அரசுப் பணிகள் முடக்கம்: என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க செனட்டில் அந்நாட்டின் புதிய வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தோல்வியால் அரசின் பல்வேறு சேவைகள் முடங்கியுள்ளதை தொடர்ந்து குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதிவரை அமெரிக்க அரசின் பல்வேறு துறைகள் செயல்படுவதற்கு தேவையான நிதியை அளிக்கும் ஒரு மசோதா அதற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவான கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் தேவையான 60 வாக்குகளை பெறவில்லை.

ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க மக்களுடைய நலன் சார்ந்த விடயத்தில் அரசியலை புகுத்துவதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சனிக்கிழமையன்று இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. தற்போது நிலவி வரும் முடக்க நிலையை தீர்ப்பதற்கு மீண்டும் ஞாயிறன்று நாடாளுமன்றம் கூடும் என்று குடியரசுக் கட்சியின் செனட் தலைவர் மிட்ச் மெக்கோனெல் கூறியுள்ளார்.

திங்கட்கிழமைக்குள் இவ்விவகாரத்தில் ஒரு தீர்மானம் எட்டப்படும் என்று வெள்ளை மாளிகையின் வரவுசெலவுத் திட்டத் தலைவர் கூறியுள்ளார்.

தீர்வு எட்டப்படவில்லையென்றால் வாரத்தின் தொடக்கமான திங்களன்று அலுவலகங்கள் மூடப்பட்டு இருப்பதுடன் ஆயிரக்கணக்கான அமெரிக்க அரசாங்க ஊழியர்களுக்கு வேலையற்ற நிலை உருவாகும்.

16 நாட்கள் நீடித்த கடைசி அரசாங்க பணி முடக்கம் 2013 இல் நிகழ்ந்தது.

ஏன் இரண்டு தரப்பினரும் சமாதானத்திற்கு உடன்படவில்லை?

அமெரிக்க நாடாளுமன்றத்தையும், வெள்ளை மாளிகையையும் ஒரே சமயத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கட்சி ஆட்சியில் இருக்கும்போது அரசின் பணிகள் முடங்குவது இதுவே முறையாகும்.

மசோதாவை நிறைவேற்றுவதற்கு 60 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், செனட் சபையில் எதிராக 50 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் இருந்ததால் மசோதா தோல்வியை சந்தித்தது. அதாவது, செனட் சபையில் 51 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள குடியரசு கட்சியால் ஜனநாயக கட்சியின் ஆதரவின்றி மசோதாவை நிறைவேற்ற இயலவில்லை.

படத்தின் காப்புரிமை EPA

நாட்டின் எல்லைப் பகுதில் சுவர் எழுப்புவதற்கும், குடியேற்ற சீர்திருத்தங்கள் உட்பட எல்லை பாதுகாப்புக்கான நிதியையும், ராணுவத்திற்கு அதிகரிக்கப்பட்ட நிதியையும் ஆளும் குடியரசு கட்சியினர் கோரியிருந்தனர்.

தக்க ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவிற்குள் குழந்தைகளாக நுழைந்த 700,000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவதைக் காப்பாற்ற வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குடியரசுக் கட்சியினர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கான ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஆறு வருட நீடிப்பை வழங்கியுள்ளனர். ஆனால் இந்த திட்டம் நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

"நாட்டின் ஆபத்தான தெற்கு எல்லைப்பகுதியிலுள்ள இராணுவம் பாதுகாப்போடு இருப்பதைவிட சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளனர்" என்று ஜனநாயகக் கட்சியினர் மீது டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

"ஜனநாயகக் கட்சியினர் விளையாடுவதை நிறுத்திவிட்டு அரசாங்கத்தை மீண்டும் செயல்படுவதற்கு உடன்படும்வரை, அதிபர் குடியேற்ற சீர்திருத்தம் குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்கப்போவதில்லை" என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் எச்சரித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்