ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்த அமெரிக்க பங்குச்சந்தை

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

டவ் ஜோன்ஸின் மதிப்பில் கடும் வீழ்ச்சி

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க தொழில்துறை குறியீடான டவ் ஜோன்ஸின் மதிப்பு திங்கட்கிழமை ஒரேநாளில் மட்டும் 1,175 புள்ளிகளை இழந்துள்ளது. இதன் தாக்கம் ஒட்டுமொத்த அமெரிக்க பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்போது 777.68 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததே மோசமானதாக கருதப்பட்ட சூழ்நிலையில் இப்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கட்டுப்படுத்த வெள்ளைமாளிகை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிகரிக்கும் அதிபர் மீதான அழுத்தம்

படத்தின் காப்புரிமை Reuters

தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பதவி விலகக்கோரி அதிகரித்து வரும் அழுத்தத்தின் காரணமாக அந்நாட்டை ஆளும் கட்சி தனது உயர்மட்ட குழு வரும் புதன்கிழமை கூடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்போதைய அதிபரான ஜுமா மற்றும் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராமபோசா ஆகியோருக்கிடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய "மேலாண்மை மாற்றம்" குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாக ஏஎன்சி கட்சி தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் சென்ற கூகுள்-உபேர் நிறுவனங்கள்

படத்தின் காப்புரிமை Reuters

ஓட்டுநரில்லா தானியங்கி கார் துறையில் முன்னணியில் இருக்கும் உபேர் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கிடையேயான வழக்கொன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

கூகுளின் துணை நிறுவனங்களுள் ஒன்றான வேமோ, உபேர் நிறுவனம் தனது தொழில்நுட்ப ரகசியத்தை திருடியுள்ளதாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டு மீதான விசாரணை சான்பிரான்சிஸ்கோவிலுள்ள நீதிமன்றத்தில் துவங்கியுள்ளது.

நீதிமன்றத்தில் வாய் திறக்க மறுத்த குற்றவாளி

படத்தின் காப்புரிமை AFP/Getty

2015 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் எஞ்சியிருக்கும் ஒரே சந்தேகநபர் பெல்ஜிய நீதிமன்றத்தில் பேசுவதற்கு மறுத்துவிட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு குறித்த விசாரணை திங்கட்கிழமை தொடங்கியது.

"என்னுடைய அமைதி என்னை குற்றவாளியாக்காது, அது எனக்கு பாதுகாப்பே" என்று சலாஹ் அப்டேஸ்லாம் நீதிபதிகளிடம் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :