நியூசிலாந்து: மதுபான தடையை தவிர்க்க மதுபிரியர்களின் ‘வித்தியாச யோசனை’

  • 2 ஜனவரி 2018
படத்தின் காப்புரிமை David Saunders

பொது இடங்களில் மதுபானம் அருந்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை வித்தியாசமான முறையில் சமாளிக்க நினைத்த குழுவொன்று நியூசிலாந்தின் கடற்கரையோர பகுதி ஒன்றில் மண்ணாலான செயற்கையான தீவு ஒன்றை கட்டி புத்தாண்டை வரவேற்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

இந்த குழுவானது, கோரமண்டல் தீபகற்பத்தில் உள்ள தாயுவா கரையோரத்தில் குறைந்த அலைகள் எழும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மண்ணாலான தீவை கட்டமைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிறகு, சிறிய மேஜை மற்றும் ஐஸ் பெட்டியை அவர்கள் அங்கு கொண்டு சென்றதாகவும் தெரிகிறது.

இவர்கள் "சர்வதேச கடல் எல்லையில்" இருப்பதால் மதுபானம் அருந்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ தடை இவர்களுக்கு பொருந்தாது என்று நகைப்புடன் உள்ளூர்வாசிகள் கூறினர்.

புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு கட்டுமானத்தில் அமர்ந்து கொண்டு மதுபானம் அருந்திக்கொண்டே, அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளை இந்த குழுவினர் பார்த்ததாக நியூசிலாந்தை சேர்ந்த இணையதளமான stuff.co.nz செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அந்த கட்டமைப்பானது திங்கட்கிழமை காலை வரை அப்படியே இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை David Saunders

புத்தாண்டை முன்னிட்டு கோரமண்டலில் பொது இடங்களில் மதுபானம் அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், அதை மீறுபவர்களுக்கு 250 டாலர்கள் அபாரதமோ அல்லது கைது செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், இவ்விவகாரத்தை அதிகாரிகள் பெரிய விடயமாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.

"இது ஒரு புதுமையான யோசனை, இதுகுறித்து எனக்கு முன்னரே தெரிந்திருந்தால் அவர்களுடன் நானும் இணைந்திருப்பேன்" என்று உள்ளூர் காவல்துறை ஆய்வாளரான ஜான் கெல்லி இதுகுறித்து கூறியுள்ளார்.

இந்த படங்கள் உள்ளூர் பேஸ்புக் குழுவான டையூரா சிட்சாட்டில் டேவிட் சாண்டர்ஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.

"கிவிஸ் (நியூசிலாந்துக்காரர்கள்) வேடிக்கையாக இருப்பதை பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாக" பிபிசியிடம் பேசிய சாண்டர்ஸ் தெரிவித்தார்.

ஆனால், அப்பகுதியை சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளரான நோடி வாட்ஸ், தடையுத்தரவு பலனளிக்கவில்லை என்றும், வெறுமனே கைது நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

"அவர்கள் அதற்காகத்தான் அங்கு வந்தார்கள் என்றில்லை. ஆனால், அவர்களின் பெற்றோர்கள் அதற்காகத்தான் அங்கு வந்தார்கள்" என்று நியூசிலாந்து ஹெரால்ட் என்ற நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்