அமெரிக்கா அளித்தது அவநம்பிக்கையைதான்: பாகிஸ்தான்

  • 2 ஜனவரி 2018
டிரம்ப் படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவிடமிருந்து, பல பில்லியன் டாலர்களை உதவியாக பெற்றபோதிலும், பாகிஸ்தான் அமெரிக்காவிடம் தொடர்ந்து பொய் கூறுவதாக டிரம்ப் தெரிவித்த கருத்திற்கு, பாகிஸ்தான் பதிலளித்துள்ளது.

இது குறித்து ஜியோ டி.வியிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹவாஜா அசிஃப், "இதற்கு மேல் நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று அமெரிக்காவிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். அதனால், அவர்கள் குறிப்பிட்டுள்ள, `நோ மோர்` என்ற வார்த்தைகளுக்கு முக்கியதுவம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

"அமெரிக்கா அளித்த உதவித்தொகை குறித்த அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் அளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது"` என்று அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் பதிவிற்கு எதிரான கருத்தை தெரியப்படுத்துவதற்காக, பாகிஸ்தானிற்கான அமெரிக்க தூதர் டேவிட் ஹேல், திங்கட்கிழமையன்று வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர், குர்ராம் டஸ்கிர் கான், "அமெரிக்கா, பாகிஸ்தானிற்கு கடுஞ்சொற்களையும், அவநம்பிக்கையையுமே" அளித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

"அமைதி, ஒழுக்கம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றின்மீது, பாகிஸ்தான் எந்த அளவிற்கு முனைப்புடன் உள்ளது என்பதை வெளிக்காட்டவேண்டிய நேரம் இது" என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தானில், தாலிபனுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான ரெக்ஸ் டில்லர்சன் அழுத்தமளித்திருந்தார்.

"பாகிஸ்தானில் பாதுகாப்பான புகலிடம் தேடும், பல பயங்கரவாத இயக்கங்களை கையாள்வது குறித்து, பாகிஸ்தானின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை என்றால், அமெரிக்காவின் உதவித்தொகை குறித்த விவகாரங்கள் மீண்டும், பேச்சுவார்த்தைக்கு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

தாலிபனுடன் கூட்டணியில் உள்ள ஹக்குவனி குழுவிற்கு எதிராக பாகிஸ்தான் அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றசாட்டிற்காக, பாகிஸ்தானிற்கு வந்துசேரவேண்டிய, பல பில்லியன் டாலர் உதவித்தொகை அமெரிக்காவிலேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பயங்கரவாதிகளால், பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க பிணைக்கைதி குறித்து தகவல்கள் அளிக்கும் திறன் உள்ளதாக, அமெரிக்கா நம்பிய ஒரு நபருடன், அந்நாட்டு அதிகாரிகள் பேசுவதற்கு பாகிஸ்தானால் அனுமதி மறுக்கப்பட்டது என்று தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

டிரம்பின் பதிவை, ஆஃப்கானிஸ்தானின் முன்னாள் அதிபரான ஹமீத் கர்சீயும், அமெரிக்காவிற்கான ஆஃப்கானிஸ்தான் தூதரான ஹம்துல்லா மொஹிபும் வரவேற்றுள்ளனர்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :