போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

  • 5 ஜனவரி 2018

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை தொடர்பாக தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்ததையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு தடைகோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் ஊதிய உயர்வு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசுடன் நேற்றிரவு (வியாழக்கிழமை) நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்ததையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடைகோரி தமிழக அரசு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த்து.

அதை சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி அரசு தரப்பை எடுத்துரைத்தார்.

ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது. தமிழக அரசின் வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டார்.

Image caption போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் முதல்வர் எடப்பாடி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பத் தவறினால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் அதை தொழிலாளர்கள் தான் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில் தொழிலாளர் விரோத ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட அரசு பிரதிநிதிகள் முயற்சித்ததாகவும், அதனால்தான் இந்த திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் என்றும் சி.ஐ.டி.யூ சங்கத்தின் மாநில தலைவர் அ.சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருச்சி, மதுரை, கோவை, சேலம், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொழிலாளர்களின் திடீர் போராட்டம் காரணமாக பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், தினக்கூலி ஊழியர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக விளம்பர பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மலைக்கோட்டை, கண்டோன்மென்ட், தீரன்நகர் கிளைகளை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Image caption போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் ஸ்தம்பித்த தமிழகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 1.43 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2016 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு அவர்களுக்கான 12-வது ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததது. இதனையடுத்து, 13-வது ஊதிய ஒப்பந்ததத்தை அமல்படுத்துவது தொடர்பாக பல கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது வந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.57 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என்று தொழிலாளர் சங்கங்கள் கேட்கின்றனர். ஆனால், அரசோ நான்காண்டுகளுக்கு 2.44 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்கமுடியும் என்கிறது.

அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து தொழிற் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ்: