வோட்காவை காலி செய்துவிட்டு 8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க பாட்டிலை வீசிச் சென்ற திருடர்

  • 8 ஜனவரி 2018
படத்தின் காப்புரிமை DARTZ MOTOR COMPANY

தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்த மது பாட்டில் மற்றும் அதிலிருக்கும் வைரம் பதித்த மூடி என இதன் மொத்த மதிப்பு ரூ.8.23 கோடி (1.3 மில்லியன் டாலர்). ஆனால், டென்மார்க் நாட்டின் மதுவிடுதியில் இருந்து அதைத் திருடிச் சென்றவருக்கோ அதில் இருந்த வோட்காவின் மீதுதான் போதை போலும்.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள 'கேஃப் 33' மது விடுதியில் இருந்து அதைத் திருடிச் சென்ற நபர் நகரில் உள்ள கட்டுமானப் பகுதியில் விட்டுச் சென்றுள்ளார். பாட்டிலைக் கண்டெடுத்த போலீசார் பாட்டில் உடைக்கப்படவில்லை என்றும், ஆனால் அது காலியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

பாட்டிலைக் கடனாகப் பெற்ற மதுவிடுதி அதில் ரஸ்ஸோ-பால்டிக் வோட்காவை நிரப்பி காட்சிக்கு வைத்திருந்தது. அந்த விடுதிக்குள் நுழைந்த நபர் பாட்டிலை தூக்கிக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது.

அதில் இருந்த வோட்கா என்ன ஆனது என்று தெரியவில்லை என்று கோபன்ஹேகன் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ரியட் தோபா ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

''கட்டுமானப் பகுதியில் வேலை செய்த ஒருவர் அந்த பாட்டிலை கண்டெடுத்துள்ளார். நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்," என்று கூறிய மதுவிடுதி உரிமையாளர் பிரையன் இங்க்பெர்க் "நல்ல காலம் வோட்கா கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார்" என்கிறார்.

படத்தின் காப்புரிமை David Silverman

முன்பு இந்த பாட்டிலில் இருந்த ரஸ்ஸோ-பால்டிக் வகை வோட்கா தன்னிடம் நிறைய இருப்பதாகவும், எனவே அதனை மீண்டும் நிரப்பி காட்சிக்கு வைத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். செவ்வாய்க்கிழமை அந்த பாட்டில் திருடு போனதும் டிவி2-க்கு வழங்கிய பேட்டியில் அந்த பாட்டிலை தாம் லாட்வியாவைச் சேர்ந்த 'டார்ட்ஸ்' மோட்டார் கம்பெனியிடம் இருந்து கடனாக வாங்கியதாக அவர் கூறியிருந்தார்.

அந்த கார் தொழிற்சாலையின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக அந்த வோட்காவை தாங்கள் உருவாக்கியதாக ரஷ்ய கார் உற்பத்தி நிறுவனமான ரஸ்ஸோ-பால்டிக் தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்