிலிர்க்க வைக்கும் இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் உலகளவில் வைரலானது.

அலங்காநல்லூரை அதிரவைத்த ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த ஆண்டு தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் அமைப்புகள், கட்சிகள் என அனைத்து இயக்கங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் இளைஞர்கள் பெரும் திரளாக செல்லும் இந்த காணொளியை சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

தடைகளை தகர்த்தெறிந்த கார்த்திகேய சேனாபதி

ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்குவதற்கு காரணமான முக்கிய நபர்களில் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் கார்த்திகேய சேனாபதியும் ஒருவர். ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவர் டெல்லி வந்திருந்த போது பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் காணொளி இது. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும், எந்த அரசியல் கட்சியிலும் தான் சேரப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மெரினா போராட்டமும், காவல்துறையின் வன்முறையும்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், கடற்கரையில் கூடியிருந்தவர்களை வெளியேற கோரி ஜனவரி 23 ஆம் தேதி கெடு விதித்திருந்தது தமிழக காவல்துறை. தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ், கடற்கரையைவிட்டு உடனடியாக கிளம்ப வேண்டும் என்று கூறியது. அதனை ஏற்காத போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக இழுத்து மெரினாவிலிருந்து வெளியேற்றியது காவல்துறை. அதனைத் தொடர்ந்து, பரவிய வன்முறையை படம்பிடிக்க சென்ற பிபிசி தமிழின் சென்னை செய்தியாளர் ஜெயகுமாரின் கேமரா போலீஸாரால் உடைக்கப்பட்டது. அதுகுறித்த காணொளி இது.

திருச்சியில் அமைதியாக முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருச்சியில் மாநகரிலும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவர் ஆற்றிய உரையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. திருச்சி மாநகர துணை கமிஷனராக இருப்பவர் மயில்வாகனன். அவர் போராட்டக்காரர்களிடையே ஆற்றிய உரை சமூக வலைத்தளங்களில் வைரலானது அந்த காணொளிதான் இது.

சுற்றுலா வாகனத்தை தாக்கிய சிங்கங்கள்

பெங்களூரூ அருகேயுள்ள பானர்காட்டா உயிரியல் பூங்காவில் விலங்குகளை பார்ப்பதற்காக சுற்றுலாவாசிகள் இன்னோவா காரில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதாமாக இன்னோவா வாகனத்தை இரண்டு சிங்கங்கள் தாக்கின. சுற்றுலாவாசிகளின் வாகனம் மீது சிங்கங்கள் திடீர் தாக்குதல் நடத்தியது குறித்த காணொளி இது.

ஜெயலலிதா சமாதியில் பன்னீர்செல்வம் தியானம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து மாநில முதல்வராக பொறுப்பேற்றார் ஓ.பன்னீர்செல்வம். பின்னர், அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியும் ஏற்றுக்கொண்டார் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா. இச்சூழலில்தான், திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பி.எஸ். சசிகலா குடும்பத்தாரின் கட்டாயத்தின் பேரில்தான் பதவியை ராஜினாமா செய்தததாக குற்றஞ்சாட்டி மெரினாவிலுள்ள ஜெயலலிதா சமாதியின் தியானம் செய்தார்.

சேற்று வெள்ளத்தில் சிக்கி உயிரோடு மீண்ட பெண்

பெரு நாட்டின் லிமாவின் புறநகர்ப்பகுதியில் ஏற்பட்ட சேற்று நீர்ச்சுழியில் சிக்கிப் போராடி உயிர் தப்பியுள்ளார் 32 வயதான இவன்ஜெலினா சாமாரோ டையஸ். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். சேற்று வெள்ளத்திலிருந்து அவர் வெளியேறும் காணொளி உலகளவில் வைரலாக பரவியது.

விஸ்வரூபம் எடுத்த விவசாயிகள் பிரச்சனை

ஜல்லிக்கட்டு பிரச்சனையடுத்து தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டது விவசாயிகள் பிரச்சனைதான். விவசாய கடன் தள்ளுபடி, நதி நீர் இணைப்பு உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் ஜந்தர் மந்தரில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சேர்ந்த விவசாயி அய்யாக்கண்ணு போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். விவசாயிகளின் நூதன போராட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களையும் தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

கடலில் கலந்த 100 டன் எண்ணெய்யை பக்கெட்களில் அள்ளிய அவலம்

சென்னை எண்ணூரில் காமராஜர் துறைமுக கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதையடுத்து ஒரு கப்பலிலிருந்த எண்ணெய் கடலில் சசிந்தன. இதனால், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் கடற்பகுகளில் 1 அடி உயரத்திற்கு கடலில் எண்ணெய் மிதக்க ஆரம்பித்தது.இந்த எண்ணெய்ப்படலத்தை அரசு அமைப்புகளும் பெரும் எண்ணிக்கையிலான தன்னார்வலர்களும் அகற்றினர்.

'தெர்மோகோல்' அமைச்சர் செல்லூர் ராஜூ

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில், நீர் ஆவியாகாமல் இருப்பதற்காக நீர் மட்டத்தின் மீது தெர்மோகோல் போட்டு மூடும் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். ஆனால், அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியானபோது, சமூக வலைதளங்களில் "மீம்"களும் கடுமையான கேலிகளும் முன்வைக்கப்பட்டன.

வைகை நீரை தெர்மோகோல் அட்டையை வைத்து மூடும் முயற்சி தோல்வி !

ஜெயலலிதா சமாதியில் சசிகலா மும்முறை சபதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவை சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பெங்களூரு புறப்படுவதற்குமுன் மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலரஞ்சலி செலுத்தினார். பின்னர், மும்முறை சமாதியில் கையால் அறைந்து சபதம் செய்தார். அவர் அப்படி என்ன சபதமெடுத்திருப்பார் என்று சமூக ஊடகங்களில் இது பரவலாக பகிரப்பட்டது.

மனிதனே மாடாக மாறி ஏர் உழும் ஏழை விவசாயி

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், சாலம்பாத் கிராமத்தில் வசிக்கும் சீதாராம் என்ற ஏழை விவசாயி மாடு இருக்க வேண்டிய இடத்தில் தன்னைத்தனே ஏரில் பூட்டி தன்னுடய வயலை உழவு செய்தார். அவரது மனைவி முன்னி தேவியும் ஏர்கலப்பையை பிடித்து கணவருக்கு உதவியாக வயலை உழுவு செய்த காணொளி இந்தியா முழுவதும் வைரலாக பரவியது.

கொலைவெறிக்கு அடுத்து உலகளவில் வைரலான ஜிமிக்கி கம்மல்

மோகன்லால் நடிப்பில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' என்ற மலையாள படத்தில் வெளியான 'எண்டம்மையிட ஜிமிக்கி கம்மல்' என்ற பாடலை, 'இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்' கல்வி நிறுவனத்தின் மாணவிகள், ஆசிரியர்கள் நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள். இந்த யு டியூப் காணொளி உலகளவில் மிகவும் வைரலானது.

டிரக் ஓட்டுநர் சாமர்த்தியத்தால் நூலிழையில் தப்பிய சிறுவன்

நார்வேயில் சிறுவன் ஒருவன் திடீரென சாலையை கடக்க முற்பட்டபோது நடந்த பதைக்க வைக்கும் காட்சி பதிவு செய்யப்பட்ட காணொளி இது. டிரக் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் விபத்து தடுக்கப்பட்டது.

சர்ச்சையை கிளப்பிய ஜெயலலிதா சிகிச்சை வீடியோ

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருப்பது போன்ற காணொளி ஒன்றை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டிருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் இது வெளியானதால், ஊடகங்கள் இந்த காணொளியை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு இந்த காணொளியும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்