டோக்லாம்: சீனாவை சமாளிக்கும் பலம் இந்தியாவிற்கு இருக்கிறதா?

  • 31 ஜனவரி 2018
இந்தியா-சீனா படத்தின் காப்புரிமை AFP

இந்தியா-சீனாவின் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோட்டில் உள்ள டோக்லாம் பீடபூமியில் ஏற்பட்ட பதற்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குறைந்தது. பதற்றங்கள் குறைந்தபோதிலும், இந்த நிலப்பரப்பில் இரண்டு நாடுகளும் தொடர்து தங்களது படையினை மேம்படுத்தி வருகின்றன.

இந்தியாவின் சிக்கிம், சீனா மற்றும் பூட்டான் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பீடபூமி அமைந்துள்ளது. இந்த பீடபூமி இப்போது சீனா, பூட்டான் இடையே பிரச்சினைக்குரிய இடமாக உள்ளது. இது தனது இடம் என பூட்டான் உரிமைகோருவதற்கு இந்தியா ஆதரவளிக்கிறது.

டோக்லாம் பீடபூமியை சுற்றி, இந்தியாவும் சீனாவும் கட்டியுள்ள விமான தளங்களை அமெரிக்க புவிசார் அரசியல் உளவுத்துறை கம்பெனியான ஸ்ட்ராட்போரின் படங்கள் காட்டுகின்றன.

''இந்தியாவும், சீனாவும் பரந்தளவிலான போர் தந்திர ஏற்பாடுகளைச் செய்கிறது என்பதை இந்த படங்கள் உறுதிப்படுத்துகின்றன. டோக்லாம் எல்லை பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக செய்யப்பட்ட ஆகஸ்ட் 27 ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்த போர் தந்திர ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன'' என அந்த நிறுவனம் கூறுகிறது.

டோக்லாம் பீடபூமிக்கு நெருக்கமாகத் தனது விமானப்படையை வலுப்படுத்த இந்தியா எவ்வாறு நகர்ந்துள்ளது என்பதை இந்தியாவின் பக்கம் உள்ள சிலிகுரி பாக்தோக்ரா விமான நிலையம் மற்றும் ஹாசிமா விமானப்படை தளத்தின் படங்கள் காட்டுகின்றன.

சிலிகுரி பாக்தோக்ரா விமான நிலையம், பொதுவாகப் போக்குவரத்து ஹெலிகாப்டர்களை கையாளக்கூடியது. மிஜி -27எம்எல் என்ற தரை தாக்குதல் விமானம் 2017-ம் ஆண்டின் இறுதியில் படையில் இருந்து விலக்கிக்கொள்ளும் முன்பு வரை ஹாசிமா தளத்தில் இருந்து இயங்கிக்கொண்டிருந்தது.

2017-ம் ஆண்டின் மத்தியில் டோக்லாம் பிரச்சனை ஏற்பட்டது முதல், இந்திய வான்படையினர் இந்த விமான தளங்களில் சு-30 எம்கேஐ என்ற போர் விமானங்களை நிறுத்துவது பெரிதும் அதிகரித்துள்ளது.

சு-30 எம்கேஐ இந்தியாவின் பிரதான போர் ஜெட் ஆகும். மேம்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையால், தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறனை இது விரைவில் பெறும்.

'பெரிய செயல்பாடு'

சீனாவின் பக்கம், லாசா மற்றும் ஷிகாட்ஸ் விமான தளங்களில் பெரிய அளவிலான செயல்பாடுகள் நடப்பதைப் படங்கள் காட்டுகின்றன என்கிறது ஸ்ட்ராட்போர்.

''இந்த விரிவாக்கம் சீனா செய்துவரும் மேலதிக ஏற்பாடுகளைக் காட்டுகிறது. இந்தியாவைப் போல அல்லாமல், உண்மையான எல்லை கட்டுப்பாடு கோட்டிற்கு அருகில் சீனாவுக்கு குறைவான விமான தளங்களே உள்ளன. இதனால் லாசா மற்றும் ஷிகாட்ஸ் விமான தளங்களில் தனது படை வலிமையை அதிகரிக்கச் சீனா அதிக கவனம் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது`` என்கிறது ஸ்ட்ராட்போர்.

இந்த இரண்டு விமான தளங்களிலும், போர் விமானங்கள் இருப்பதைப் படங்கள் காட்டுகின்றன. ஷிகாட்ஸ் பீஸ் விமான நிலையத்தில் அதிக எண்ணிக்கையிலான ஹெலிகாப்டர்கள், கேஜே-500 ஜெட், சோர் டிராகன் ஆளில்லா விமானங்கள், நீண்ட தூரம் செல்லக்கூடிய விமான ஏவுகணை அமைப்பு ஆகியவை உள்ளன.

டோக்லாம் பிரச்சனை முடிவுக்கு வந்த உடனே ஷிகாட்ஸில் பல விமானப்படை தளங்களை சீனா மேம்படுத்தியுள்ளது. டிசம்பர் மாதம் இங்கு ஒரு புதிய ஓடுதளமும் கட்டப்பட்டுள்ளது.

இந்தியா சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பதற்றம் உள்ளது. 1962-ம் ஆண்டு சீனா உடனான எல்லைப் போரில் இந்தியா தோற்றது.

இரு நாடுகளிலும் முன்னெழும் தேசியவாதமும், நவீனமயமாகி வரும் படைகளை கொண்டிருக்கும் இந்த நாடுகளுக்கு இடையிலான போர்த் தந்திரப் போட்டியும் இந்தப் படை திரட்டலுக்குக் காரணமாக அமைகின்றன.

தீர்க்கப்படாத எல்லை பிரச்சினையே, இந்தியா சீனா இடையிலான பதற்றங்களுக்கு காரணமாக உள்ளது என்பது தெளிவு. எல்லைப் பிரச்சினை காரணமாகவே எதிர்காலத்தில் மோதல் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இது வளர்ந்துவரும் இரு சக்திகளுக்கு இடையிலான புவி சார்-போர்த் தந்திரம் சார் போட்டியையும் இந்த படைதிரட்டல் பிரதிபலிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்