ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

குற்றம் உறுதி

படத்தின் காப்புரிமை MET POLICE

லண்டன் மசுதிக்கு அருகில் கூட்டத்திற்குள் வேனை ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்தியவர் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

48 வயது டேரன் ஓஸ்பான் என்னும் அந்நபர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஃபின்ஸ்பிரி பூங்காவில் மக்கள் கூட்டத்தில் வேன் ஒன்றை ஓட்டிச் சென்றார் அதில் 51 வயது மக்ரம் அலி என்பவர் உயிரிழந்தார் மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

இது ஒரு "தீவிரவாத தாக்குதல்" என தாங்கள் தெளிவாக இருந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 12 வயது மாணவி

படத்தின் காப்புரிமை CBS

லாஸ் ஏஞ்சலஸ் பள்ளி ஒன்றில் இரண்டு பதின்ம வயது மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 12 வயது மாணவி போலிஸாரின் பிடியில் உள்ளதாகவும் அவரின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில், நெற்றியில் சுடப்பட்டு காயமடைந்த 15 வயது மாணவரின் நிலை மோசமாகவும் ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மற்றொரு 15 வயது மாணவிக்கு மணிக்கட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவியின் வயது 12 என லாஸ் ஏஞ்சலஸ் போலிஸார் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா, சீனா குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை Getty Images

லத்தீன் அமெரிக்க பகுதிகளில் அதிகரித்து வரும் சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கத்தால் அப்பிராந்தியத்திற்கு பெரும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

சீனாவின் முதலீட்டு திட்டங்கள் பல்வேறு நாடுகளின் வளங்களை சுரண்டியதுடன், அது சீன மக்களுக்கு மட்டுமே பலனளித்ததாகவும் லத்தீன் அமெரிக்காவுக்கு தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக டெக்சாஸில் பேசிய டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

லத்தீன் அமெரிக்காவுக்கு புதிய ஏகாதிபத்திய வல்லரசுகள் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா சர்வாதிகார ஆட்சிக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதாகக் குற்றஞ்சாட்டியதுடன், இப்பிராந்தியத்தில் அது கண்டுவரும் வளர்ச்சி ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்தார்.

குடியேறிகளுக்கிடையே துப்பாக்கிச் சூடு

படத்தின் காப்புரிமை EPA

பிரான்ஸின் துறைமுக நகரான கலேயில் ஆப்கான் மற்றும் எரிட்ரியா நாட்டவர்க்கு மத்தியில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஐந்து குடியேறிகள் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகியுள்ளனர்

எரிட்ரியாவைச் சேர்ந்த 16-18 வயது மதிக்கத்தக்க நான்கு இளைஞர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு செய்தி முகமை ஒன்று தெரிவித்துள்ளது.

இதில் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்ல போவதாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு மக்களும் உணவிற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தபோது ஆப்கானைச் சேர்ந்த ஒருவர் சுட்டதால் வன்முறை தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு படைகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

செயலிழந்த இரண்டாம் உலக போர் வெடிகுண்டு

படத்தின் காப்புரிமை Getty Images

ஹாங்காங்கில் பரபரப்பான வர்த்தக பகுதியில், கட்டுமான தளம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட "மிகவும் சேதமடைந்த" இரண்டாம் உலக போர் வெடிகுண்டு ஒன்றை ஹாங் காங் போலிஸார் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்துள்ளனர்.

450 கிலோ கிராம் எடை கொண்ட அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய நிபுணர்கள் இரவும் முழுவதும் பணியாற்றியதால் 4000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர் மேலும் தெருக்கள் சுற்றி வளைக்கப்பட்டன.

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இம்மாதிரியான வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :