பாலத்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் இணைந்து வாழும் `சமாதான சோலை` கிராமம்

  • ஜுபைர் அஹமத்,
  • பிபிசி
ஜெருசேலம்

பட மூலாதாரம், Getty Images

ரானா அபு, தனது அடையாளம் குறித்த குழப்பத்தில் இருக்கும், பாலத்தீனத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண். அவர் யூதர்கள் மத்தியில் வளர்ந்தவர். அவர்களை போலவே பழக்க வழக்கங்களை உடையவர். ஆனால், ரானாவை தங்களில் ஒருவர் என்று அவர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை.

ரானாவின் அம்மாவிற்கு ஓர் ஆசை இருந்தது. அது ஓர் எளிய ஆசைதான். புற்று நோயால் பாதிக்கப்பட்டதன்னை யூதர்களின் அடக்கத்தலத்தில் புதைக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. ஆனால், அந்த ஆசையை யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ரானாவின் அம்மாவை அங்கு புதைக்க அனுமதி தர மறுத்துவிட்டார்கள். அதனால், அவரை ஓர் அரபு கிராமத்தில் புதைக்க நேர்ந்தது.

என்னிடம் இது குறித்து பேசிய போது ரானா விருப்பு வெறுப்பு அற்றவராக, ஒரு ஞானியின் மனதுடன் இவ்வாறாக கூறினார், " எனக்கு இந்த விஷயம் கடினமாக இருந்தது.நான் அவர்களில் ஒருவர் என்றுதான் நினைத்தேன். ஆனால், எங்களுக்கு மத்தியில் ஒரு எல்லைக் கோடு உள்ளது என்பது எனக்கு பிறகுதான் புரிந்தது. எங்களால் அந்தக் கோட்டை கடக்க முடியாது. இத்தனை நாள், நான் வளர்ந்த சமூகத்தின் ஒரு பகுதி அல்ல நான் என்பது புரிந்தது."

தனது ஏமாற்றத்தையும் குழப்பத்தையும் ஒரு 75 நிமிட ஆவணப்படத்தில் பதிவு செய்த ரானா, "பாலத்தீனர்கள் எந்த விதத்தில் வேறுபட்டவர்கள்? நாமிருவரும் ஒன்றாக வாழமுடியாதா?" என்றும் யூதர்களை வினவுகிறார்.

தனது கேள்விகளுக்கு இந்த கிராமத்தில் பதில் கிடைக்கும் என்று எண்ணி ரானா இந்த ஆவணப்படத்தை தனித்தன்மை வாய்ந்த ஒரு கிராமத்தில் திரையிட்டார்.

`சமாதான சோலை`

அந்த கிராமம் ஹீப்ரு மொழியில் நிவே ஷலோம் என்றும் அரபு மொழியில் வஹத் அல் சலாம் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு மொழியிலும் அதன் பொருள் ஒன்றுதான். அதற்கு ’சமாதான சோலை’ என்று அர்த்தம்.

யூதர்களும், அரேபியர்களும் நெருக்கமாக ஒற்றுமையாக வாழும் இஸ்ரேலின் ஒரே பகுதி இது.

"ஒத்த சிந்தனை உடைய அரேபியர்களும், இஸ்ரேலியர்களும் ஒரு பகுதிக்கு சென்று ஒற்றுமையாக வாழ முடிவு செய்தோம். 1974 ஆம் ஆண்டு நான்கு குடும்பங்கள் சேர்ந்து இந்த கிராமத்தை உருவாக்கினர். இன்று நாங்கள் 70 குடும்பங்கள் இங்கு வசிக்கிறோம். 34 குடும்பங்கள் இங்கு வருவதற்கான காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றன." என்று இந்த கிராமத்தை நிறுவியவர்களில் ஒருவரான யூதர் நவா தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

ஜெர்மனியின் யூத இன அழிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் நவாவின் தாத்தாவும் பாட்டியும். 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பின், நவாவின் பெற்றோர் இஸ்ரேலில் குடியேறினர். நவா தன் வாழ்க்கையை இந்த இரண்டு வெவ்வேறு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பணிக்காக அர்பணித்துள்ளார்.

இஸ்ரேலில் வாழும் மக்களில் 20 சதவீதத்தினர் பாலத்தீன அரேபியர்கள். வடக்கு கரையிலும், காஸாவிலும் வாழும் 4.5 மில்லியன் மக்கள் இந்தக் கணக்கில் வர மாட்டார்கள்.

இந்த இரண்டு தரப்பினரும் தனித்துவமான தங்களது பிரதேசத்தில் வசிக்கிறார்கள். இரண்டு தரப்பினரின் கிராமங்களும், நகரங்களும் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவர்களுக்குள்ளான உரையாடல்களும் குறைவாகதான் இருக்கிறது. அவர்களுக்குள் ஆழமான அவநம்பிக்கை நிலவுகிறது.

இஸ்ரேலில் ஜெருசேலம் மற்றும் டெல்க் அவிவ் நகரங்களுக்கு இடையே உள்ள ஒரு மலையின் உச்சியில் உள்ள நிவே ஷலோம் அல்லது வாஹத் அல் சலாம் கிராமம் இந்த அவநம்பிக்கையை, இந்த பிரிவினையை வென்று வந்திருக்கிறது.

வெறுப்பிற்கு வேலை இல்லை

"இங்கு வெறுப்பிற்கு வேலை இல்லை. மதத்தின் பெயரால் இரு சமூகத்திற்கு இடையே வெறுப்பை ஊக்குவிக்கும் சக்திகளுக்கும் இடமில்லை" என்கிறார்கள் இங்கு வசிக்கும் மக்கள்.

மத்திய கிழக்கில் சிறு வயதிலேயே இளைஞர்கள் மனித வெடிகுண்டுகளாக மாறுகிறார்கள். பருவ வயதில் துப்பாக்கி ஏந்தவும் செய்கிறார்கள். ஆனால், இந்த கிராமத்தில் அரபு மற்றும் இஸ்ரேலிய குழந்தைகளுக்கு, அங்கு உள்ள தொடக்கப் பள்ளியில் அமைதி வழியில் ஜனநாயகத்தில் போராடுவது எப்படி என்று போதிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகளுக்கு போராட்டம், ஆர்ப்பாட்டம் குறித்து கற்பிப்பது நல்லதா?

"அவலமான உண்மை இதுதான். ஆக்கிரமிப்புக்கு எதிராக அமைதியான வழியில் போராடுவதன் மூலம் எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பதை நாங்கள் கற்று தருகிறோம்." என்கிறார் அந்த கிராமத்தில் வசிக்கும் பாலத்தீனர் சமா சலைமி.

அமைதியை பரவலாக்குவதுதான் இந்த கிராமத்தின் குறிக்கோள் என்று கூறும் அவர், நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதன் மூலம், இஸ்ரேலியர்களும் பாலத்தீனியர்களும் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை காட்டுகிறோம் என்கிறார்.

தங்களது இந்த ஒற்றுமை முயற்சி நல்ல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக நவா கூறுகிறார். "எங்களது இந்த ஒற்றுமை பிரசாரம் 70,000 மக்களை சென்றடைந்திருக்கிறது. அவர்கள் அமைதியை நம்புகிறார்கள்."

அதே நேரம் தங்கள் உறவில் சில சமயம் ஏற்ற இறக்கம் நிகழ்கிறது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். பல நேரம் தங்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுவதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.

"எங்களுக்கிடையேயான சந்திப்புகள் சில சமயம் உக்கிரமானதாக இருக்கும். கருத்து வேற்றுமையால் உரையாடல்களில் அதிக சத்தம் நிலவும். ஆனால், யாரும் அறையை விட்டு செல்ல மாட்டார்கள்." என்கிறார் சமா சலைமி.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் இந்த கிராமத்தை தங்களது ஆய்வு தலைப்பாக எடுத்துக் கொள்கிறார்கள்.

இரு தரப்பும் சேர்ந்து வசிக்க இயலும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இந்த மக்கள்காட்டிவிட்டார்கள். ஆனால், இரண்டு சமூகத்தையும் நெருக்கமாக்கும் சிறு முயற்சியாகவே இது இருக்கிறது. இரு தரப்பையும் சேர்ந்த பெரும்பான்மையான மக்களிடம் பூசல்கள்தான் நிலவுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :