ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

லாரி நாசர் பாலியல் விவகாரத்திற்கு பின்னர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வாரியம் பதவி விலகல்

படத்தின் காப்புரிமை AFP

பாலியல் முறைகேடு தொடர்பாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஒலிம்பிக் குழு விடுத்த இறுதி எச்சரிக்கைக்கு அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வாரிய உறுப்பினர்கள் கீழ்படிவதாக தெரிவித்துள்ளனர்.

18 உறுப்பினர்களை கொண்ட இந்த வாரிய உறுப்பினர்கள் ஜனவரி 31ம் தேதிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது விளையாட்டுக்களை நிர்வகிக்கும் அமைப்பு என்ற தகுநிலையை அது இழக்கும் என்று அமெரிக்க ஒலிம்பிக் குழு முன்னதாக தெரிவித்திருந்தது.

இளம் தடகள வீரர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வாரியத்தின் முன்னாள் மருத்துவர் லாரி நாசருக்கு 40 முதல் 175 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த பிறகு, அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வாரியம் மேற்கொள்ள வேண்டியவற்றை அமெரிக்க ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ளது.

கனடா பணக்கார தம்பதியினர் கொலை என அறிவிப்பு

படத்தின் காப்புரிமை Reuters

டொரன்டோவில் கடந்த மாதம் வீட்டில் இறந்து கிடந்ததாக கண்டெடுக்கப்பட்ட கனடா தம்பதியர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது,

75 வயதான பாரி மற்றும் 70 வயதான ஹனி ஷெர்மேன் தம்பதி கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இவர்களின் கொலை தொடர்பாக இதுவரை யாரும் குற்றஞ்சட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ள காவல்துறை, சந்தேக நபர்கள் என யாரையும் குறிப்பிடவில்லை.

கனடாவிலுள்ள பணக்காரர்களில் ஒருவரான பாரி ஷெர்மேனும், அவருடைய மனைவியும் மக்களுக்கு அவர்கள் செய்த சேவையால் நன்கு அறியப்பட்டவர்கள்.

அவர்களின் தீடீர் மரணம் நாட்டிலுள்ள பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.

'டெத் ஆப் ஸ்டாலின்' பிரிட்டன் படத்தை திரையிடுவதை ரத்து செய்த ரஷ்யா

படத்தின் காப்புரிமை Reuters

பிரிட்டன் நகைச்சுவை திரைப்படமான 'டெத் ஆப் ஸ்டாலின்' என்ற படத்தை திரையிடுவதை ரஷ்ய திரைப்பட நிறுவனம் நிறுத்தியுள்ளது.

'தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக' செயல்பட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் மாஸ்கோவின் பயோனியர் சினிமா, இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்துவதாகவும் கூறியுள்ளது.

சில மணிநேரங்களுக்கு முன்னால், எந்தவித விளக்கமும் அளிக்காமல் காவல்துறையினர் இந்த திரையரங்கை பார்வையிட்டனர்.

வியாழக்கிழமை முதல்முறையாக திரையிடப்பட்ட இந்த திரைப்படத்தின் டிக்கெட் பிப்ரவரி 3ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டிருந்தது.

மேலும் விபரங்களுக்கு ரஷ்யாவின் கலாசார அமைச்சகத்தை அணுக வேண்டுமென தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பயேனியர் சினிமா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நகைச்சுவை திரைப்படம் இழிவுப்படுத்துவதாக உள்ளது என்று இந்த வாரம் தெரிவித்த ரஷ்ய அதிகாரிகள் ரஷ்யாவில் இத்திரைப்படம் வெளியிடும் உரிமையை ரத்து செய்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :