குளிர்கால ஒலிம்பிக்: விளையாட்டில் இணையும் வடகொரிய - தென்கொரிய அணிகள்

பியங்சங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக வடகொரியாவின் மகளிர் ஐஸ் ஹாக்கி அணியினர் தென்கொரியா சென்றடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

வடகொரிய அதிகாரிகளுடன் இருநாடுகளுக்கும் இடையேயான எல்லையைக் கடந்த அந்த 12 வீராங்கனைகளும் தென்கொரிய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரு நாடுகளும் 'ஐக்கியக் கொரிய' தீபகற்பக் கொடியுடன் ஒரே அணியாக ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்பது எனும் இருநாட்டு உறவுகளில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய முடிவை கடந்த வாரம் எடுத்தனர்.

தென்கொரியாவில் நடக்கவுள்ள போட்டிகளில் தாங்களும் பங்கேற்க விரும்புகிறோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தனது புத்தாண்டு உரையில் தெரிவித்தது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இறுக்கம் தளர்வதற்கான அறிகுறியாகப் பார்க்கப்பட்டது.

வடகொரியாவின் 12 வீராங்கனைகள் 23 உறுப்பினர்களைக்கொண்ட தென்கொரிய அணியின் அங்கமாகக் கருதப்படுவார்கள் என்று சனிக்கிழமையன்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்தது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கொரிய தீபகற்பத்தின் ஐக்கிய கொரியக் கொடி

"அரசியல் காரணங்களுக்காக எங்கள் அணி பயன்படுத்தப்படுவது ஒரு சவாலான சூழ்நிலை. ஆனால், அவ்வாறு பயன்படுத்தப்படுவது எங்கள் அணியின் நலனைவிட முக்கியமானது," என்று திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய தென்கொரிய மகளிர் ஐஸ் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் சாரா மர்ரி கூறியிருந்தார்.

"உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கொரியர்கள் அனைவரும், பிற நாடுகளின் துணையின்றி கொரிய இணைப்புக்காகப் பாடுபட வேண்டும்," என்று வடகொரியாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

தென்கொரியாவில் நடைபெறவுள்ளதால் வடகொரியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்காது என்று முதலில் கருத்தப்பட்டது.

தொடர்ச்சியான அணு ஆயுத சோதனைகளால் பல சர்வதேச தடைகளுக்கு உள்ளாகியுள்ள வடகொரியா, தென்கொரியாவுடனான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாகவே குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முடிவு பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 9 அன்று தொடங்கவுள்ள இப்போட்டிகளில் 22 வடகொரிய விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தொடக்க விழாவின் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒரு கலைக்குழுவை அனுப்புவதுடன், தென்கொரியாவில் வரும்மார்ச் மாதம் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் குளிர்கால பாராலிம்பிக் போட்டிக்கும் தமது நாட்டு வீரர்களை வடகொரியா அனுப்பவுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :