"லிபிய அதிபர் பாணியில் முகாபே கொல்லப்படுவார் என்று அஞ்சினேன்"

படத்தின் காப்புரிமை AFP

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவின் உதவியாளர் ஒருவர், "லிபிய பாணியில்" பொதுமக்கள் முகாபவை "இழுத்துச் சென்று கொன்றுவிடுவார்கள்" என்று தான் அஞ்சியதாக கூறியுள்ளார்.

முகாபே அதிபர் பதவியிலிருந்த கடைசி வாரத்தில் அந்நாட்டு ராணுவத்தால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டதுடன் பதவியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

"நான் மம்மர் கடாபியின் ஒரு படத்தை நினைத்து பார்க்க ஆரம்பித்தேன்" என்று முகாபேயின் முன்னாள் செய்தி தொடர்பாளரான ஜார்ஜ் சரம்பா கூறினார்.

அவர் ஜிம்பாப்வேயிலுள்ள தனியார் செய்தித்தளமான டெய்லி நியூஸிடம் பேசும்போது இவற்றை தெரிவித்தார்.

முகாபேயின் 37 ஆண்டு கால ஆட்சியின் கடைசி நாட்களை நினைவுக்கூறும் சரம்பா, 93 வயதான முகாபே "தனது சொந்த விருப்பப்படி செல்ல வேண்டும்" என்று விரும்பியதாகவும் இராணுவ தலையீடு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

முகாபே தனது ஆடம்பர புளூ ரூப் என்ற மாளிகையில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது, அவரது எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகள் அந்நாட்டின் இராணுவ தளபதிகள், கத்தோலிக்க குருக்கள், அரசியல் உதவியாளர்கள் மற்றும் தென்னாபிரிக்க தூதர்களுக்கு இடையில் தீவிரமாக நடைபெற்றன.

அதிபரின் இராஜிநாமாவிற்கு அழைப்பு விடுக்கும் பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தனிப்பட்ட முறையில் முகாபேயை இலக்கு வைக்கக்கூடும் என்று இராணுவ அதிகாரிகள் அந்த குழுவிடம் தெரிவித்ததாக சரம்பா கூறியுள்ளார்.

"ஜனாதிபதிக்கு எதிராக அணிவகுத்துச் சென்ற பொதுமக்களுக்கு எதிராக தங்களது துப்பாக்கிகளை குறிவைக்க முடியாது" என்று இராணுவம் கூறியதாக சரம்பா தெரிவித்துள்ளார்.

நான்கு தசாப்த காலமாக லிபியாவின் அதிபராக இருந்த மம்மர் கடாபி கடந்த 2011ம் ஆண்டு பொது மக்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்