வடகொரியாவின் கெளரவமும் ஒலிம்பிக் போட்டிகளும்

பிம்பம் மட்டுமே எல்லாமுமாக இருக்கும் வடகொரியா போன்றதொரு நாட்டில், ஒலிம்பிக் போட்டிகள் ஒரு பெரும் கேள்விக்குறியாகவே இருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இதுவரை 56 ஒலிம்பிக் பதக்கங்களை வடகொரியா வென்றுள்ளது

ஒலிம்பிக்கில் வெற்றிபெறும் வீரர்களும் வீராங்கனைகளும் அந்நாட்டின் புகழையும், அதன் தலைவர்களின் புகழையும் பெருமையாகப் பேசிக்கொள்ள பயன்படுத்தப்படுவர். ஆனால், தோல்விகள், குறிப்பாக தென்கொரியா, ஜப்பான், அமெரிக்க வைரிகளிடம் அடையும் தோல்விகள் வடகொரியா தன்னைப் பற்றி உருவாக்கி வைத்துள்ள பிம்பத்தையே தகர்க்கும் வகையில் இருக்கும்.

தென்கொரிய நகரான பியங்சங்கில் அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா கலந்துகொண்டால், அதிகாரப்பூர்வமாக இன்னும் போரில் ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படும் இந்த இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ராஜதந்திர சர்ச்சைகளில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.

வெறும் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே அந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றிருந்தாலும், சமீபத்திய அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் மோதலில் இருக்கும் வடகொரியாவுக்கு இது ஒரு கௌரவப்பிரச்சனை.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 1964 முதலும், கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 1972 முதலும் பங்கேற்றுவரும் வடகொரியா இதுவரை, 16 தங்கம் உள்பட, 56 பதக்கங்களை வென்றுள்ளது. அவற்றில் குளிர்காலப் போட்டிகளில் வென்ற பதக்கங்கள் இரண்டு மட்டுமே.

நாட்டின் பொருளாதார அளவுடன், வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடியுள்ள நாடுகளின் பட்டியலில் வட கொரியா ஏழாவது இடத்தில் இருக்கும்.

படத்தின் காப்புரிமை Reuters

தோற்கும் போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்க்க முடியாது

வடகொரியாவின் விளையாட்டுப் போட்டிகள் தாமதமாகவே ஒளிபரப்பு செய்யப்படும். தங்களுக்கு வெற்றி இல்லாவிட்டால், அந்தப் போட்டி ஒளிபரப்பு செய்யப்படாது.

தென்கொரியாவில் 2014இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், வடகொரிய ஆண்கள் கால்பந்து அணி, தென்கொரியாவை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது.

அப்போட்டியில் 1-0 என்ற கணக்கில் தென்கொரிய அணி வெற்றிபெற்றது. அந்தப் போட்டி வடகொரியாவின் ஊடக வரலாற்றில் இருந்தே அழிக்கப்பட்டது. "வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகத்தின்படி, அப்போட்டியில் முடிவு வடகொரியர்கள் யாருக்குமே தெரியாது," என்கிறார் பிபிசியின் அலிஸ்டர் கோல்மேன்.

தோற்கும் வீரர்கள் என்ன ஆகிறார்கள்?

வெற்றி பெறும் வீரர்களுக்கு கார்கள், அடுக்குமாடிக் குடியிருப்பு என பல பரிசுகள் வழங்கப்படும். வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டு, அந்த வெற்றிக்கு காரணம் வடகொரியாவின் தலைவர்களும் அந்நாட்டு அரசுமே என்று சொல்லப்படும்.

தோல்வி அடையும் வீரர்கள் சிறைக்கு அனுப்பப்படுவதாக கூறப்பட்டாலும், அது உறுதி செய்யப்படாத தகவல் என்கின்றனர் வல்லுநர்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

பெய்ஜிங்கில் 1990இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜூடோ போட்டியில் தோல்வி அடைந்த லீ சாங் சூ, தான் தோல்வி அடைந்ததால் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்ய அனுப்பப்பட்டதாகக் கூறுகிறார். வடகொரியாவின் இருந்து தப்பி அவர் இப்போது தென்கொரியாவில் வசிக்கிறார். எனினும் சமீப ஆண்டுகளில் நிலைமை மாறி இருக்கலாம்.

அதிகாரிகளின் குடும்பங்களை போலவே, விளையாட்டு வீரர்களின் குடும்பங்களும் தப்ப முயன்றால் பல பாதிப்புக்கு ஆளாகக் கூடும்.

புறக்கணிப்பும் தாக்குதல்களும்

சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது நடத்திய படையெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1980இல் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணித்ததைத் தொடர்ந்து, 1984இல் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை, வடகொரியா உள்பட சோவியத் தலைமையிலான கம்யூனிச நாடுகள் புறக்கணித்தன.

ஆனால் 1988இல் தென்கொரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளே வடகொரியாவை கோபப்படுத்தியது.

இரு கொரிய நாடுகளும் இணைந்து அந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மாற்றப்பட வேண்டும் என்று அப்போது வடகொரியா முயற்சி செய்தது.

படத்தின் காப்புரிமை Alamy
Image caption தென்கொரிய நகரான பியங்சங்கில் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடைபெறவுள்ளது.

பல மறைமுக முயற்சிகளின் ஒரு பகுதியாக, 1987இல் கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 115 பேர் கொல்லப்பட்டனர்.

பிரிவிலிருந்து உறவை நோக்கி

வடகொரியா இந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொண்டால், அதில் பங்கேற்க தேர்வாகியுள்ள இரு தடகள வீரர்களான கிம் ஜூ-சிக் 25, மற்றும் ரியாம் டே-ஒக் 18 ஆகியோர் நாட்டின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியிருக்கும்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க வடகொரியா அதிபர் ஆர்வம் காட்டக் காரணம் சமீபத்திய ஏவுகணை சோதனைகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் நற்பெயரை மீட்கும் முயற்சி என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

வடகொரியா இதில் பங்கேற்பதால், அதைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் எந்த ஏவுகணையும் ஏவப்படாது என்று தென்கொரியா நம்புகிறது.

இதில் வடகொரியா பங்கேற்பது, தென்கொரியாவுடன் நல்லுறவு கொண்டு, தென்கொரியா மற்றும் அமெரிக்கா இடையே ஒரு பிளவை உண்டாக்குவதற்கான ஒரு முயற்சி என்றும் சிலர் கருதுகின்றனர்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்