தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? - சுவாரஸ்ய தகவல்கள்

  • நிதின் ஸ்ரீவாத்சவ்
  • பிபிசி செய்தியாளர்
தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? - சுவாரஸ்ய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

1950 இல் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுரங்கங்கள், அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத பதுங்குக்குழிகள், கண்ணிவெடிகள் என தென் கொரிய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற பிபிசி செய்தியாளரின் கள அனுபவம்

தென் கொரியாவின் எல்லைப்பகுதியில் இருக்கும் கடைசி கிராமத்தில் காலை பத்தரை மணிக்கும் மயான அமைதி நிலவுகிறது. எப்போதாவது ஒருசில வாகனம் மட்டுமே கடக்கும் எல்லை கிராமம் யோங்காம்…

படக்குறிப்பு,

எல்லைக்கு செல்லும் வழியில் காங்கிரீட் கட்டமைப்புகளை வெடிகுண்டால் தகர்த்து பாதையை மூடச்செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யோங்காம் கிராமத்தை அடுத்து வட மற்றும் தென் கொரியாவின் 'ராணுவ கண்காணிப்பு இல்லாத பகுதி' தொடங்குகிறது.

இந்தப் பகுதியில் பத்து லட்சத்திற்கும் அதிகமான நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

படக்குறிப்பு,

யாங்காம் ரி கிராமத்தை சேர்ந்த லீ சுன் ஜா

கிராம மக்களின் முகத்தில் உறைந்திருக்கும் அச்சம்

யோங்காம் கிராமத்தில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயதான பெண்கள் உணவுமேசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பலவிதமான உலர் மீன்கள், கருவாடு வகைகள், அரிசி, கிம்சி சலாட், கொரியாவின் தேசிய பானமான 'சோஜு' ஆகியவை உணவு மேசையில் தயாராக உள்ளது.

இந்த முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள், கொரிய தீபகற்பம் துண்டாடப்பட்டு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்தபோது நடைபெற்ற வலி மிகுந்த வன்செயல்களின் நேரடி சாட்சிகள்.

பங்காளி, பகையாளியானபோது நடைபெற்ற கொடுமைகளை கண்ணாற கண்டவர்களின் முகங்களில் அந்த வேதனையும், வலியும் உறைந்து போயிருக்கிறது.

90 வயதான லீ சுன் ஜா என்பவர், 1950களின் இந்த கிராமத்தில் நடைபெற்ற படுகொலைகளை நேரில் கண்டவர்களில் ஒருவர்.

படக்குறிப்பு,

கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான முதியோர்கள் அந்த கொடுமைகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்பவில்லை

மீண்டும் யுத்தம் மூளுமோ என்று அச்சம்

"என் கணவர் இப்போது உயிருடன் இல்லை. என் பிள்ளைகளும் பெரியவர்களாகிவிட்டார்கள். வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டார்கள். கடந்த சில ஆண்டுகளில் பதற்றம் அதிகரித்துவிட்டது.

ஆனால், நான் சொந்த இடத்தைவிட்டு வெளியேறுவதாக இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் சண்டை வரக்கூடாது என்று விரும்பினாலும், சண்டை மூண்டு விடுமோ என்று அச்சமும் மனதை வாட்டுகிறது".

இந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோரில் எங்களிடம் பேச தயாராக இருந்தது லீ சுன் ஜா மட்டும்தான் என்பதை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

மற்றவர்கள் வட கொரியா என்றாலே வாயை அழுந்த மூடிக்கொள்கின்றனர். ஏனெனில் இங்கிருப்பவர்களின் உறவினர்கள் பலர் வடகொரியாவில் வசிக்கின்றனர். தங்கள் சாதாரணமாக சொல்லும் கருத்து அங்கிருப்பவர்களை பாதிக்குமோ என்ற அச்சமே அதற்கு காரணம்.

ஆனால் லி சுன் ஜாவுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகள் செய்து வருவது பற்றிய எந்தவித தகவல்களும் தெரியவில்லை.

கிம்மை பற்றி அதிகம் பேசுவதில்லை

லீ சுன் ஜா சொல்கிறார், "நான் தொலைகாட்சி பார்க்கிறேன், ஆனால் கிம் பற்றி அதிகமான தகவல்கள் எதுவும் வெளியாவதில்லை. பொதுவாகவே வட கொரியா சண்டையை விரும்பும் நாடு என்பதுதான் கவலையளிக்கிறது".

படக்குறிப்பு,

வட கொரிய எல்லைப் பகுதியில் ஒரு கிராமத்தில் பூமிக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள 'அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத' பதுங்குக்குழி

யோங்காம் ரி போன்ற டஜன் கணக்கான கிராமங்கள் வட கொரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளன.

எல்லையோர கிராமங்களில் பெரிய அளவிலான பதுங்குக்குழிகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றை அணு ஆயுதங்களோ, ரசாயன ஆயுதங்களோ தாக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதாவது எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மிகுந்த பிரயத்தனங்களுக்குப் பிறகு ஒரு பதுங்குக்குழியை பார்வையிட அனுமதி கிடைத்தது.

படக்குறிப்பு,

-10 டிகிரி வரை வெப்பம் குறைந்துவிடும்

உறையச் செய்யும் பனிக்காற்று

பதுங்குக்குழிகளில் இருக்கும் சுவர்கள் நான்கு அடிக்கும் அதிகமான தடிமனில் இரும்பு மற்றும் காங்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலத்தடி பதுங்குக்குழிகளில் வெளிச்சத்திற்கு மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஜெனரேட்டர்கள் எதுவும் கிடையாது.

பெரிய அளவிலான குளிர்சாதனப் பெட்டிகளில் மூன்று மாதங்களுக்கு போதுமான உணவு பொருட்கள், கம்பளி மற்றும் யுத்த சமயத்தில் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள பேட்டரியால் இயங்கும் சிற்றலை வானொலியும் பொருத்தப்பட்டுள்ளன.

எல்லையோர கிராமங்களில் டிஜிட்டல் திரை மற்றும் எச்சரிக்கை செய்வதற்காக மாபெரும் ஒலிபெருக்கி எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எல்லைக்கு செல்லும் வழியில் காங்கிரீட் கட்டமைப்புகளை வெடிகுண்டால் தகர்த்து பாதையை மூடச்செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

தென்கொரிய தலைநகரில் இருந்து நான்கு மணி நேர பயணத் தொலைவில் இருக்கும் இந்த பகுதியை சென்றடைய வேண்டுமானால் பனிக்காற்று, முடிவே இல்லையோ என்று தோன்றச் செய்யும் நீண்ட சுரங்கங்கள், -10 டிகிரிக்கும் குறைவான வெப்பம் என்ற பல இடர்பாடுகளை கடக்கவேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஃபோல் ஈகிள் பயிற்சியில், கடற்கரையிலிருந்து தாக்குதல் நடத்துவது குறித்து தென்கொரியா மற்றும் அமெரிக்க வீரர்கள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம்.

எல்லைப் பகுதியில் ஐந்து லட்சம் தென் கொரிய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பீரங்கியை எதிர்க்கொண்டாலும் ஒரு அங்குலம் கூட அசையக்கூடாது . இந்த அனைத்து கிராமங்களுக்கும் அருகில் உள்ள நகரமான சுண்டியோவில் பொது மக்களைவிட ராணுவத்தினரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

படக்குறிப்பு,

வடகொரியா மற்றும் தென்கொரியா ராணுவத்தின் வலிமையை காட்டும் அட்டவணை

ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தென்கொரிய ராணுவ வீர்ர்கள் எல்லைப் பகுதியில் இரவு பகலாக காவல் காக்கின்றனர்.

எதிர்தரப்பில் வடகொரிய பீரங்கி முனைகள் தென்கொரியாவை நோக்கி இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

பீரங்கி முனைகள் தங்களை குறிவைப்பதை அறிந்திருந்தாலும் தென்கொரிய வீரர்கள் ஓர் அங்குலம்கூட அசையாமல் எல்லையை காவல் காக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :