இரானில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஏன்?

  • 5 ஜனவரி 2018

"இரான் போராட்டம் ஒருநாளில் முடிந்துவிடும் எதிர்ப்பு போராட்டமாக இருக்கும் பிறகு மறைந்து விடும் என்றும் நினைத்தேன்" என்கிறார் பிரிட்டிஷ்-இரானியர் ஆரியனே மொஷிரி. இரான் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பரவிய இரான் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பெருமளவிலான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இரான் பெண் ஒருவர்

இந்தப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 22 பேர் உயிரிழந்தனர்.

எதிர்ப்பாளர்கள் "தோற்கடிக்கப்பட்டனர்" என இரானிய புரட்சிகரக் காவல்படை (ராணுவம்) அதிகாரிகள் கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Ariane Moshiri
Image caption ஆரியனே மொஷிரி

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமியப் புரட்சியின்போது ஆரியனே மொஷிரியின் பெற்றோர்கள் இரானை விட்டு வெளியேறினார்கள்

ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்கள் சில ஆண்டுகளாக உருவாகிவந்தாலும், சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போது ஆர்ப்பாட்டங்கள் வலுத்துள்ளதைப் பற்றி ஆச்சரியப்படுகிறார் 23 வயதான ஆரியனே.

"இது(ஆர்ப்பாட்டம்) உண்மையில் திடீரென ஏற்பட்டது" என்று அவர் நியூஸ்பீட் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

"மக்கள் அனைவரின் குரலும் தேர்தலில் ஒலித்ததாக நினைக்கிறீர்களா?" என்று அவர் கேட்கிறார்.

நிறைய இளைஞர்களை பாதிக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைப்பதாக உறுதியளித்த பிறகே ஹசன் ரூஹானி கடந்த ஆண்டு மே மாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரான் தன்னுடைய அணு ஆயுத ஆய்வைக் கைவிடுவதற்குப் பதிலீடாக இரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தும் திட்டத்தில் பிரிட்டன் உள்ளிட்ட ஆறு நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் ரூஹானி கையெழுத்திட்ட பின்னர் வழங்கப்பட்ட வாக்குறுதி இது.

ஆனால் இந்த உடன்படிக்கையினால் இரானியர்களுக்கு பொருளாதார நன்மைகள் எதுவும் உண்மையிலுமே கிடைக்கவில்லை. அதனால்தான் இளைஞர்கள், தொழிலாளர் வர்க்கத்தினர் என பலதரப்பட்ட மக்கள் இணைந்து கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கினார்கள்.

"அந்த ஒப்பந்தம் சமூக-பொருளாதார நலன்களைப் பற்றி மட்டும் அல்ல, அரசியல் ஆதாயத்தையும் கொண்டது என்பது விரைவில் வெளிப்பட்டது" என்கிறார் ஆரியனே.

"எதிர்ப்பாளர்கள் எதிர்காலத்தை பற்றி பேசுகிறார்கள், அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, பலர் மாதாந்திரத் தவணை கடனில்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

"சிரியாவில் ஏன் பணம் செலவிடுகிறீர்கள், ஏன் மக்களான எங்களுக்கு அரசு பணம் செலவழிப்பதில்லை?" என்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டங்களில் கேட்கமுடிந்த்து என்கிறார் ஆரியனே.

படத்தின் காப்புரிமை Ariae Moshiri
Image caption ஆரியனே மொஷிரி

இரான் அரசு 2013இல் செலவுகளை குறைக்கும் சிக்கன நடவடிக்கைகளை ஆரம்பித்ததை, "ஒரு குறிப்பிட்ட அளவுக்கு" இங்கிலாந்துடன் ஒப்பிடலாம் என்றும் ஆரியனே கூறுகிறார்.

"அரசின் மேம்பாட்டுத் திட்டங்களில் நிறைய குறைக்கப்பட்டன."

"வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் சிலர் ஒரேவிதமான அழுத்தங்களைக் கொண்டிருப்பார்கள் என்பதை அது உங்களுக்கு சொல்கிறது." ஆனால், ஒப்பீடு இத்தோடு முடிந்துவிடுகிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption மில்லியன் கணக்கான இரானியர்களால் பயன்படுத்தப்படும் செயலி டெலிகிராம் அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளது

பேஸ்புக், கூகுள் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட பிரபல தளங்கள் இரானில் தடை செய்யப்பட்டுள்ளன.

போராட்டங்கள் தொடர்பான வீடியோக்கள், செய்திகளை பிறருடன் பகிர்வதை தடுக்கும்வகையில் நாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த டெலிகிராம் செயலியின் செயல்பாடு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

"இரானில், ஒவ்வொருவருக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை இருப்பதாக கூறுகிறார்கள், ஆனால் நீங்கள் 450 பேரை கைது செய்து அது பொய் என்று நிரூபித்துவிட்டார்கள்" என்று ஆரியனே கூறுகிறார்.

"எங்களுக்கும் இரான் மக்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சனை என்னவென்றால், நாங்கள் அனைவரும் பொருளாதார நிலையில் ஏறக்குறைய ஒன்றுபோல் இருக்கிறோம்" என்று ஆரியனே மேலும் கூறுகிறார்.

"ஆனால் குறைந்தபட்சம் எங்கள் அதிருப்தியை வெளிப்படையாக வெளிப்படுத்தும் உரிமை இங்கிலாந்தில் எங்களுக்கு இருக்கிறது" என்று முத்தாய்ப்பாய் கூறுகிறார் ஆரியனே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :