அமெரிக்காவின் குற்றச்சாட்டு இதயமற்றது: பாகிஸ்தான்

அமெரிக்கத் தலைமையின் சில சமீபத்திய கருத்துகள் பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அந்நாட்டுப் பிரதமர் ஷாகித் காகன் அப்பாஸி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குழுவின் கூட்டத்துக்கு பிறகு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஷாகித் காகன் அப்பாஸி

கோடிக்கணக்கான டாலர்களை நிதி உதவியாகப் பெற்றுக்கொண்டு, பாகிஸ்தான் அரசு தங்களிடம் பொய் கூறுவதாகவும், தீவிரவாதச் செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் ட்விட்டர் பதிவொன்றில் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுவரை தனது சொந்த வளங்களை முதன்மையாகக்கொண்டே பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறது என்றும், பாகிஸ்தான் பல்லாயிரக் கணாக்கான குடிமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உயிர்களை தியாகம் செய்துள்ளதாகவும், அந்த இழப்புகளையும், அவர்களின் குடும்பத்தினரின் வலிகளையும், இதயமற்ற முறையில் ஒரு கற்பனையான பொருளாதார மதிப்பாகச் சுருக்கிப் புறந்தள்ளிவிட முடியாது என்றும் பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது.

ஆஃப்கானிஸ்தானில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சிகளுக்கு தற்போதும் பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாகவும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பால்தான் இந்தப் பிராந்தியத்தில் அல்-கய்தா அமைப்பு ஒடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதனால், நூற்றுக்கணாக்கான பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டது உள்ளிட்ட மோசமான பின்விளைவுகளை பாகிஸ்தான் சந்தித்ததாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

ஆஃப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்ட ஒட்டுமொத்தத் தோல்விக்கு பாகிஸ்தான் பொறுப்பாகாது என்றும் கூட்டாளி நாடுகளை குறை சொல்வது ஆஃப்கானிஸ்தான் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் நீடித்த அமைதியை அடைவது எனும் கூட்டு இலக்கை எட்ட உதவாது என்றும் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டொனல்டு டிரம்ப்

அமெரிக்க அரசின் சமீபத்திய கருத்துகள் பல தலைமுறைகளாக இரு நாடுகளிடையே கட்டமைக்கப்பட்ட உறவை கருத்தில்கொள்ளவில்லை என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது. பல தசாப்தங்களாக தியாகங்கள் செய்து வந்த பாகிஸ்தான், பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு பெரும் பங்களிப்பு செய்திருப்பதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்பின் தெற்காசியாவுக்கான கொள்கை அறிவிக்கப்பட்டபின், அமெரிக்கத் தலைமியிடம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்தைக்குப் பிறகு, ஆஃப்கானிஸ்தானில் நீண்ட கால அடிப்படையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உண்டாக்குவது குறித்த இரு தரப்பினரின் கண்ணோட்டத்தை, ஒருவரை ஒருவர் எளிதாகப் புரிந்துகொள்ளும் சூழல் உருவானதாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோரின் பாகிஸ்தான் பயணமும் வலிய மற்றும் முன்னோக்கியவையாக இருந்தன என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :