"நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்!" - இப்படியும் ஒரு நூதன மோசடி

நூதன மோசடியில் ஈடுப்பட்டதாக கினி போலீஸ் ஒரு ஹீலரை கைது செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை ALHASSAN SILLAH

அதாவது, நா ஃபாண்டா காமாரா என்ற அந்த ஹீலர் பல பெண்களிடம் `நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்' என்று சொல்லி நம்பவைத்து ஏமாற்றி இருக்கிறார்.

வயிறை வீங்க வைக்க கூடிய இலை, மற்றும் மூலிகைகளை கொடுத்து, பெண்களின் வயிறை வீங்க வைத்து, அவர்கள் கர்ப்பமாக இருப்பதாக நம்பவைத்திருக்கிறார் காமாரா.

இதற்காக, அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் 33 டாலர்கள் வரை கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். அந்ந நாட்டின் சராசரி மாத வருமானமே 48 டாலர்கள்தான்.

காமாரா ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக் கணக்கான டாலர்களை இது போல ஏமாற்றி இருக்கலாம் என்று போலீஸார் நம்புகிறார்கள்.

காவல் நிலையம் முற்றுகை

காமாரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏறத்தாழ 200 பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொல்கிறார், "சரியாக ஓராண்டுக்கு முன் அவரிடம் சிகிச்சை எடுக்க தொடங்கினேன். அவர் ஏதேதோ இலைகளையும், மூலிகைகளையும் கொடுத்தார். முதலில் எனக்கு வாந்தி வந்தது. வாந்தி வருவது நல்லது என்று அவர் கூறினார். அந்த மூலிகைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள தொடங்கியதும், என் வயிறு வீங்க ஆரம்பித்தது."

மேலும் அவர், "சில காலத்திற்கு பின் மீண்டும் அவரிடம் சென்றேன், என் வயிறை தொட்டுப் பார்த்த காமாரா நான் கர்ப்பம் அடைந்து இருப்பதாக கூறினார். மருத்துவரிடம் போக தேவையில்லை என்றும் கூறினார்." என்கிறார்.

கார்ப்பம் அடைந்து இருப்பதாக காமாரா சொல்லும் நபர்கள், அவருக்கு கோழியும், துணியும் எடுத்து தர வேண்டும்.

கடவுளின் கையில்

நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்கிறார் காமாரா.

படத்தின் காப்புரிமை ALHASSAN SILLAH

"நான் குழந்தை இல்லாதவர்களின் கனவை நனைவாக்க உதவி செய்தேன். மற்றவை இறைவன் கையில்தான் உள்ளது." என்கிறார்.

பதினேழு வயதிலிருந்து 45 வயது வரை உடைய பெண்கள் காமாராவால் ஏமாற்றப்பட்டு இருக்கலாம்.

உலக சுகாதார நிறுவனத்தின், 2006 ஆம் ஆண்டு கணக்குப்படி, 80 சதவிகித ஆஃப்ரிக்கர்கள் மரபு சிகிச்சை முறையைதான் பின்பற்றி வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்