குளிர்கால ஒலிம்பிக்ஸ்: பேச்சுவார்த்தை நடத்த வட கொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு

ரியோம் டே-ஓக் மற்றும் கிம் ஜூ- சிக் படத்தின் காப்புரிமை Reuters
Image caption பியோங்சங்கில் வடகொரியாவின் இந்த பனிச்சறுக்கு வீரர்கள் போட்டியிடக்கூடும்

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா பங்கேற்பது தொடர்பாக அந்நாட்டுடன் வரும் ஜனவரி 9-ம் தேதி உயர் அளவு பேச்சுவார்த்தைகளை நடத்த தென் கொரியா அழைப்பு விடுத்துள்ளது.

தென்கொரியாவில் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள இந்த போட்டிகளுக்காக பியோங்சங்கிற்கு தங்கள் நாட்டின் சார்பாக அணியை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்ததையடுத்து தென் கொரியா இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

பதற்றமான உறவை மேம்படுத்த உதவும் வாய்ப்பாக இதனை பார்ப்பதாக தென் கொரியா அதிபர் முன்னதாக கூறியிருந்தார்.

தென் கொரியாவின் நல்லிணக்கதுறை அமைச்சர் சோ மியூங் -கியான் செவ்வாய்க்கிழமை பேசுகையில் இரு நாட்டு பிரதிநிதிகளும் 'சமாதான கிராமம்' என அழைக்கப்படும் பன்முன்ஜோமில் சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார்.

எல்லையில் மிகவும் பாதுகாக்கப்பட்ட ராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தில் உள்ள இந்த கிராமத்தில்தான் கொரியாக்கள் வரலாற்று ரீதியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்துள்ளன.

''பியோங்சங் போட்டிகளில் வட கொரியவின் போட்டியாளர்கள் பங்கேற்பது தொடர்பாக வட கொரியாவும், தென் கொரியாவும் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசுவார்கள் என நாங்கள் நம்புகிறோம் மேலும் கொரிய உறவுகளை முன்னேற்றுவதற்கான பல விஷயங்களில் பரஸ்பர பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவார்கள் என நம்புகிறோம்'' என கூறியுள்ளார் அமைச்சர் சோ.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஒலிம்பிக் வளையங்கள் பனிக்கட்டியால் செய்யப்பட்டுள்ளன. இடம் - பியோங்சாங், வடகொரியா

முன்மொழியப்பட்டிருக்கும் ஜனவரி 9-ம் தேதி பேச்சுவார்த்தையில் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. மேலும் இதற்கு வட கொரியா இன்னமும் பதிலளிக்கவில்லை.

இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக உயர்அளவு பேச்சுவார்த்தைகள், 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் கேசோங் கூட்டு தொழில் மண்டலத்தில் நடந்தது. அதில் எந்தவித ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. அந்த சந்திப்புக்கான அடிப்படை நோக்கம் மற்றும் நிகழ்ச்சி நிரல் ஆகியவை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

சர்வதேச தடைகள் அதிகரித்து வந்தபோதிலும் வட கொரியா கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களது அணுசக்தி மற்றும் ஆயுத பலத்தை விரைவாக மேம்படுத்திக் கொண்டுள்ளது.

உறைந்த உறவு உருகுகிறது

செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் மூன் ஜே-இன் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் பேச்சை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் அமைதியை நோக்கி நகர ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என ஏற்கனவே அதிபர் மூன் தெரிவித்திருந்தார்.

சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் வட-தென் கொரிய பேச்சுவார்த்தைகளை மீட்டெடுக்கும் வாய்ப்புகள் குறித்து வேகமாக செயல்பட வேண்டும் என்றும் போட்டியில் பங்கேற்க வடகொரியாவில் இருந்து பிரதிநிதிகள் வருவதை உறுதிப் படுத்தவேண்டும் என அதிபர் மூன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதேவேளையில் சர்ச்சைக்குரிய பாலிஸ்டிக் மற்றும் அணு ஆயுத தயாரிப்பு பணிகளை வடகொரியா நிறுத்திக்கொள்வது தொடர்பாக சர்வதேச கூட்டணிகளுடன் தென் கொரியாவின் நட்பு தொடரும் என அவர் கூறியுள்ளார்.

திங்களன்று வடகொரியா தலைவர் அமெரிக்காவுக்கு எதிராக மீண்டும் அச்சுறுத்தல் விடுத்தார். மொத்த அமெரிக்க நாடும் வட கொரிய ஆயுதங்களின் இலக்கின் கீழ் இருப்பதாகவும் அணு ஆயுதத்திற்கான பொத்தான் எப்போதும் தனது மேஜை மீதே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தென் கொரியாவுக்கு ஒரு சாதகமான விஷயத்தை அவர் வழங்கினார். உறைந்த உறவு உருக வேண்டும் என அவர் கூறினார்.

''வட கொரியா மற்றும் தென் கொரியா இரண்டுக்கும் 2018 ஒரு முக்கியமான ஆண்டாகும். வடகொரியா தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. தென் கொரியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது. உறைந்த வட - தென் கொரிய உறவுகளை நாம் உருக்க வேண்டும் . இந்த ஆண்டை சரித்திரத்தில் அர்த்தமுள்ள ஆண்டாக பதிவு செய்ய வேண்டும்'' என கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு பரிசு

பியோங்சங் போட்டிகள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் லீ ஹீ-பியோம் முன்னதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப்பில் வட கொரியாவின் பங்கேற்பு குறித்த செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

''இது புத்தாண்டு பரிசு போன்றது'' என அவர் தெரிவித்துள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றுள்ள இரண்டே வட கொரிய தடகள வீரர்கள் ரியோம் - டே -ஓக் மற்றும் கிம் ஜூ- சிக் எனும் பனிச்சறுக்கு வீரர்களாவர்.

குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்பதை உறுதிப்படுத்த அதிகாரப்பூர்வ காலக்கெடுவை வட கொரியா தவறவிட்டிருந்தாலும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அழைப்பின் பேரில் இந்த இரண்டு பனிச்சறுக்கு வீரர்களும் போட்டியில் பங்கேற்க முடியும்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :