ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

  • 15 ஜனவரி 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

நூற்றாண்டு அடி

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் அமைதியை கொண்டு வர எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், `இந்த நூற்றாண்டு மீதான அடி` என்று பாலஸ்தீனிய அதிபர் மக்மூத் அப்பாஸ் விவரித்துள்ளார். பாலஸ்தீனிய தலைவர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் எந்த அமைதி திட்டத்தையும் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார். ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட இஸ்ரேலையும் அப்பாஸ் குற்றஞ்சாட்டினார்.

ஓடு தளத்திலிருந்து விலகிய விமானம்

படத்தின் காப்புரிமை Reuters

துருக்கி விமான நிலையத்தில் ஓடு தளத்திலிருந்து விலகி சிறு குன்றிலிருந்து சரிந்து கடலை நோக்கி சென்ற விமானம் பயணிகளை அச்சத்துக்கு உள்ளாக்கியது. 168 பயணிகள் மற்றும் ஊழியர்களை கொண்ட போயிங் விமானம் அன்கராவிலிருந்து புறப்பட்டு, கருங்கடலை ஒட்டி உள்ள ட்ரப்சன்னில் தரை இறங்கும் போது இந்த விபத்து நேரிட்டது.

கண்ணீர் புகை குண்டு

படத்தின் காப்புரிமை Reuters

மக்கள் நல திட்டங்களுக்கான நிதியை துனீஷியா அரசு வெகுவாக குறைத்துவிட்டதாக கூறி இளைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க துனீஷியா போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.இந்த சம்பவம் அந்நாட்டின் ஏழ்மையான நகரமான எட்டாடமெனில் நடந்தது. துனீஷியாவில் கடுமையான பொருளாதார நெருக்கடியும், வேலை இல்லா திண்டாட்டமும் நிலவி வரும் சூழ்நிலையில், அண்மையில் அதிகரிக்கப்பட்ட வரி விகிதங்கள் அந்நாட்டு மக்களை கோபத்திற்கு உள்ளாக்கியது.

சிறை வைப்பு?

படத்தின் காப்புரிமை Reuters

தம்மை ஐக்கிய அமீரகம் தம் விருப்பத்திற்கு மாறாக சிறை வைத்துள்ளது என்று கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா பின் அலி அல் - தனி யு-டியூப் மூலம் தெரிவித்துள்ளார். தமக்கு ஏதேனும் நேர்ந்ததென்றால், அதற்கு முழு பொறுப்பு அபுதாபி இளவரசர் தான் என்று அந்த வீடியோ பதிவில் கூறி உள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அமீரகம் மறுத்துள்ளது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :