அமெரிக்க உதவி நிறுத்தப்பட்டால், பாகிஸ்தானில் என்னவெல்லாம் நடக்கும்

  • 11 ஜனவரி 2018

பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத தொடரமைப்புகள் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த அனைத்து பாதுகாப்பு உதவிகளையும் ஏறக்குறைய நிறுத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துவிட்டது. ஆனால் அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தி பாகிஸ்தானில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

படத்தின் காப்புரிமை AFP
Image caption அமெரிக்காவின் நிதி வெட்டுக்கு எதிராக போராடும் பாக்கிஸ்தானிய எதிர்ப்பாளர்கள்

அமெரிக்க உதவி எவ்வளவு குறைக்கப்படும் என்று இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை என்றாலும், கிட்டத்தட்ட 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு நிதியுதவி குறைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவு ராணுவ நிதியுதவி (FMF) திட்டத்தின்கீழ் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ராணுவ உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்கான 255 மில்லியன் டாலர் நிதியுதவி நிறுத்தப்படும். அதோடு, தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்காக கூட்டணி ஆதரவு நிதியத்தின்கீழ் வழங்கப்படும் 700 மில்லியன் டாலர்கள் உதவியும் நிறுத்தப்படும்.

பாகிஸ்தானுக்கு பாதகமான அமெரிக்க கொள்கையினால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த நிதி பாதிப்பு இதைவிட மிகவும் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

அதிலும் குறிப்பாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் 'குறிப்பிடப்படாத பிற பாதுகாப்பு உதவிகளுக்கான நிதி'யும் நிறுத்தப்படலாம் என்றும் அமெரிக்க அரசு கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை ASIF HASSAN
Image caption ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தானில் இருந்து நேட்டோவின் தரைவழி விநியோகங்களை 2011இல் சில மாதங்களுக்கு பாகிஸ்தான் தடுத்தது

அமெரிக்க பாதுகாப்பு உதவித்தொகையை எந்த அளவு சார்ந்துள்ளது பாகிஸ்தான்?

குறைந்தபட்சம் குறுகிய காலக்கட்டத்திற்கு, பாகிஸ்தானிய ராணுவத்தின் செயல்பாட்டை இது கட்டுப்படுத்தலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர்.

"அமெரிக்காவின் உதவி நிறுத்தப்பட்டால், ராணுவ மற்றும் மனிதவள ஆதாரங்களை மேம்படுத்தும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் உடனடித் திட்டங்கள் முடங்கும்" என்று சொல்கிறார் பாதுகாப்புப் பகுப்பாய்வாளரும், 'பாகிஸ்தான் ராணுவம், அரசு மற்றும் சமூகம்' என்ற புத்தகத்தை எழுதியவருமான பேராசிரியர் ஹசான் அஸ்காரி ரிஸ்வி,

"பாகிஸ்தான் தனது ராணுவ அமைப்பை திறன்மிக்கதாக பராமரிக்கத் தேவையான நிதியுதவிகளை சீனா அல்லது வேறு எந்த ஒரு நட்பு நாடும் நீண்டகாலம் கொடுக்கமுடியாது என்பது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக இருக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.

அமெரிக்காவின் நிதி வெட்டுக்களுக்கு பாகிஸ்தானின் எதிர்வினையை இந்த பதில் விளக்குகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் அமெரிக்காவின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குவாஜா ஆசிஃப் "நண்பரும் இல்லை கூட்டாளியும் இல்லை" என்ற அணுகுமுறை கொண்ட "நண்பன்-கொலைகாரன்" என்று அமெரிக்காவை சாடுகிறார். அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் குர்ராம் தஸ்த்கிர், "அமெரிக்காவின் குறும்பு" இது என்று எச்சரிக்கிறார். ஆனால் பாகிஸ்தான் அரசின் பிற எதிர்வினைகள் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்கின்றன.

15 ஆண்டுகளுக்கு மேலாக 120 பில்லியன் டாலர் செலவு செய்திருப்பதாக கூறும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இது பற்றி வெளியிட்ட அறிக்கையில் "தன்னிச்சையான காலக்கெடுக்கள், ஒருதலைப்பட்ச அறிவிப்புகள் மற்றும் இலக்குகளை மாற்றிக்கொள்வது போன்றவை பொது அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டிருக்கிறது.

இதற்கிடையில், பிபிசிக்கு அளித்த எழுத்துபூர்வமான பதிலில் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் இவ்வாறு கூறுகிறார், "பாகிஸ்தான் பணத்திற்காக ஒருபோதும் போராடியதில்லை, சமாதானத்திற்காகவே போராடியிருக்கிறது" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்