டிரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய புத்தகத்தில் உள்ள 11 அதிரடித் தகவல்கள்

  • 5 ஜனவரி 2018

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு டொனால்டு டிரம்ப் குழம்பி போனார் என்றும், பதவியேற்றபோது அவர் உற்சாகமாக இல்லை என்றும், வெள்ளை மாளிகை குறித்து அவருக்கு அச்ச உணர்வே இருந்தது என்றும் ஊடகவியலாளர் மைக்கேல் வோல்ஃப் புதிதாக எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெள்ளை மாளிகையில் டிரம்ப்

"Fire and Fury: Inside the Trump White House" எனும் அந்தப் புத்தகத்தில் இவான்கா டிரம்ப்பிற்கு அதிபர் ஆவதற்காக ரகசிய ஆசை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் தரப்பில் தடை கோரப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் உள்ள 11 அதிரடித் தகவல்கள் இதோ.

1. டிரம்ப் மகன் செய்தது தேச துரோகம்

வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் ஸ்டீவ் பேனன், டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜுனியர் ரஷ்ய நாட்டவர்களை சந்தித்தது ஒரு தேச துரோகம் என்று கருதினார். ஹிலாரி கிளிண்டன் குறித்த தகவல்களை அளிக்க ஜூன் 2016-இல் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் ரஷ்ய தரப்பினர் முன்வந்தனர்.

2. வெற்றியால் குழம்பிப்போன டிரம்ப்

தேர்தல் முடிவு வந்த நாளன்று, டிரம்ப் வெற்றி பெறுவது உறுதியானபின், தனது தந்தை ஒரு பேயைப் பார்த்ததை போல அமர்ந்திருந்தார் என்று டிரம்பின் மகன் தனது நண்பர் ஒருவரிடம் கூறினார். மெலானியா டிரம்ப் கண்ணீரில் இருந்தார். நடந்ததை நம்ப முடியாமல் குழப்பத்துடன் இருந்த டிரம்ப், அமெரிக்காவின் அதிபராக தாம் முழு தகுதியுள்ளவர் என்று நம்பத் தொடங்கியதை ஸ்டீவ் பேனன் கண்டார். ஆனால், டிரம்ப் குழப்பம் அடைந்து காணப்பட்டதை பேனன் யாரிடமும் கூறவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மனைவி மெலானியாவுடன் டிரம்ப்

3. பதவியேற்பின்போது டிரம்ப் மகிழ்ச்சியாக இல்லை

முன்னணி நட்சத்திரங்கள் தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்த மறுத்துவிட்டதால், டிரம்ப் மிகவும் கோபமாக இருந்தார். தனது மனைவி மெலானியாவுடன் அவர் சண்டை போட்டதுபோல அன்று தோன்றியது, மெலானியா அழும் நிலைக்கே சென்றுவிட்டார்.

4. நண்பர்களின் மனைவிகளை இழுக்க முயல்வார் டிரம்ப்

தனது நண்பர்களின் மனைவிகளை வசீகரிக்க, நீங்கள் விரும்பிய வகையில் ஒரு வேளை உங்கள் கணவர் இல்லாமல் இருக்கலாம் என்று டிரம்ப் தனது நண்பர் ஒருவரின் மனைவியிடம் கூறினார் என்று இப்புத்தகத்தை எழுதிய மைக்கேல் வோல்ஃபிடம் டிரம்பின் இன்னொரு நண்பர் கூறியுள்ளார்.

"உங்கள் மனைவியுடன் பாலுறவு கொள்வதை இன்னும் நீங்கள் விரும்புகிறீர்களா," என்பது போன்ற கேள்விகளை தன் நண்பர்களிடம் கேட்கும் டிரம்ப், அந்த உரையாடலைப் பதிவு செய்து அவர் மனைவிகளிடம் போட்டுக்காட்டுவார்.

5. டிரம்ப்க்கு வெள்ளை மாளிகை அச்சம் தந்தது

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெள்ளை மாளிகை

டிரம்ப் வெள்ளை மாளிகை சலிப்பையும் சில நேரங்களில் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகவும் உணர்ந்தார். ஜான் கென்னடிக்கு பிறகு முதல் முறையாக அதிபரும் அவரது மனைவியும் தனித்தனி அறைகளில் தங்கினர். தனது வாழ்வின் பெரும் பகுதியை தனது சொந்த விருப்பத்தின்பேரில் வாழ்ந்த டிரம்புக்கு, வெள்ளை மாளிகையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வது சற்று அதிர்ச்சியாக இருந்தது, என்கிறார் பிபிசியின் ஆண்டனி சர்ச்சர்.

6. இவான்காதான் அதிபராகலாம் என்று நம்புகிறார்

தங்களுக்குத் தெரிந்த பலரது ஆலோசனைகளையும் மீறி, டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் தனது கணவர் ஜாரெட் உடன் வெள்ளை மாளிகையில் குடியேறினார். அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஹிலாரி கிளிண்டன் அல்ல, தாம்தான் என்று அவர் நம்புகிறார் .

7. தந்தையின் தலைமுடியை கேலி செய்த இவான்கா

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தந்தையின் தேர்தல் பிரசாரத்தில் இவான்கா முக்கிய பங்காற்றினார்

ஒரு அந்நிய உணர்வுடனேயே தனது தந்தையை அணுகினார் இவான்கா டிரம்ப். முன்னும், பக்கவாட்டிலும் முடியால் சூழப்பட்ட ஒரு காலித் தட்டு என்று இவான்கா தனது தந்தையின் கேசம் குறித்து தனது நண்பர்களிடம் கேலியாகக் கூறியுள்ளார். முடி உதிர்வைக் குறைப்பதற்கான சிகிச்சைக்குப் பிறகு, டிரம்பின் தலையை ஒரு 'சூழப்பட்ட தீவு' என்று இவான்கா கூறியுள்ளார். ஆனால், டிரம்ப் எப்போதும் தனது கேசம் குறித்து பெருமைப்படுபவர் என்றும் அது அவரது அடையாளங்களில் ஒன்று என்றும் கூறுகிறார் ஆண்டனி சர்ச்சர்.

8. தனது முன்னுரிமைகளை அறியாமல் இருந்தார்

அவர் அதிபராகப் பொறுப்பேற்று ஆறு வாரங்கள் ஆனபின்பு, வெள்ளை மாளிகையின் துணை தலைமை அதிகாரி கேட்டி வால்ஷ், ஒரு முறை டிரம்பின் ஆலோசகரும், மருமகனுமான குஷ்னரிடம், அதிபராக அவரது முதல் மூன்று முன்னுரிமைகள் என்ன என்று கேட்டபோது அதைப்பற்றி பேசித்தான் முடிவு செய்ய வேண்டும் என்று குஷ்னர் கூறியுள்ளார்.

9. ரூபர்ட் முர்டாக் மீது டிரம்ப் மதிப்பு கொண்டிருந்தார்

டிரம்ப் தேர்வு செய்யப்பட்டபின் தன்னுடனான சந்திப்புக்கு ஊடக தொழில் அதிபர் ரூபர்ட் முர்டாக் தாமதமாக வந்தபோது, "அவர் மிகச் சிறந்தவர்களில் ஒருவர். கடைசியாக இருக்கும் சிறந்தவர்களில் ஒருவர். அவரைப் பார்க்க நீங்கள் பொறுத்திருக்க வேண்டும்," என்று அங்கு வந்திருந்த விருந்தினர்களிடம் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தொழில் அதிபர் ரூபர்ட் முர்டாக் உடன் அடிக்கடி தொலைபேசியில் டிரம்ப் உரையாடுவார் என்று கூறப்படுகிறது

தனது தேர்தல் பிரசாரத்தின்போது ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியுடன் சில நேரங்களில் சச்சரவில் ஈடுபட்டிருந்தார் டிரம்ப். ஒரு முறை அந்த தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியை புறக்கணித்தார். எனினும், அவரது வெற்றிக்கு பின் ஃபாக்ஸ் நியூஸ், அவருக்கு ஆதரவான தொலைக்காட்சிகளில் ஒன்றானது என்கிறார் ஆண்டனி.

10. முர்டாக் டிரம்ப்-ஐ ஒருமுறை 'முட்டாள்' என்றார்

சிலிகான் பள்ளத்தாக்கின் தகவல் தொழில்நுட்ப நிறுவங்களின் அதிகாரிகள் குறித்து ஒரு முறை டிரம்ப் முர்டாக்கிடம் பேசும்போது, "அவர்களுக்கு எனது உதவி இப்போது தேவை. ஒபாமா அதிபராக இருந்தபோது, தங்கள் சட்டைப் பையில் அவரை வைத்திருந்தனர். இப்போது எச்1-பி விசா விவகாரத்தில் நான் அவர்களுக்கு தேவைப்படுகிறேன்," என்று கூறினார்.

வெளிநாட்டில் இருந்து குடியேறுவோர் குறித்த கொஞ்சம் தாராளமான அணுகுமுறையுடன் இருக்குமாறு முர்டாக் கூறினார். அதற்கு 'பார்ப்போம்,' என்று டிரம்ப் கூற, "முட்டாள்" என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

11. ரஷ்ய உறவுகள் சிக்கலைத் தரும் என முன்னரே அறிந்திருந்த ஃபிளின்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரஷ்ய தொடர்பு குறித்து விசாரித்த நீதிமன்றத்தில் மைக் ஃபிளின்

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக் ஃபிளின் ரஷ்யாவுடனான உறவு அச்சுறுத்தும் வகையில் இருக்கும் என்று முன்னரே அறிந்திருந்தார். ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியதற்காக ரஷ்யர்களிடம் இருந்து 45,000 டாலர் பணம் வாங்குவது நல்லதல்ல என்று தங்கள் நண்பர்கள் எச்சரித்தபோது, "நாம் வெற்றிபெற்றால்தான் அது ஒரு பிரச்சனை," என்று அவர் அப்போது கூறியுள்ளார்.

அமெரிக்க நீதித் துறை நடத்திய விசாரணையில் ஃபிளின் செய்தது குற்றம் என்று பின்னர் கூறப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :