எகிப்தில் பலூன் விபத்து - சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

  • 5 ஜனவரி 2018
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விபத்துக்குள்ளான சூடான காற்று மூலம் இயங்கும் பலூன்

வெப்ப காற்று பலூன் ஒன்று எகிப்தின் லக்ஸர் நகரத்துக்கு அருகே விபத்துக்குள்ளானதில் ஒருவர் இறந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான அந்த பலூனில் இருபதுக்கும் மேற்பட்டோர் அதில் பயணித்தனர். இறந்த சுற்றுலா பயணி தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவராவார்.

பழைமையான நகரத்தின் மீது பலூன் பயணித்தபோது வலுவான காற்று வீசியதால் மலைப்பகுதியின் மீது அந்த பலூன் விழுந்தது என அறிக்கைகள் கூறுகின்றன. 2013-ஆம் ஆண்டு வெப்பக் காற்று பலூன் ஒன்று லக்ஸர் நகரில் தீப்பிடித்ததில் அதில் பயணித்த 19 சுற்றுலா பயணிகள் இறந்தனர்.

லக்ஸர் ஆளுநர் மஹமூத் படர் வெள்ளிகிழமை நிகழ்ந்த இந்த விபத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகள் நலன் குறித்து ஆய்வு செய்ததாகவும் ஏ எஃப் பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை CHARLES ONIANS
Image caption லக்ஸர் நகரத்தில் பறக்கும் பலூன்கள்

லக்ஸர் நகரத்தில் பறக்கும் பலூன்கள் காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.விபத்துக்குள்ளான பலூனில் பயணித்த அயல்நாட்டு பயணிகளில் தென் ஆஃப்ரிக்கா, அர்ஜென்டினா, ஸ்பெயின் மற்றும் எகிப்திய சுற்றுலா பயணிகளும் அடங்குவர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் 20 ஆம்புலன்ஸ் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என எகிப்து அரசின் மேனா நிறுவன செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பழைமையான லக்சர் நகரமானது தென் எகிப்தில் உள்ள நைல் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள தொல்லியல் தளங்களை காண சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் பிரபலமான சுற்றுலா தளமாகியுள்ளது.

வெப்பக் காற்று மூலம் பயணிக்கும் பலூன் இதே பகுதியில் இதற்கு முன்னதாக விபத்துக்குளாகியிருக்கிறது.முன்னர் நடந்த இதே போன்ற விபத்தில் 20 பேருக்கு மேல் காயமடைந்ததால் 2016-ஆம் ஆண்டு பலூன் விமானங்கள் இந்த பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது .

2013ல் நடந்த கொடூரமான விபத்தானது பலூன் வெடித்ததால் ஏற்பட்டது. அதில் பிரிட்டன், பிரான்ஸ், ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாட்டைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :