பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா வழங்குவதில் சுணக்கம் காட்டுகிறதா இந்தியா?

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலைப் பொழுது. லாகூர் நகரின் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் ஜொஹர் பகுதி. அனைவரும் உறக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால், மருத்துவர் தைமூர் உல் ஹசனின் இல்லம், இருள் மெல்ல விலகும் அந்த பொழுதிலும் பரபரப்பாக காணப்பட்டது.

தைமூர் புத்துணர்வாக சிற்றுண்டி மேஜையின் முன்பு அமர்ந்திருந்தார். ஆனால், அவரது இளைய தங்கை கடுமையாக காணப்பட்டார்.

அடுத்த அரை மணிநேரத்தில், தைமூர் அங்கிருந்து கிளம்ப தயாரானார். அவரது மொத்தக் குடும்பமும் அவரை சூழ்ந்து நின்று தொழுகை செய்தது. பின் அவர் குரானுக்கு கீழ் நடக்கவைகப்பட்டார். இப்படி செய்தால், அவர் மேற்கொள்ளப் போகும் இந்த கடுமையான பயணம் நன்றாக அமையும் என்பது நம்பிக்கை.

என்ன கடுமையான பயணம்?

ஆம். அவர் டெல்லிக்கு செல்கிறார். அவருக்கு கல்லீரல் புற்றுநோய். அதற்காக சிகிச்சை எடுக்கத்தான் இந்த பயணம். கடந்த 2015 ஆம் ஆண்டே, அவருக்கு இந்த அறுவை சிகிச்சை டெல்லியில் ஒரு முறை செய்யப்பட்டது. ஆனால், மீண்டும் புற்றுநோய் வந்தது.

இந்த முறை அவர் ஆறுமாத காலம் இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்காக, விசாவிற்காக காத்திருக்க நேர்ந்தது. அவர் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்திருந்தபோது, அவர் சகோதரி தீபாவளி பண்டிகையின்போது, தமது சகோதரரின் விசா கோரிக்கையை வலியுறுத்தி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு ட்வீட் செய்திருந்தார்.

ஆச்சரியமாக, அவரின் அந்த வேண்டுகோள் உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த நாளே அவருக்கு விசா வழங்கப்பட்டது. டெல்லி செல்ல வாகனத்தில் ஏறுவதற்கு முன், தைமூர், "டெல்லியின் மொழி, கலச்சாரம் அனைத்தும் பாகிஸ்தான் போலவே உள்ளது. அங்கு இருப்பது ஏதோ சொந்த வீட்டில் இருப்பது போல உள்ளது" என்கிறார்.

வாகா - அட்டாரி கேட் அருகே சென்ற பின், வாகனத்திலிருந்து இறங்கி நடந்து எல்லையை கடக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு பின் டெல்லியை நோக்கி செல்ல தொடங்குகிறார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தைமூர் அதிர்ஷ்டசாலி. நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவ விசாவுக்கு விண்ணப்பித்து உடனே அனுமதி கிடைக்காமல் காத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்திய வர்த்தக அமைச்சகம் ஒரு சர்வே எடுத்தது. அதன்படி 2015-16 ஆகிய காலகட்டடத்தில் 1,921 பாகிஸ்தானிய நோயாளிகளுக்கு மட்டும்தான் விசா வழங்கப்பட்டுள்ளது. இது இந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையைவிட மிகக்குறைவு.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல், இந்தியா மாதந்தோறும் பாகிஸ்தானைச் சேர்ந்த 500 நோயாளிகளுக்கு விசா வழங்கி வந்தது. ஆனால், இப்போது அப்படியெல்லாம் வழங்குவதில்லை என்கிறார்.

மேலும் அவர், "இது ஏதோ இலவசம் இல்லை. மக்கள் தாங்கள் பெறும் சேவைக்கு கணிசமான பணம் தருகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் வெகு சில மனிதாபிமான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று," என்கிறார் அவர். "இப்போது மரியாதைக்குரிய அமைச்சர் (சுஷ்மா சுவராஜ்)தான் ட்விட்டர் மூலம் ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்" என்கிறார் ஃபைசல்.

நிலைமை இவ்வாறாக இருந்தாலும், தலா ஒரு நோயாளி அளிக்கும் வருமானத்தைக் கணக்கிட்டால், இந்தியாவில் ஒரு சராசரி பாகிஸ்தானி நோயாளி செலுத்தும் பணமே அதிகம். இந்தியாவுக்கு வரும் ஒரு பாகிஸ்தான் நோயாளி சிகிச்சைக்காக சராசரியாக 2,906 டாலர்கள் செலவிடுகிறார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைவிட ஒரு பாகிஸ்தான் நோயாளி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் மற்றும் தங்கள் குழந்தைகளுக்கு வரும் நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு அண்டை நாடான இந்தியாவையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பாகிஸ்தானியர்களின் மருத்துவ விசாவுக்கு இந்தியா தடைவிதித்து இருப்பதாக மே 2017-ல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்போது இந்திய தூதராக இருந்த கோதம் பாம்பாவாலாவை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அழைத்து இது தொடர்பாக விசாரித்தது. ஆனால் இந்தியா இந்த செய்தியை எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது .

படத்தின் காப்புரிமை Youtube/Rajyasabha TV

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இரு நாடுகளின் உறவில் பல உயர்வு தாழ்வுகள் இருந்து வந்துள்ளன. விரோதப் பார்வை, பிரிவானைவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாக இரண்டு நாடுகளும் வைக்கும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் இருந்துள்ளன.

சில சமயங்களில் நிதானமும் மனிதநேயமும் நிலவும். ஆனால், வெறுப்பும் முழக்கங்களும் அவ்வப்போது நிகழும். அதுவும், 2016-க்குப் பின், அதாவது பதான்கோட் விமானப்படைத் தளம் மீது நடந்த தாக்குதல் மற்றும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் யாதவ் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டது ஆகிய இரு நிகழ்வுகளுக்குப் பின் இருநாட்டு உறவில் பதற்றம் நிலவத் தொடங்கியது.

ஆனபோதும், பாகிஸ்தான் நோயாளிகளுக்கு வழங்கும் மருத்துவ விசாக்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால், விசா விண்ணப்பங்கள் உயர்மட்ட அளவில் பரிசீலிக்கப்படுகின்றன.

நீங்கள் சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டரை பக்கத்தை பார்த்தால், டஜன் கணக்கானவர்கள் விசாவுக்காக அவரை தொடர்பு கொண்டிருப்பது தெரியும். சமீப மாதங்களில், ட்விட்டர் மட்டும்தான் பாகிஸ்தான் நோயாளிகள் விசா பெறுவதற்கான கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.

புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிஸாரியா பாகிஸ்தான் வந்திறங்கியவுடன் கூறியபோது, இந்த விவகாரம் தாம் தொடர்ந்து இயங்க விரும்பும் சில விஷயங்களில் ஒன்று என்று உத்தரவாதம் அளித்தார். "மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் எங்களுக்கு முதன்மையானது. இந்த மருத்துவ சுற்றுலாவும் அப்படியான ஒன்றுதான். துன்பத்தில், அவசரத்தில் இருக்கும் மக்களுக்கான மருத்துவ விசாவை விரிவுபடுத்தவே நாங்கள் விரும்புகிறோம்," என்றார்.

இறுதியில் தைமூர் டெல்லியில் தமது மருத்துவர் சுபாஷ் குப்தாவை சந்திக்க முடிந்தது. மருத்துவர் சுபாஷ் குப்தா பிரபலமான புற்றுநோய் மருத்துவர். அவர் கடந்த 20 ஆண்டுகளாக டெல்லியில் சிகிச்சை அளித்து வருகிறார்.

தைமூர் முழுமையாக குணமடைய முடியும் என்று குப்தா நம்பவில்லை. ஆனால், அவர் வாழ் நாளை நீட்டிக்க முடியும் என்று நம்புகிறார். ஆனால், அதற்கு அவர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை சிகிச்சைக்காக இந்தியா வர வேண்டியிருக்கும் என்கிறார் குப்தா.

சுஷ்மா வின் செய்கையால் தைமூர் நெகிழ்ந்துவிட்டார். ஆனால், இது எதிர்காலத்திலும் தொடருமா என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. இந்தியா தனது மருத்துவ விசா கொள்கையை எப்படி வடிவமைக்கப்போகிறது என்று பல பாகிஸ்தானியர்கள் எதிர்பார்த்து இருப்பதுபோல தைமூரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :