7 பேர் விடுதலை: மத்திய அரசு நிலையைத் தெரிவிக்க 3 மாதம் அவகாசம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக, தனது முடிவை மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ராஜிவ் காந்தி

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரையும், ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய 2014இல் தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, எடுத்த முடிவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ விசாரணை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய மாநில அரசான தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.

Image caption முருகன், பேரறிவாளன், சாந்தன்

அப்போது மத்திய சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டவர்களை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று 2015இல் கூறிய, அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அவர்களது ஆயுள் தண்டனையைக் குறைப்பது குறித்த முடிவை நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஏ.எல்.சப்ரே மற்றும் நவீன் சின்ஹா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு மேற்கொள்ளும் என்று கூறியது.

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் காலம் முழுமைக்குமான தண்டனைதான் என்று அப்போது அரசியல் சாசன அமர்வு கூறியது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பேரறிவாளன்

இன்று, செவ்வாய்க்கிழமை, இந்த வழக்கை விசாரித்த அந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அந்த எழுவரையும் விடுதலை செய்வது தொடர்பாக தனது முடிவை மூன்று மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :