பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

  • ஷுமைலா ஜாஃபிரி
  • பிபிசி
'கொடியில் வெள்ளை`

ராவல்பிண்டி பாப்ரா பஜாரின் குறுகிய சந்துக்கள் அனைத்தும் வரலாற்றின் சுவடுகளையும் அதன் அழகியலையும் தாங்கி நிற்கின்றன. அந்த தெருக்கள் எங்கும் நிறைந்து இருக்கும் பழமை வாய்ந்த கட்டடங்கள் வரலாற்றின் கதைகளை விவரிக்கின்றன.

இது அனைத்தையும் பொறுமையாக பார்த்தபடி, அது சொல்லும் கதைகளை உள்வாங்கியபடியே கையில் புகைப்பட கருவியுடனும், முதுகில் பையுடன் பொறுமையாக சென்றுக் கொண்டிருக்கிறார் புகைப்படக் கலைஞர் மொபீன் அன்சாரி.

`இதயத்தின் குரல் `

மொபீன், இந்த நகரத்தில்தான் 1986 ஆம் ஆண்டு பிறந்தவர்.

அவர் பிறந்து மூன்று வாரங்களில், தீவிரமான மூளைகாய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் கேட்கும் திறனை அவர் இழந்தார்.

ஆனால், செவித்திறன் பாதிக்கப்பட்டது தன்னை எந்த விதத்திலும் தடுத்து நிறுத்தவில்லை என்கிறார் மொபீன்.

அவர் சொல்கிறார், "சொல்லப்போனால், செவித்திறன் பாதிக்கப்பட்டது என் வாழ்க்கையிலும், என் தொழிலும் நேர்மறையான தாக்கத்தைதான் ஏற்படுத்தியது. கேட்கும் திறனை இழந்ததால் நான் பார்க்கும் ஒவ்வொரு பொருட்களிலும் அதிக கவனத்தை குவிக்க தொடங்கினேன். புகைப்படக்கலைஞன் ஆனேன்" என்கிறார்.

புகைப்படக்கலை என்பது எனக்கு என் இதயத்தின் குரல் என்கிறார் மொபீன் அன்சாரி.

'கொடியில் வெள்ளை`

சில மாதங்களுக்கு முன் மொபீன் பாகிஸ்தானில், 'கொடியில் வெள்ளை` (White in the Flag) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்திற்குப் பின் ஏழாண்டுகால உழைப்பு இருக்கிறது. அவரின் மேற்கொண்ட நீண்ட பயணங்கள்தான் இந்த புத்தகமாக உருமாறி இருக்கிறது.

இந்த புத்தகம் முழுவதும் புகைப்படங்கள் நிறைந்து இருக்கின்றன. அந்தப் புகைப்படங்கள் பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை மக்களின் கொண்டாட்டங்களை, விழாக்களை ரத்தமும் சதையுமான அவர்களது வாழ்வை விவரிக்கிறது.

அவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவரிடம், `எது உங்களை பாகிஸ்தான் சிறுபான்மை மக்களின் வாழ்வை பதிவு செய்ய தூண்டியது?' என்று கேட்டேன். அதற்கு அவர், "என் வாழ்நாள் முழுவதும் எனக்கிருந்த ஒரே ஒரு நெருக்கமான தோழர் என் பாட்டிதான். அவர் ஒரு பார்சி. என் அப்பாவுடைய நெருங்கிய நண்பர் ஒரு கிறிஸ்தவர். பல ஆண்டுகளுக்கு முன் என் அப்பா காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தபோது, அவருக்கு ரத்தம் கொடுத்து அவரது வாழ்வை காப்பாற்றியது என் அப்பாவின் நெருங்கிய நண்பர்தான். இயல்பாகவே அந்த சிறுபான்மை மக்களுடன் ஏற்பட்ட நெருக்கம் அவர்களின் வாழ்வை பதிவு செய்ய என்னை தூண்டியது" என்கிறார் மொபீன்.

மேலும் அவர், "என் நரம்புகளில் ஓடும் ரத்தத்தின் நிறமும், உங்கள் நரம்புகளில் ஓடும் ரத்தத்தின் நிறமும் ஒன்றுதானே." என்கிறார்.

இந்த முயற்சியல் அவருக்கு கிடைத்த பாடங்கள் அனைத்தும் அலாதியானது. அவர் சொல்கிறார், "நான் பல சுவாரஸ்யமான விஷயங்களை இந்தப் பயணத்தின் போது கண்டடைந்தேன். கராச்சி பஜாரில் உள்ள ஒரு இந்து கோயில், வருண்தேவ் கோயில் என பார்த்த விஷயங்கள் அனைத்தும் என்னை ஆச்சர்யமடைய வைத்தது. அதுவெல்லாம் பாகிஸ்தானில் இன்னும் இருக்கிறது என்பதே எனக்கு தெரியாது." என்று விவரிக்கிறார்.

இவரின் இன்னொரு சுவாரஸ்யமான கண்டுப்பிடிப்பு கரச்சியில் உள்ள யூத அடக்கத்தலம். அந்த மயானத்தில் உள்ள நடுகல்களில் ஆங்கிலம், ஹீப்ரூ மற்றும் மராத்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் எழுத்துகள் செதுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த மயானம் இந்த நகரத்தின் வரலாற்றை சொல்லும் உறுதியான சாட்சியங்களில் ஒன்று. ஆனால், பிரிவினைக்குப் பின், இங்கு ஒரு காலத்தில் சிறிய அளவில் யூத மக்கள் வசித்தார்கள். ஆனால், காலப்போக்கில் அவர்கள் எல்லாம் வேறெங்கோ சென்றுவிட்டார்கள். இப்போது யாரும் இங்கு இல்லை.

கலாச்சார ஒற்றுமை

வெவ்வேறு சிறுபான்மை சமூகத்திடம் இருக்கும் கலாச்சார ஒற்றுமைகளை தமது புகைப்படங்கள் மூலம் விவரிக்கிறார் மொபீன்.

கராச்சியில் மொபீன் பார்சி மக்கள் ஒருங்கிணைத்த நீர் திருவிழாவில் கலந்துக் கொண்டார். அந்த திருவிழாவில் பார்சி மக்கள் பூக்கள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றை கடலில் தூவி, கடலை மரியாதையுடன் வணங்கினர். சில நாட்களுக்கு பின் அரபி கடலில் இருக்கும் லஷ்மி கோவிலை பார்வையிட்டபோது, அங்கும் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் தினமும் கடலில் பூக்கள், பழங்கள் ஆகியவற்றை தூவுவதை பார்த்தார். இரு வெவ்வேறு சமூகத்தின் பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரி இருப்பதை கண்டு வியப்படைந்தார். இதனை தனது புகைப்படக் கருவி மூலம் பதிவு செய்யவும் செய்தார்.

மொபீன் ஜோரோஸ்ட்ரிய திருவிழாவையும், பாபா குரு நானக் தேவ் ஜெயந்தியையும் இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

பாகிஸ்தானிய கொடியில் இருக்கும் வெள்ளை நிறம் பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை மக்களை குறிக்கிறது என்பதை மக்கள் நினைவுப்படுத்த விரும்பினேன் என்கிறார். வெள்ளை நிறம், பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை மக்களை பிரதிந்தித்துவப்படுத்துவது மட்டுமல்லாம, அவர்களின் முக்கியத்துவத்தையும் நினைவுப்படுத்துகிறது என்கிறார்.

இந்த புத்தகத்திற்காக புகைப்படம் எடுக்க மொபீன் கெலாஷ் பள்ளதாக்கிற்கு பயணம் செய்தார். முந்தைய காலங்களில், இந்த இடம் `காஃபிரிஸ்தான்` என்று அழைக்கப்பட்டது. அதன் பொருள் நம்பிக்கையற்றவர்களின் நிலம். கெலாஷ் பள்ளதாக்கில் வாழும் மக்களிடம் உள்ள பழக்க வழக்கங்கள், சமயம், கலச்சாரம் அனைத்தும் பாகிஸ்தான் பெரும்பான்மை மக்களிடமிருந்து வேறுபட்டது. தனித்துவம் வாய்ந்தது. அவர்களின் தனித்துவமான பாரம்பரிய வாழ்க்கை முறைகளுக்காக அவர்கள் அறியப்படுகிறார்கள். இது அனைத்தையும் தனது புத்தகத்தில் புகைப்படங்களாக பதிவு செய்திருக்கிறார் மொபீன். குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு கெலாஷ் மக்களின் புகைப்படங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் எங்கும் உள்ள சிறுபான்மை மக்கள் மொபீனை மனப்பூர்வமாக வரவேற்று தங்களது கதையை பகிர்ந்திருக்கிறார்கள்.

சிரித்துக் கொண்டே மொபீன் சொல்கிறார், "நான் செவித்திறன் அற்றவன் என்பதால், மக்கள் என்னை நம்பி இருக்கிறார்கள். அவர்களது வாழ்வை எட்டிப்பார்க்க அனுமதித்து இருக்கிறார்கள். என்னுடைய உடல் குறைப்பாடுதான் என் பலமாக மாறியது" என்கிறார்.

முழுமை அடையாது

பாகிஸ்தான் என்பது இஸ்லாமியர்களை மட்டும் கொண்ட நாடல்ல. வெவ்வெறு கலாச்சாரம், மதக் குழுக்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் பாகிஸ்தான் முழுமை அடையாது என்பதைதான் `கொடியில் வெள்ளை` புத்தகத்தின் மூலம் பாகிஸ்தான் மக்களுக்கு மொபீன் கூற விரும்புகிறார்.

நான் இந்த நாட்டின் பன்மைத்துவத்தை கொண்டாட விரும்புகிறேன். பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு என்னுடைய எளிய அர்ப்பணிப்புதான் இந்தப் புத்தகம் என்கிறார் மொபீன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :