ஆண், பெண் ஊதிய பாகுபாடு: பிபிசியின் சீன ஆசிரியர் ராஜிநாமா

  • 8 ஜனவரி 2018
ஆண், பெண் ஊதிய பாகுபாடு: பிபிசியின் ஆசிரியர் ராஜிநாமா

பிபிசியின் பணியாற்றும் சக ஆண்ஊழியர்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு ஊதிய சமத்துவமின்மை இல்லை என கூறி பிபிசி சீன ஆசிரியர் கேரி கிரேசி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

30 வருடத்திற்கு மேலாக பிபிசியில் பணியாற்றும் கிரேசி, பிபிசியில்,'' ரகசிய மற்றும் சட்டவிரோத ஊதிய கலாசாரம்'' இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் .

1,50,000 பவுண்டுக்கு அதிகமாக ஊதியம் பெரும் பிபிசியின் முக்கிய நட்சத்திரங்களில் மூன்றில் இருவர் ஆண்கள் என்ற தகவல் வெளியானதை அவர் சுட்டிக்காட்டினார்.

''பெண்களுக்கு எதிரான பாகுபாடு நிறுவனத்தில் இல்லை'' என பிபிசி தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பிபிசியின் பெய்ஜிங் அலுவலகத்தில் தனது ஆசிரியர் பதவியை ராஜிநாமா செய்ததாக கூறியுள்ளார் கிரேசி. ஆனால், பிபிசியில் அவர் தொடர்ந்து பணியாற்ற உள்ளார்.

டி.வி. நியூஸ்ரூமில் தனது முந்தைய பதவிக்குத் திரும்புவதாக கூறியுள்ள அவர், ''அங்கு சமமான ஊதியம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்'' எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் மாண்டரின் மொழியைச் சரளமாக பயன்படுத்தக்கூடிய கிரேசி, தனது வலைப்பதிவில் இக்கடிதத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு 1,50,000 பவுண்டுக்கு அதிகமாகச் சம்பாதிக்கும் அனைத்து ஊழியர்களின் ஊதியத்தையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிபிசிக்கு ஏற்பட்டது.

பிபிசியின் சர்வதேச ஆசிரியர்களில், சக பெண் ஆசிரியர்களைவிட இரு ஆண்கள் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான ஊதியம் பெறுவதை கண்டறிந்தபோது கலங்கிபோனதாக கிரேசி கூறியுள்ளார்.

பிபிசியின் அமெரிக்க ஆசிரியர் ஜான் சோபெல் 2,00,000 முதல் 2,49,999 பவுண்டு ஊதியம் பெறுவதும், மத்திய கிழக்கு ஆசிரியர் ஜெர்மி போவென் 1,50,000 முதல் 1,99,999 பவுண்டு ஊதியம் பெறுவதும் ஜூலை மாதம் வெளிப்படுத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை @BBCCARRIE

கிரேசியின் பெயர் அந்தப் பட்டியலில் இல்லை. அப்படி என்றால் கிரேசி 1,50,000 பவுண்டுக்கும் குறைவாக ஊதியம் பெறுகிறார் என அர்த்தம்.

ஆண்கள் மற்றும் பெண்கள் சமமான வேலை செய்வதால் கட்டாயம் சம ஊதியம் பெற வேண்டும் என 2010 சமத்துவ சட்டம் கூறுகிறது எனவும் தனது கடிதத்தில் கிரேசி குறிப்பிட்டுள்ளார்.

பிபிசியின் நான்கு சர்வதேச ஆசிரியர்களும் சமமாக ஊதியம் பெற வேண்டும் என தான்கோரியதாக கிரேசி கூறியுள்ளார்.

இதற்குப் பதிலாக பிபிசி எனக்குப் பெரிய சம்பள உயர்வை அளித்தது. ஆனாலும், இது சமத்துவ சம்பளத்திற்குக் குறைவாக இருந்தது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

நான் ஏற்கனவே நன்றாகச் சம்பளம் பெறுகிறேன் என்று நம்புகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

கிரேசியின் ராஜிநாமா பிபிசிக்கு மிகப் பெரிய தலைவலி என பிபிசி ஊடக ஆசிரியர் அமோல் ராஜன் தெரிவித்துள்ளார்.

ஊதிய சமத்துவமின்மை தொடர்பான பிரச்சனையை தீர்க்க பிபிசி வாக்குறுதி அளித்துள்ளது எனவும் ராஜன் கூறியுள்ளார்.

பிபிசியின் பெண் செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆண், பெண் ஊதிய விவரங்களை தற்போது பல நிறுவனங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது, பல நிறுவனங்களைவிட பிபிசி சிறப்பாக செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது'' என கூறியுள்ளார்.

பிபிசியின் ஊதிய சமத்துவமின்மையை 2020க்குள் முடிவுக்குக் கொண்டுவர பிபிசியின் பொது இயக்குநர் லார்ட் ஹால் உறுதி எடுத்துள்ளார். ''ஊதியம், நியாயம், பாலினம் மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் என்ன சிறப்பாக செயல்பட முடியுமோ அதற்கு பிபிசி ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்'' எனவும் லார்ட் ஹால் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்