"டிரம்பின் கீழ் வேலை செய்ய முடியாது": ராஜினாமா செய்த தூதர்

  • 13 ஜனவரி 2018
ஜான் ஃபீலி படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜான் ஃபீலி

அதிபர் டிரம்பின் கீழ் வேலை செய்ய முடியாது எனக்கூறி பனாமாவிற்கான அமெரிக்க தூதர் பதவி விலகியுள்ளார்.

முன்னாள் விமான ஓட்டுநராக பணியாற்றிய ஜான் ஃபீலி என்ற பெயருடைய இத்தூதர் பதவியில் இருந்து "கௌரவமாக" விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அவரது ராஜினாமா குறித்து டிசம்பர் மாத இறுதியில்தான் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு தெரிய வந்தது.

இது தொடர்பாக ஜான் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், "குறிப்பிட்ட சில கொள்கைகளில் உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு இளைய வெளியுறவுத்துறை அதிகாரியாக அதிபர் மற்றும் அவரது நிர்வாகத்தின் கீழ் உண்மையாக பணியாற்றுவேன் என உறுதிமொழி எடுத்து கையெழுத்திட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"என்னால் அப்படி செய்ய முடியாமல் போகுமேயானால், நான் பதவி விலக வேண்டும். அந்த நேரம் வந்துவிட்டது" என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹைத்தி, மற்றும் ஆஃபிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களை குறிப்பிட்டு மோசமான கருத்தை கருத்தை டிரம்ப் தெரிவித்ததாக கூறப்படும் முன்பே, ஜான் பதவி விலகப் போவது தங்களுக்கு தெரியும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்டீவ் கோல்ட்ஸ்டைன் உறுதிப்படுத்தி உள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

லத்தீன் அமெரிக்க விவகாரங்களில் அதிக நாள்கள் பணி புரிந்த தூதர் ஜான், "தன் சொந்த காரணங்களினால்" பதவி விலகியுள்ளதாகவும் ஸ்டீவ் தெரிவித்தார்.

ஜான் ஃபீலி போன்ற ஒரு வெளியுறவுத்துறை அதிகாரி ராஜினாமா செய்வது இது முதல் முறையல்ல.

சோமாலியாவிற்கான அமெரிக்க பணிக்கு நைரோபியில் பணியாற்றிய எலிசபத் என்றவரும் கடந்த டிசம்பர் மாதம் பதவி விலகினார்.

வெளிநாட்டுக் கொள்கைகளின் படி, மனித உரிமை விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க அமெரிக்கா தவறிவிட்டதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பனாமாவிற்கான அமெரிக்க தூதர் ஜான் ஃபீலி வரும் மார்ச் 9ஆம் தேதி தனது பதவியில் இருந்து விலக உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :