போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்

படத்தின் காப்புரிமை Reuters

பெரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் அமேசான் பகுதிக்கும் மற்றும் அங்கு வாழும் மக்களுக்கும் வணிகத்திட்டங்களால் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புவேர்ட்டோ மால்டொனாடோ என்ற சிறிய நகரத்திலுள்ள பூர்வகுடி மக்களிடம் பேசிய போப், அமேசான் பிராந்தியம் இதுவரை இம்மாதிரியான அச்சுறுத்தலை கண்டதில்லை என்று கூறியுள்ளார்.

அப்போது போப்பை சந்தித்த பழங்குடி மக்கள், தாங்கள் தங்கள் பகுதிகளிலிருந்து விரட்டப்படுவதாக கூறியதுடன், தங்களை பாதுகாப்பதற்கு உதவ வேண்டுமென்றும் அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அர்ஜென்டினாவை சேர்ந்த 81 வயதாகும் போப் பிரான்சிஸ் லத்தீன் அமெரிக்க பகுதிக்கு மேற்கொண்டுள்ள ஒரு வாரகால சுற்றுப்பயணத்தின் இரண்டாவது மற்றும் கடைசி கட்டமாக பெருவிற்கு சென்றுள்ளார்.

போப் என்ன சொன்னார்?

வெற்று மார்போடு, தங்களின் உடலில் வர்ணம் பூசியும், தலையில் வண்ணமயமான இறகுகளுடன் கூடிய கிரீடம் அணிந்த பழங்குடியினர் புவேர்ட்டோ மால்டொனாடோவில் போப்பாண்டவரை நடனமாடியும், பாடியும் வரவேற்றார்கள் என்று ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அமேசான் பகுதியின் எல்லையில் உள்ள பெரு, பிரேசில் மற்றும் பொலிவியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் போப்பை சந்திக்க வந்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Reuters

"இன்று தங்களது சொந்த நிலங்களிலேயே அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள அமேசான் மக்கள் இதுவரை இந்நிலையை சந்தித்ததே இல்லை" என்று பேசிய போப் பிரான்சிஸ்க்கு கைத்தட்டல்களும், பறையடிப்பு ஒலியும் வரவேற்பாக கிடைத்தது.

"அமேசான் பல விவகாரங்களில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியாகும். ஒருபுறம், பெட்ரோலியம், எரிவாயு, மரம் மற்றும் தங்கம் ஆகியவற்றின் மீதுள்ள பெரும் வர்த்தக ஆர்வத்தின் காரணமாக அங்கு அழுத்தம் செலுத்தப்படுகிறது. மற்றொருபுறம், அமேசான் பிராந்தியத்தின் இயற்கை வளப் பாதுகாப்புக்காக மனிதர்களை மறந்து வக்கிரத்துடன் செயல்படுத்தப்படும் கொள்கைகளால் ஏற்படும் அச்சுறுத்தலும் இருக்கிறது."

"ஆமாம், சிலருக்கு, நீங்கள் ஒரு தடையாக அல்லது தொந்தரவாகக் கருதப்படுகிறீர்கள், ஆனால் நீங்கள் அனைவரும் உளச்சான்றின் கூக்குரலாய் இருக்கிறீர்கள்" என்று பழங்குடி மக்களிடையே பேசிய போப் தெரிவித்தார்.

அமேசான் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல் எவ்வளவு பெரியது?

"அவர்கள் எங்களிடம் கேட்காமலேயே எங்கள் பிராந்தியங்களில் நுழைவதால் நாங்கள் பெருமளவில் பாதிப்படைகிறோம். மேலும், அவர்கள் எங்கள் நிலத்தில் துளையிட்டு பெட்ரோலியத்தை எடுக்கும்போது நாங்கள் இறந்துவிடுவோம்" என்று போப்பிடம் பேசிய பெருவிலுள்ள பழங்குடி மக்களின் பிரதிநிதியான யசிக்கா பாட்டியாச்சி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

"நமது ஆற்றை அவர்கள் விஷத்தை கொண்டு நாசம் செய்து பெட்ரோலியத்தை எடுத்தால் நாம் பெரிதும் பாதிக்கப்படுவோம். வெளிநாட்டவர்கள் நம்மை பலவீனமானவர்கள் எனக் கருதுகின்றனர், மேலும் நம் நிலங்களை வெவ்வேறு வழிகளில் எடுத்துச் செல்வதற்கு திட்டமிடுகின்றனர். நமது நிலங்களை கவர்ந்து செல்வதில் அவர்கள் வெற்றியடைந்துவிட்டால் நாம் ஒட்டுமொத்தமாக மறைந்துபோவதற்கு வாய்ப்புள்ளது."

புவேர்ட்டோ மால்டொனாடோவைச் சுற்றியுள்ள பிராந்தியமான மட்ரி டி டியோஸ் சமீபத்திய ஆண்டுகளில் ஒழுங்குபடுத்தப்படாத தங்க சுரங்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஆறுகளில் பாதரசத்தின் அளவு ஆபத்தான அளவிற்கு உயர்வதற்கு வழிவகுக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெருவியன் அமேசானின் பிற பகுதிகளில் சட்டவிரோதமாக மரம் வெட்டுபவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பழங்குடியினர் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்.

"இங்கு வாழும் பூர்வக்குடி மக்கள் குறித்து கவலை கொள்ளாமல் மற்ற நாடுகளுக்கான வற்றாத வள ஆதாரமாக அமேசானைப் பார்க்கும் வரலாற்றுக் கருத்தியலை உடைத்தெறிய வேண்டும்" என்று வெள்ளிக்கிழமையன்று பெருவில் பேசிய போப் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :