18 லட்சம் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 18 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் ஒன்றை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிபர் டொனல்டு டிரம்பின் நெருங்கிய சகாவான வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்புக் குழுவின் தலைவர் ஸ்டீஃபன் மில்லர், "எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தையின்போது, மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்கான சுவர் ஒன்றை எழுப்ப 2500 கோடி அமெரிக்க டாலர் நிதியை வழங்க ஒப்புதல் அளித்தால், அடுத்த 10-12 ஆண்டுகளில் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க ஆவண செய்ய்யப்படும் என்று தெரிவிக்கப்படும்" என்று குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

அதற்கான நிதி மசோதா வரும் திங்களன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. எனினும் மெக்சிகோ எல்லைச் சுவருக்கு அரசு நிதி வழங்குவதை எதிர்க்கப்போவதாக ஜனநாயகக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

'டிரீமர்ஸ்' என்று அழைக்கப்படும், தங்கள் குழந்தைப் பருவத்திலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி குடியேறியவர்கள் மற்றும் பிற 11 லட்சம் வெளிநாட்டவர்கள் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியுள்ளவர்கள் ஆவர்.

'டிரீமர்ஸ்' எனப்படுபவர்களை வெளியேற்றுவதைத் தள்ளிவைக்கும் 'டாகா' எனப்படும் டிஃபர்ட் ஏக்சன் ஃபார் சைல்டுஹூட் அரைவல்ஸ் (Deferred Action for Childhood Arrivals - DACA ) எனும் திட்டம் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அமல்படுத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP

அதிபர் டிரம்ப் அடிக்கடி விமர்சனம் செய்யும், குடியேறியவர்களின் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, அவர்களது பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் குடியுரிமை வழங்கும் திட்டம் மற்றும் ஆண்டுதோறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 50,000 பேருக்கு 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தரமாகத் தங்கி வேலை செய்வதற்கான அனுமதி வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் முடிவுக்காக கொண்டுவர வெள்ளி மாளிகை முன்மொழிந்துள்ளது.

'டாகா' குடியேறிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தியதை சட்டவிரோத குடியேற்றத்தை ஆதரிக்கும் செயல் என விமர்சித்த டிரம்ப், தற்போது அவர்களுக்கு குடியுரிமை வழங்க இத்திட்டத்தை முன்மொழிந்துள்ளதை, சட்டத்தை மீறுபவர்கள் மீது டிரம்ப் அரசு காட்டும் பரிவாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்