குடியுரிமை மறுத்த தென்கொரியா: தவிக்கும் வடகொரியர்

வடகொரியாவின் சரிவொன் நகரத்தில் பிறந்து, அங்கு 30 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறுகிறார் கிம் சக்- சுல். தென் கொரியாவில் மூன்று ஆண்டுகள் இருந்ததாகவும், ஆனால் தம்மிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் குடியுரிமை மறுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

Image caption கிம் சக்- சுல்

குடும்பத்துடன் சீன எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற போது தமக்கு 4 வயது என்று குறிப்பிட்ட கிம், அவரது தந்தை மற்றும் இரு சகோதரர்கள் மட்டும் வெற்றிகரமாக எல்லையை தாண்டிவிட்டதாகவும், தன் தாய் மற்றும் மூத்த சகோதரர் ஒருவரும் தன்னுடன் பிடிப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

தன் தாய் பல மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க, தன்னுடன் பள்ளியில் படித்தவர்கள் 'தேசதுரோகி' என்று தன்னை இழிவுப் படுத்தியதாக அவர் கூறுகிறார்.

படிப்பை முடித்துவிட்டு, வடகொரியாவில் உள்ள ஹ-ரியொங் நகரத்தில் ரயில் தொழிற்சாலையில் பணிபுரிய தொடங்கியதாகவும், சில ஆண்டுகள் கழித்து ஏதோ ஒரு இடத்தில் உள்ள தொழிற்சாலைக்கு, அரசாங்கம் தன்னை பணியிட மாற்றம் செய்ததாகவும் கிம் தெரிவித்தார்.

அங்கு சென்றால் சித்ரவதையை அனுபவிக்க நேரும் என்று தெரிந்து அதில் விருப்பம் காட்டவில்லை என்றாலும் அதனை மறுத்தால் தனக்கு சிக்கல் நேரும் என்பது அவருக்கு தெரிந்திருந்தது.

எனினும், இட மாற்றத்தை மறுத்ததால், தாம் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கிம் கூறினார்.

இந்நிலையில், சீனாவிற்கு தப்பிச் சென்ற தன் தந்தை, நல்ல நிலையை அடைந்து மறுமணம் செய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"என் மோசமான சூழ்நிலையை உணர்ந்த என் தந்தை, லஞ்சம் கொடுத்து, வட கொரியாவில் இருக்கும் என் குடும்பத்திற்கு சீன குடியுரிமை பெற்றார்."

மலைகளின் வழியே மிகந்த சிரமத்துடன், சீனாவின் ஜிலின் மாகாணத்தின் யான்பியனுக்கு கடந்து சென்றதாக கிம் சக்- சுல் கூறுகிறார்.

சில காலங்கள் கழித்து, வட கொரியாவை விட்டு வெளியேறிய ஒருவரை திருமணம் செய்து கொண்ட கிம், அவர்களுக்கு ஒரு மகன் இருப்பதை குறிப்பிட்டார்.

ஆனால், உண்மையில், சீனாவில் வாழ்வது தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றும் தென் கொரியாவிற்கு செல்ல ஏங்கியதாகவும் அவர் கூறினார்.

தான் வடகொரியாவில் இருந்ததிற்கான போதுமான ஆவணங்களை வழங்க முடியவில்லை என்பதால், தனக்கு புகலிடம் அளிக்க தென் கொரிய தூதரகம் மறுத்துவிட்டதாக கிம் தெரிவித்தார்.

போதிய ஆவணங்கள் இருக்கும் வட கொரியர்களுக்கு மட்டுமே குடியிரிமை வழங்க முடியும் என்பது தென் கொரியாவின் அதிகாரப்பூர்வ கொள்கையாகும்.

ஆனால், என் மனைவிக்கும் மகனுக்கும் வட கொரியாவில் இருந்து வெளியேறியதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்ததினால் அவர்களுக்கு குடியுரிமை கிடைத்தது என்கிறார் கிம்.

தன் மகன் தென் கொரியாவில் வளர, கிம் மீண்டும் சீனாவிற்கே அனுப்பப்பட்டார்.

பின்பு, வடகொரியாவில் இருந்து வெளியேறிய ஒருவரை தன் மகன் திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு அழகான ஒரு பேத்தி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

Image caption கிம் சக்- சுல்

2015ஆம் ஆண்டு நீண்ட முயற்சிகளுக்கு பின் தென் கொரியா நாட்டிற்கு செல்ல விசா பெற்ற கிம், அப்போதில் இருந்து அங்கேயே தங்கி வருகிறார்.

தான் "வெளியாளாக" பார்க்கப்படுவது வருத்தமளிப்பதாகவும், உள்ளூர் மக்கள் யாரும் அவரை மதிப்பதில்லை என்றும் கிம் கூறுகிறார்.

தென் கொரியாவில் பணி அல்லது தொழில் செய்ய தமக்கு அனுமதி இல்லை என்பதால், தன் மனைவியை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார்.

மகன் நடத்தி வரும் தொழிலில் தனது மனைவி உதவி செய்து வருவதாக குறிப்பிடும் கிம், தன் குடியுரிமைக்கான விண்ணப்பங்களை தென் கொரியா தொடர்ந்து நிராகரித்து வருவதால், வழக்கறிஞரை அணுக உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது வட கொரியாவிற்கும் திரும்பிச் செல்ல முடியாமல், தென் கொரியாவும் தன்னை குடிமகனாக அங்கீகரிக்க மறுப்பதால், எங்கு செல்வது என்ற கேள்விக்குறியுடன் இருப்பதாக கூறுகிறார் கிம் சக்- சுல்.

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ்: