உண்மையில் வட கொரிய வாழ்க்கை எப்படி இருக்கும்?- நேரடி அனுபவங்கள்

வட கொரியா

கடந்த வருடம் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 4000 பேர் வட கொரியாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்களால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

மற்ற நாடுகளில் இருந்து வட கொரியா எப்படி வேறுபடுகிறது? வட கொரியாவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் அனுபவம் எப்படி இருக்கும்?. 'பிபிசி வானொலி 4' தனது காப்பகங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பேட்டிகள் மூலம், வட கொரியாவுக்கு சென்றவர்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதைப் பிரதிபலிக்க முயற்சித்துள்ளது.

விமானத்தில் வட கொரியாவுக்கு பயணம்

ஒரு கொரிய-அமெரிக்க பத்திரிகையாளர், 2016ல் தான் செய்த வட கொரிய பயணத்தை நினைவு கூர்கிறார். வட கொரியாவின் ஒரே விமான சேவையான ஏர் கொரியோவில் அவர் பயணித்தார். மோரன்போங் என்ற இசைக்குழுவினர் நடித்துள்ள காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.

இதில் நடக்கும் அனைத்துப் பெண்களையும் வட கொரிய தலைவரே தேர்ந்தேடுப்பார். வட கொரியா ஆட்சியின் பெருமைகளை போற்றும் பாடல்களை அவர்கள் பாடுவார்கள்.

விமானம் தரையிறங்கியவுடன், பயணிகளிடம் வட கொரியாவால் தடை செய்யப்பட்ட பைபிள், மத இதழ்கள் போன்றவற்றை இருக்கிறதா என சோதிப்பார்கள். விமான நிலையம் மிகவும் சுத்தமாக இருந்ததாக அந்த பெண் பத்திரிக்கையாளர் கூறுகிறார்.

வட கொரியாவுக்கு தரை வழியாகப் பயணம்

2004-ம் ஆண்டு சீனாவில் இருந்து வட கொரியாவுக்கு ரயிலில் பயணம் செய்தவர்களிடம் பிபிசி வானொலி 4 பேசியது.

முதல் பார்வையிலே முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்பட்டது என்றும், ஹோட்டலில் அறைகள் பதிவிடுவது தொடர்பான பணிகள் மிகவும் சிரமமாக இருந்தது என்கிறனர் பயணிகள்.

ஹோட்டலில் தங்கியிருந்தது மிருகக்காட்சியில் தங்கியிருந்தது போல இருந்தது என்கின்றனர்.'' ஹோட்டலின் வெளியே இருந்த மக்களிடம் பேச முற்பட்டோம். நாங்கள் மக்கள் யாரையாவது பார்த்து கையசைத்தால் எங்களைப் பார்க்காதது போல திரும்பிக்கொண்டனர்'' என்கிறார்கள் பயணிகள்.

'' தெருக்கள் மிகவும் அமைதியாக இருந்தது. எந்த போக்குவரத்தும் இல்லை. தோல் காலணிகள் இல்லாததால், துணிகளால் செய்யப்பட்ட காலணிகளை மக்கள் அணிந்திருந்தனர்'' என்கிறார் மற்றோரு பயணி.

பியோங்யாங்கின் பிரீமியர் ஹோட்டல்

டெடாங் ஆற்றின் யாங்க்காக் தீவில் உள்ள யான்க்காக்டோ ஹோட்டல், வட கொரிய தலைநகரில் உள்ள சிறந்த ஹோட்டலாக கருதப்படுகிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்குதான் தங்குவார்கள்.

இந்த ஹோட்டலில் தங்கியிருப்பதற்கும், பொது மக்களில் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என ஒரு பயணி கூறுகிறார். இந்த ஹோட்டலில் தலைநகர் முழுவதையும் பார்க்கலாம் என்றும், அப்படிப் பார்த்தபோது நகரமே விசித்திர அமைதியில் இருந்தது என்றும் கூறுகிறார் ஒரு பயணி.

கண்டிப்பான வழிமுறைகள்

வெளிநாட்டவர்களுக்கு வட கொரியா கண்டிப்பான வழிமுறைகளை விதித்துள்ளது. சுற்றுலா வழிகாட்டி இல்லாமல், சுற்றுலா பயணிகள் வெளியே செல்லக்கூடாது. சுற்றுலா வழிகாட்டி இல்லாத நேரத்தில் தொலைக்காட்சி மட்டுமே பார்க்க முடியும் என பயணிகள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள், ''வட கொரியாவில் ஒரே தொலைக்காட்சி நிலையம் மட்டுமே உள்ளது. அதில், கிராமப்புறங்களில் அழகிய பகுதிகளை காட்டுவார்கள் அல்லது வட கொரிய தலைவர்களின் புகழை பாடுவார்கள்'' என்கின்றனர்.

சுற்றுலா ஆரம்பம்

சுற்றுலா ஆரம்பித்தவுடன் வட கொரிய தலைவர்களான கிம் இல்-சூங் மற்றும் கிம் ஜொங்-இல் சிலை இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். இந்த நினைவிடத்திற்கு ஒரு பயணி செல்லவில்லை என்றால் பெரிய குற்றமாகக் கருதப்படும்.

மெட்ரோ பயணம்

பியோங்யாங் ஒரு "கண்கவர்" மெட்ரோ ரயில் அமைப்பைக் கொண்டுள்ளது. பெரிய மொசைக்ஸ் கற்கள் மற்றும் சுவரோவியங்கள் இங்கு உள்ளது. குளோரி ஸ்டேஷன், வெற்றி ஸ்டேஷன், போர் வெற்றி ஸ்டேஷன், தேசிய மறுமலர்ச்சி, சீரமைப்பு போன்றவை ரயில் நிலையங்களில் பெயர்கள்.

தென் கொரிய எல்லை

தென்கொரிய எல்லையைப் பார்க்காமல், எந்தவொரு வட கொரிய பயணமும் முழுமையடையாது என்கிறார் பிபிசியின் சாரா ஜேன். இந்த எல்லை கம்யூனிசமும் முதலாளித்துவமும் சந்திக்கும் இடமாகும்.

''எல்லைப்பகுதி உலகின் மிகவும் ஆபத்தான, அதிகளவு ராணுவமயமாக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும், அந்த இடம் அமைதியாகவும், அழகாகவும் இருக்கிறது'' என்கிறார் ஒரு பயணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்